சமீபத்தில் நடந்த இந்து மக்கள் கட்சி நடத்திய ஈழத்தமிழர் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழர் தேசிய கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன் கலந்துகொண்டார். இதுகுறித்து எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூலில் தமிழ்தேசியம் இந்துத்துவத்துடன் கைக்கோர்க்கும் என அப்போதே சொன்னதாக பதிவு செய்திருந்தார். அது விவாதப்பொருளானது. இந்நிலையில் தமிழ் தேசியர்களுக்கு சில கேள்விகள் என்ற புதிய பதிவொன்றை தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். அவருடை பதிவில்,

“தமிழ்த் தேசியத்தின் இந்துத்துவத் தொடர்புகள் பற்றிய என் பதிவிற்குச் சில தமிழ்த் தேசியர்களிடமிருந்து வந்துள்ள பதிவுகளைப் பார்த்தேன்.

தமிழ்த் தேசியம் குறித்து நான் இந்த மூன்று வரிப் பதிவுகளை மட்டும்தான் செய்துள்ளேன் என்பதில்லை. ‘நிறப்பிரிகை’ காலந்தொட்டு தமிழ்த் தேசியத்தின் வரலாற்றை நான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

தேசியம் என்பது அதை வரையறுப்பவர்களின் கண்ணோட்டத்திலிருந்தே கட்டமைக்கப்படுகிறது. யார் இந்த வரையறையில் உள்ளடக்கப்படுகிறார்கள், யார் வெளியேற்றப்படுகிறார்கள்: வேறு வார்த்தைகளில் சொல்வதானால் “we” என்பது யார், “other” என்பது யார் என்பன முக்கியம்.

அந்த வகையில் இங்கு கட்டமைக்கப்பட்டதில் ம.பொ.சி வழி வந்தோர் கட்டமைத்த தேசியத்தையும், பெரியார் / பெருஞ்சித்திரனார் வழி வந்தோரின் தேசியத்தையும் நான் தொடர்ந்து வேறுபடுத்திக் காட்டி வருகிறேன்..

1980 களில் நெடுமாறன் முதலியோர் தஞ்சையில் கூட்டிய மாநாடொன்று தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அந்த மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கண்காட்சி எவ்வாறு இந்து -சைவ – வேளாள அடையாளங்களுடன் இருந்தது என்பதையும் இது மிகவும் தவறான போக்கு என்பதையும் அப்போதே சுட்டிக் காட்டியுள்ளேன்.

இலங்கையில் இப்படி தமிழ்த் தேசியம் இந்து – சைவ அடையாளத்துடன் கட்டமைக்கப்படும் போக்கு மரவன்புலவுக்கரரோடு தொடங்கியதல்ல. ஈழத் தமிழ்த் தேசியத்தின் அடித்தளம் தொடக்கம் முதலே இப்படித்தான் என்பதையும் அதனால் ஏற்பட்ட இரு விளைவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளேன். அது :

1) ஈழத்துப் பஞ்சமர்கள் 2) தமிழை மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட ஈழத்து முஸ்லிம்கள் ஆகியோர் இந்தத் தேசியத்திலிருந்து அந்நியப்பட்டதற்கு இவர்களின் இந்து சைவ வேளாளத் தேசிய வரையறை எப்படிக் காரணமாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

தோடர்ந்து ஈழ ஆயுதப் போராட்டத்தில் யாழ்ப்பாணத்தின் பூர்வீகத் தமிழர்களின் ஒரு பகுதியினர், அவர்கள் முஸ்லிம்கள் என்கிற காரணத்தினாலேயே இனச்சுத்திகரிப்புக்கு ஆளாக்கப்பட்டபோதும் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டபோதும் நான் அவற்றை வெளிப்படையாகக் கண்டித்தேன். முன்னதாக நான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதாக எழுத்து வடிவில் குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கட்சி என்னை கட்சி நீக்கம் செய்திருந்தது. இப்போது விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்னை ஈழப் போராட்டத்தை எதிர்ப்பவன் எனக் குற்றம்சாட்டத் தொடங்கினார்கள். ஆனாலும் என் மனதிற்குட்பட்ட உண்மைகளை அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தில் சாதி / பார்ப்பன எதிர்ப்பை முதன்மைப்படுத்திய தேசியத்தை மறுத்த தமிழ்த் தேசியப் போக்கு இதை ஒட்டி தீவிரமடைந்தது. இங்கு 300 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் அருந்ததியர் உள்ளிட்ட மொழிச் சிறுபான்மையினரை விலக்கி பார்ப்பனரை உள்ளடக்கி (அதன் மூலம் சாதீயத்தையும் உள்ளடக்கிய) ம.பொ.சி பிராண்ட் தமிழ்த் தேசியம் பெங்களூர் குணா போன்றோரால் இங்கே மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. அப்போதும் இது மிகவும் ஆபத்தான போக்கு என்கிற என் குரல் தனித்து ஒலித்தது. இந்த ம.பொ.சி குணா வகைத் தேசியம் இன்று பெ.மணியரசன் போன்றோரால் தூக்கிச் சுமக்கப்படும் ஆபத்தை வருத்தத்தோடு சுட்டிக் காட்டியுள்ளேன்.

இன்னொரு பக்கம் முப்பாட்டன் முருகன் என்றெல்லாம் ஒரு வகையில் அபத்தமாகவும் இன்னொரு பக்கம் ஆபத்தாகவும் பேசி தமிழ்த்தேசியத்தை வெளிப்படையாக இந்துத்துவ அடையாளத்துடன் கட்டமைக்கும் சீமான்களின் விஷமத் தேசியத்தையும் அடையாளம் காட்டி வருகிறேன்.

# # #

நான் தமிழ்த் தேசியத்தைக் குறை சொல்லிவிட்டேன் எனவும், அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள் எனவும் சொல்லி என்னைக் காய்ந்து பதிவிட்டவர்கள் குறித்து நண்பர்கள் கீழ்க்கண்ட அம்சங்களைக் கவனிக்க வேண்டுகிறேன்.

1. நான் இந்தப் பதிவைச் செய்யும் முன் இவர்கள் என் மீது காட்டிய ஆவேசத்தை அந்தக் கூட்டத்தில் அர்ஜுன் சம்பத் துடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட நெடுமாறன், காசி ஆனந்தன் வகையறாக்கள் மீது காட்டினார்களா? இதற்காக இவர்கள் அவர்களை விமர்சித்தார்களா? இப்போது தாண்டவமாடும் அவர்கள் அப்போது எங்கு போனார்கள். இப்படி நெடுமாறன் முதலானோர் இந்துத்துவவாதிகளுடன் மேடையைப் பகிர்வது இது முதல் முறை அல்ல. எப்போதாவது அவர்கள் இதற்காக நெடுமாறன் முதலானோரைக் கண்டித்துள்ளனரா?

2. இப்போது கூட அவர்கள் நெடுமாறனையோ இல்லை ஆனந்தன் போன்றோரையோ கண்டிக்கிறார்களா? என்ன தளுக்காக அவர்களை விலக்கி என் மீது கோபத்தைத் திருப்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

# # #

இறுதியாக,

ஏதோ நெடுமாறன், ஆனந்தன் ஆகிய இருவர் மட்டுமே இப்படி எனவும் மற்ற தமிழ்த் தேசியர்கள் எல்லோரும் உத்தமர்கள் எனவும் சொல்கிறவர்களின் கவனத்திற்குச் சில:

1. “இந்தத் தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் வடவராம் அம்பேத்கரைத் தலைவராக ஏற்று அவருக்குச் சிலைகளை அமைத்துச் சாதிச் சண்டைகளுக்கு வித்திடுகிறார்களே” எனவும்,

“அருந்ததியர்கள் தமிழர்கள் அல்ல. அவர்களுக்குத் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது” எனவும்

சொன்னவர்கள் யாராம்? அவர்கள் தமிழ்த் தேசியர்கள் இல்லையா? அவர்களை இவர்கள் கண்டித்துள்ளார்களா?

2. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் எனச் சொல்லி இந்துத்துவவாதிகளையும் பாஜகவினரையும் இந்தத் தமிழ்த் தேசியர்கள் மேடைகளில் ஏற்றிய போதெல்லாம் இவர்கள் முகஞ்சுளித்ததுண்டா?

3. நந்தனை எரித்த, தீண்டாமைக் கொடுமை மிக்க, பெண்கள் கட்டாயமாகத் தேவரடியார்கள் ஆக்கப்பட்ட, பார்ப்பனக் கல்வியும், வடமொழியும் கோலோச்சிய சோழர் காலத்தைப் பொற்காலம் எனவும், ராஜராஜனைத் தமிழ்த் தேசியத் திரு உரு எனவும், அவனது கொடூரமான நிலவுடைமை ஆட்சியை தமிழர்களின் காணியா…………….ட்சி முறை எனவும் போற்றி தஞ்சைப் பெரிய கோவிலின் 1000 ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு மலர் வெளியிட்டார்களே அவர்கள் தமிழ்த் தேசியர்கள் இல்லையா? அப்போது இப்போது என்னைக் காயும் இவர்கள் ஏதேனும் முனகவாவது செய்தார்களா?

இன்னும் நிறையக் கேள்விகள் உண்டு தோழர்களே, இன்னும் நிறையக் கேள்விகள் உண்டு என்னிடம்…

இறுதியாக ஒன்று மட்டும்..

இவர்கள், “அப்படியெல்லாம் இல்லாத தமிழ்த் தேசியர்களும் உண்டு” என ரொம்பக் கஷ்டப்பட்டு சுண்டு விரலை மடக்கி ஒண்ணு, ரெண்டு … என எண்ணத் தொடங்குகிறார்களே, அந்த “நல்ல தமிழ்த் தேசியர்கள்” யாராவது இந்த இந்து அடையாளத்துடன் கூடிய தமிழ்த் தேசியத்தை இதுவரை கண்டித்திருக்கிறார்களா? இப்படி அர்ஜுன் சம்பத்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டவர்களுடன் நாங்கள் மேடை ஏறமாட்டோம் எனச் சொல்லியுள்ளனரா? ஈழத் தமிழ்த் தேசியத்தில் தொடக்கம் முதல் கலந்து போன வெள்ளாள சாதியத்தைக் களைந்து அனைத்துத் தமிழர்களையும் ஓரணியில் திரட்ட வேண்டும் என்கிற அம்சத்திற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்களா?

சொல்லுங்கள் நண்பர்களே சொல்லுங்கள்..

தேசிய உணர்வுக்கு நான் எதிரானவன் அல்ல. அது அனைவரையும் உள்ளடக்க வேண்டும். இந்த அம்சத்தில் கள்ள மவுனம் சாதிக்கும் தேசியம் மிகவும் ஆபத்தானது.

இவர்கள் என்னிடம் சீறுவதைச் சற்றே ஒத்தி வைத்துவிட்டு அய்யா நெடுமாறனிடமும், உணர்ச்சிக் கவிஞரிடமும் அவர்களின் சீற்றத்தைக் கொஞ்சம் காட்டட்டும்.