நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

கடந்த ஒரு வாரமாகவே கீழத்தஞ்சைப் பகுதியில் பனிமூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் பனி என்பது அதிசயமே. மார்கழியில் வரவேண்டிய பனி பருவமழைக் காலத்தில் நிலவுவது மக்களுக்கு வியப்பாக இருக்கிறது. இது பருவநிலை மாற்ற அறிகுறியா என்றும் தெரியவில்லை. பொதுவாகப் பனி பெய்தால் மழை இருக்காது என்பதால் உழவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். கர்நாடகாவிலிருந்து வரும் நீர் போதாத நிலையில் பருவமழை இம்மாத இறுதியில் வரும் என்கிற வானிலை அறிவிப்புதான் இப்போது இருக்கும் ஒரே ஆறுதல்.

மழை என்பது இயற்கை நிகழ்வாக மட்டுமே இருந்த காலம் இன்று இல்லை. அது ஒரு சூழலியல் ஆயுதமாக மாறி வெகு காலமாகிறது. இதற்கான சதித் திட்ட வரலாறு வியட்நாமில் இருந்தே தொடங்குகிறது. வியட்நாம் போரின் போது ஒரு பருவமழைக் காலத்தில் மஞ்சுக் கூட்டத்தினூடே அய்க்கிய அமெரிக்க இராணுவத்தின் WC 130 வகை வானூர்திகள் பறந்தன. அவற்றில் குண்டுகளோ, ஆயுதங்களோ இல்லை. எந்தவொரு இலக்கையும் தாக்கும் எண்ணமும் அவற்றுக்கு இல்லை. இவ்வளவு நல்லெண்ணத்தோடு அய்க்கிய அமெரிக்க இராணுவ வானூர்திகள் பறக்குமா? உறுதியாகப் பறக்காது என்று நமக்குத் தெரியும்.

ஆனால் அவ்வானூர்திக்கு வேறொரு நோக்கம் இருந்தது. அதில் ஆயுதங்களுக்குப் பதிலாக ‘டிரை ஐஸ்’ எனப்படும் பெரும்பாலும் சில்வர் அயோடைட் அல்லது ஈய அயோடைட் நிரப்பப்பட்டிருந்தன. ஏறக்குறைய நிமிடத்துக்கு 7 கிலோ வீதம் அதை மஞ்சு திரள்களினூடே கொட்ட முடியும். அதனால் செயற்கை மழையை உருவாகும். .

பருவமழையின் கால அளவை மேலும் ஒன்றரை மாதம் நீட்டிக்கவே இந்த ஏற்பாடு. வியட்நாம் உழவர்களுக்கு மழைப்பொழிய வைப்பதில் அய்க்கிய அமெரிக்காவுக்கு இவ்வளவு அக்கறை இருக்க முடியாது. பின் எதற்காக இம்முயற்சி? இதுவொரு இராணுவ நடவடிக்கை. இதற்கு ‘ஆபரேசன் பாப்பாய்’ என்று பெயர். இந்தப் பாப்பாய் குழந்தைகளைச் சிரிக்க வைக்கும் கேலிப்படப் பாப்பாய் அல்ல. அய்க்கிய அமெரிக்க இராணுவத்தைச் சிரிக்க வைக்கும் பாப்பாய்.

ஹோ சி மின் தலைமையிலான புரட்சி படையணியின் முன்னேற்றத்தை முடக்கி வைக்கவே இந்த ஏற்பாடு. அப்புரட்சி படையின் தொடர் கெரில்லா தாக்குதலிலிருந்து தப்பித்துச் சில காலம் நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக மட்டுமன்றி, அப்படையின் நடமாட்டத்தையும் முடக்குவதே இதன் நோக்கம். இச்செயற்கை மழையால் அப்படையணி பயன்படுத்தும் சாலைகள் சேதமாகும். மலைப் பாதைகளில் நிலச்சரிவு உண்டாகி அது மூடப்படும். ஆற்றின் குறுக்கேயுள்ள பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும். இப்போது புரிந்ததா இவர்களின் நல்லெண்ணம்?

1967, மார்ச் 20 முதல் 1972 ஜூலை 5ந்தேதி வரை தேவைக்கு ஏற்றாற் போல் இந்நடவடிக்கை நீடித்தது. இதன் துணை விளைவாக வியட்நாம் உழவர்களின் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்ததால், அவர்களின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க முடிந்தது. கெரில்லாப் படை முன்னேற்றம் தடுக்கப்பட்டதால் அய்க்கிய அமெரிக்கப் படைக்கு அன்றைய மதிப்புக்கு 9 இலட்சம் டாலர் மிச்சம். செலவோ எண்பதாயிரம் டாலர்தான்.

அறமற்ற செயலான இச்செயற்கை மழைப் பற்றி அய்க்கிய அமெரிக்க நாளிதழ்களில் செய்தி வெளியான போது அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் முதலில் அதை மறுத்தது. ஆனால் பின்னர் இராணுவ தலைமையகமான பென்டகனின் கமுக்கக் கோப்புகள் கசிந்து அம்பலமானதால் வேறு வழியின்றி அது ஒப்புக்கொள்ள நேரிட்டது. ஆக இராணுவத் தேவைக்காகப் பிறந்ததே செயற்கைமழை தொழில்நுட்பம். இதுதான் இன்று ஒரு நாட்டில் மழை இல்லாக் காலத்தில் மழைப் பெய்ய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் போலத் திரிக்கப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சில்வர் அயோடைட் அய்க்கிய அமெரிக்காவின் சூழலியல் பாதுகாப்பு முகமையின் ‘தூய குடிநீர் சட்டத்தின்படி ஒரு அபாயகரமான வேதிப் பொருள். செயற்கை மழையை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்விக்கும்போது அது தீமை பயப்பதாக மாறும். செயற்கை மழையை ஆய்வு செய்ததில் அதில் சில்வர் அயோடைட் இல்லை என்பது ஒரு வாதம். ஆனால் இத்தகைய ஆய்வானது ஆண்டுக்கு இரு இடங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டது..

சரியான முறை எதுவெனில் மாதந்திர அடிப்படையில் அம்மழைநீர் சேருமிடமான அணைப்பகுதிகள், வாய்க்கால்கள், ஏரிகள் ஆகிய இடங்களிலும், அம்மழைப் பொழியும் இடங்களின் மண்ணையும் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்வதே. மழைநீர் தூய்மையானது என்கிற கருத்தாக்கத்துக்குச் செயற்கை மழை எதிரானது. தொழில்நுட்ப சொற்களில் இதற்கு ‘மேக விதைப்பு’ எனப் பெயர். ஆனால் உண்மையில் இது ‘மேக திருட்டு’ ஆகும்.

உலகில் செயற்கை மழைக்காக அதிகம் செலவிடும் நாடான சீனா. இத்தொழில்நுட்பத்தின் மூலம் தமக்கு 10% மழை கூடுதலாகக் கிடைப்பதாகக் கூறுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான சீன உழவர்களோ தங்கள் பகுதியில் பெய்ய வேண்டிய மழையை இது வேறு பகுதிக்கு கடத்திச் சென்று விடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதிலுள்ள அபாயம் எதுவெனில் ஒரு நாடு நினைத்தால் தனக்குப் பிடிக்காத நாட்டில் மழையைக் கொட்டி தீர்க்க முடியும் என்பது மட்டுமல்ல, அது அடுத்த நாட்டுக்கு கடந்து போகும் மேகங்களைத் தடுத்து அந்நாட்டுக்கு மழைக் கிடைக்காமலும் செய்ய முடியும் என்பதுதான்.

எடுத்துக்காட்டாகக் கடந்த 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தொடக்கத் தினத்தன்று 1000 சில்வர் அயோடைட் ஏவுகணைகளை விண்ணில் ஏவி பெய்ஜிங் நகரில் மழைப் பெய்ய விடாமல் தடுக்க, அது பெய்ஜிங் புறநகர் பகுதிகளில் மழையைக் கொட்டித் தீர்த்தது. இன்று இது வணிகமாக மாறி சில நாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்கள் பணக்காரர்கள் வீட்டு திருமண நாளன்று அந்நிகழ்ச்சி நடைப்பெறும் பகுதியில் மழைப் பெய்யாமல் தடுப்பதற்கு இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1983, 1984-87, 1993-94 ஆகிய ஆண்டுகளில் செயற்கை மழைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது. பெய்யும் மழையைச் சேமித்து வைக்கத் துப்பற்ற இத்தகைய நடவடிக்கைகள், தனியார் நிறுவனங்களை வாழ வைக்கும் திட்டமே அன்றி வேறில்லை.

செயற்கைமழை இயற்கையான நீரியல் சுழற்சியைப் பாதிக்கும். வரும் வடகிழக்கு பருவமழையாவது இயற்கையாகப் போதுமான அளவுக்குப் பெய்து நம் உணவுத் தேவையை நிறைவு செய்ய வேண்டும். மழைநீரைக் குறித்து ஒரு நீரியல் பொறியாளரான மிச்சேல் கிராவிக் சொல்லிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது.

“நீர் துளி விழும் உரிமை மனித உரிமையை விட முதன்மையானது”.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.