அருண் நெடுஞ்செழியன்

காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது,சரி …உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?என்ற தலைப்பிலான திரு சமஸின் தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனம்…

திரு சமஸ் கட்டுரையின் ஒட்டுமொத்த சாரத்தை தொகுத்தோமென்றால் //காவிரி நதி நீர் உரிமையை நீதிமன்றங்களில் வழக்காடி தீர்த்துக்கொள்ள முடியாது,அவ்வாறு பெற்றாலும் அதில் வரலாற்று நியாயம் வேண்டும்.நமக்கான தண்ணீர் வேண்டும் என்று கோருவதற்கான வரலாற்று நியாயம் என்ன?அப்படி கோருவது ஆதிக்க வரலாறு,ஆதிக்க நியாயம் என்கிறார்.தீர்வாக மாநிலத்தில் முறையாக நீர் மேலாண்மையை கையாள வேண்டும் // என முன்னுரைக்கிறார்.

திரு சமஸின் புரிதல் கோளாறின் தொடக்கப் புள்ளியாக இருப்பது வரலாறு, அரசியல், சூழலியல் குறித்த அவரது அரைகுறை ஞானமாகும். இம்மூன்றையும் சிக்கலான வகையில் குழப்பிக்கொண்டு கதம்பத்தனமாக முடிவை அறிவிப்பது அவரது கட்டுரைப் பாணியாக உள்ளது. ஒருவகையில் அரசியலையும் ஆன்மிகத்தையும் சிக்கலான வகையில் இணைத்த காந்தியை ஆதர்ஷமாக கொண்டதால் திரு சமசுக்கு இந்தக் கோளாறு வந்ததா எனத் தெரியவில்லை. அது எவ்வாறாயினும் சமசின் ஊடாக இந்துவும் தனது காவிரி உரிமை மீதான தனது நிலைப்பாட்டை வெளிப்படத்தியுள்ளது.

தமிழக ஆறுகளின் நடக்கிற ஆற்றுமணல் கொள்ளைகள்,நீராதார மேலாண்மையின் புறக்கணிப்புகள், நீர் பயன்பாட்டில் சிக்கனம்,மாற்றுப் பயிர் பயன்பாடு குறித்து விவாதங்களும் முன்னெடுப்புகளும் புறக்கணிக்க முடியாதவை. மறுக்கவியலாதவையும்கூட. மாறாக, ஆயிராமாயிரம் ஆண்டுகளாக மொழிவாரி மாகணங்கள் பிரிப்பதற்கு முன்பான காலம்தொட்டு, காலனிய காலத்திற்கு முன்பாக, ஒன்றுபட்ட இந்திய வரைபடத்தில் வராத காலம்தொட்டு தமிழகத்தின் டெல்ட்டாவை பொன்விளைகிற பூமியாக மாற்றிய காவிரி நீர்வளம் மீதான மரபு ரீதியான வாராற்று பயன்பாட்டை மாநில அரசுகளின் எல்லைக்கோடுகளாலும் பசகாவின் அரசியல் ஆதாயத்திற்காக விட்டுக்கொடுப்பது எவ்வாறு ஆதிக்க நியாயம் ஆகும் சமஸ் அவர்களே?எது ஆதிக்க நியாயம்? தமிழகத்தின் மரபுரிமையை மறுக்கிற தடை கோருகிற கர்நாடாக அரசும்,மத்திய அரசு செய்வது ஆதிக்கமா?அல்லது ஆயிரமாயிரம் ஆண்டாக பெற்று வருகிற நீரைக் கோருவது ஆதிக்க நியாயமா?

தலைகீழான விளக்கத்தின் ஊடாக ஆதிக்க நியாயம் கற்பிக்க முனைகிற உங்களின் சிந்தனை முறையில்தான் ஆதிக்கம் உள்ளது.கோளாறு உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரிப் பாசனப் பரப்பில் கரும்பு போன்ற பணப்பயிர்கள் பயிரிடுவதையும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலையில், காட்டை அழித்து காபித்தோட்டங்கள் அமைத்ததும், காவிரியின் குறுக்காக பல நீர்மின் திட்டங்கள் மற்றும் சிறு அணைகளை கர்நாடக மாநில அரசு அமைத்ததெலாம் கர்நாடக அரசின் ஆதிக்கமாகத் தெரியவில்லையா? தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது, தடை விதிக் வேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் நிலைப்பாடு ஆதிக்கமாகத் தெரியவில்லையா?

சரி உங்கள் கூற்றுப் படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழகத்தில் இடமில்லை என்ற மத்திய பாஜக அரசின் செயலுக்கு தமிழகத்தில் கண்டனம் எழுந்தாலும் அதை தமிழகத்தின் ஆதிக்கம் என்பீர்களா?

நிலவுகிற அமைப்பானது அழுகிப் போன தாராள ஜனநாயக அமைப்பாக இருந்தாலும் அது வழங்கவேண்டிய குறைந்த பட்ச உரிமையையும் நீதிகளையும் பெறுவதற்கு போராடவேண்டும். மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை சட்டப்பூர்வமாகவும் அதற்கு வெளியிலும் எதிர்க்கவேண்டும். அரசியல் அம்பலப் படுத்தல்கள் மேற்கொள்ளவேண்டும். இதை செய்தால் அதையும் ஆதிக்கத்திற்கான அரசியல் என்பீர்களா சமஸ் அவர்களே?

இரு நிலங்களாக,இரு வேறு அரசுகளாக பிளவுப்படுள்ள தேசங்களுக்கு இடையில் அல்லது மாநிலங்களுக்கு இடையில் சிக்கல் இல்லாமல் அதேசமயம் அறிவியல் பூர்வமாக நதி நீரை பங்கிகிட்டுக் கொள்வதற்கான சிறப்பான ஆவணங்கள் விதிமுறைகளை ஐக்கிய ஒன்றிய மையம் வகுத்துள்ளது.அதில் சிறப்பான விதிமுறைகளை கொண்டுள்ள ஹெல்சிங்கி (HILSINKI, 1992) சர்வதேச நீர்பங்கீட்டு முறைகளை இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப ஆய்வு செய்து நடைமுறை செய்தாலே போதுமானது.இதை செய்யாத, மக்கள் நல அரசு என சொல்லிக்கொள்கிற, தேசிய இனங்களை பலவந்தமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இந்திய அரசை மக்களிடம் அம்பலப்படுத்தவேண்டும் !மேலும் தேசிய இனங்களுக்கு இடையிலான மோதல் என்பது,மையப்படுத்தப்பட்ட தனது அரசுக்கு எதிராக திரும்பாத வகையில், இதை மறைமுகமாக ஊக்குவிக்கிற மைய அரசின் திரை மறை தந்திரத்தை அம்பலப்படுத்தவேண்டும்

இதை செய்யாத லிபரல் ஜனநாயக அரசின் அயோக்கியத்தனம் உங்களுக்கு ஆதிக்கமாக தெரியவில்லையா? மக்கள் மீது குற்ற உணர்ச்சியை புகுத்துவதன் ஊடாக அரசு, அரசு இயந்திரம் அது வழங்குவதாக கோருகிற ஜனநாயகம் மீதான உங்களின் விமர்சனத்தை ஒதுக்கிவைக்கிற உங்களின் சிந்தனையில் ஆதிக்கம் இல்லையா?

சூரியனுக்கு கீழே உள்ள அனைத்திற்கும் கருத்து சொல்லக் கிளம்புவோர்கள் முதலில் தெளிவான அரசியல் பொருளாதார வரலாற்றுப் பார்வையில் சிந்திக்க வேண்டும். பிறகு நடுப்பக்கத்திற்கும் விவாத மேடைக்கும் வாருங்கள்.

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அணுசக்தி அரசியல் நூலின் ஆசிரியர்.