இலங்கையில் பௌத்தமயமாக்கலை எதிர்த்து இந்துமக்கள் கட்சியின் சார்பில் கடந்த 23-09- 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், ஈழ கவிஞர் காசி. ஆனந்தன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக-அரசியல் விமர்சகர் திரு. யோ தனது முகநூல் பதிவில்,  “தமிழ்தேசியம் என்ற போர்வையில் பழ.நெடுமாறன் செய்து வருவதெல்லாம் தனது இருப்பை தக்க வைத்தலும், தன்னை முன்னிறுத்தலும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் அவர் நடத்திய பல நாடகக்காட்சிகள் அதை வெளிப்படையாக்கியது. தற்போது இனையம் கடற்கரையில் துறைமுகம் அமைக்க பா.ஜ.கவுக்கு வால்பிடிக்கிற இந்த ஆசாமியின் விளக்கங்கள் அபத்தத்திலும் அபத்தமானவை.

ஈழத்தமிழர்களை இந்தியா காப்பாற்றும் என்று நம்பவைத்து அனைவரையும் புதைகுழிக்கு அனுப்பியதில் பழ.நெடுமாறனுக்கு பங்குண்டு. தன்னை ஈழத்தின் தமிழக authorityயாக காட்டிக்கொள்ளுகிற இந்த நபர் காலாவதியான நம்பிக்கைகள், கொள்கைகளின் தொகுப்பு. இன்று தனது பிழைப்பிற்காக இனையம் துறைமுக ஆதரவு என்கிற நிலைபாட்டை எடுத்துள்ள இந்த நபர் அதற்கும் ஈழத்தை தொடர்புபடுத்தி எழுதுவது தனக்கு ஆள்சேர்க்கிற தந்திர முயற்சியில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களை தன்னை நோக்கி திரும்ப எடுக்கிற இந்த தந்திரம் புதுடில்லி அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு கடலோர கிராமங்களையும், மக்களையும், குமரிமாவட்டத்தையும் மொத்தமாக இந்திய தேசியத்தின் காலடியில் பலியிடும் நோக்கமுள்ளது. இதுதான் நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்துவது” என்கிறார்.

மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ், தமிழ் தேசியம் பேசுகிறவர்களு இந்துத்துவ அமைப்புகளுடன் இணைவதை தாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார்.

சமூக-அரசியல் விமர்சகர் வில்லவன் இராமதாஸ், இந்துத்துவ – தமிழ் தேசிய கூட்டணியை பகடி செய்திருக்கிறார்.