டைம்சு தமிழ் இணையதளத்தில் அண்மையில் வெளியான தோழர் அ.மார்க்சின் இரண்டு பதிவுகளை முன்னிட்டு, எனக்குத் தோன்றும் சில கருத்துகளைப் பதிவது பொருத்தம் என்று கருதுகிறேன்.

முதலாவதாக, இலங்கை அரசின் பௌத்தமயமாக்கலைக் கண்டித்து கடந்த மாதம் சென்னையில் நடத்தப்பட்ட இந்து மக்கள் கட்சியின் உண்ணாவிரதத்தில் நெடுமாறன் ஐயாவும் கவிஞர் காசி.ஆனந்தனும் பங்கேற்றது குறித்து, யோ.திருவள்ளுவரும் அ.மா.வும் வில்லவன் இராமதாசு அவர்களும் கூறியது ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது. இதில் யோ.திரு. தொடர்ச்சியாக தமிழ்த் தேசியத் தளத்தில் எழுதிவருபவர்; இதில் குறிப்பாக அ.மா.வின் விமர்சனம் குறித்துமேகூட எழுதிவருகிறார்; விடமாட்டார் போலவும் தெரிகிறது! …….. வி.இரா. அவர்களின் பதிவு, அவரின் வழமையான அரசியல் பகடி!

இனி அ.மா..!

”தமிழ்த் தேசியம் பற்றி எத்தனையோ ஆண்டுகளாக நான் தலையில் அடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருக்கிறேன்…. இப்போதாவது புரிந்துதொலைந்தால் சரி” – என இந்துவத்தின் அபாயத்தைப் பற்றிய அக்கறையை, வெளிப்படுத்தியிருக்கிறார். அது சரியானதே!

அடுத்த ஒரு பதிவில், வழக்கமான அவருடைய மேடைப் பேச்சைப் போலவே, சேதிகளை அடுக்கும் தோழர் அ.மா., சில கேள்விகளை முன்வைக்கிறார். இன்னும் நிறைய கேள்விகளும் இருப்பதாகச் சொல்கிறார். மையமாக, தமிழ்த்தேசியவாதிகள் என்போர் இந்துமதவாதத்துடன் ஒத்துபோகும் வகையினர்; அவர்களில் பிறர் இவர்களைக் கண்டிப்பதில்லை என்றும் சாதியத்துடனும் தமிழகத்தில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரானவர்கள்; அருந்ததியர்களைப் பிற மொழியினராகக் கருதி அதன்படியும் மோதுகின்றனர் என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

’ம.பொ.சிவஞானம், பெங்களூர் குணா முன்வைக்கும் தேசியம்’ என்பதையும் சொல்லிவிட்டு, பெரியார்- பெருஞ்சித்திரனார் வழிவந்தோரின் தேசியத்தையும் தான் வேறுபடுத்தி வந்திருப்பதாகவும் கவனமாகக் குறிப்பிடுகிறார், பேரா. அ.மா.

அவரின் இந்தக் கருத்துப்பதிவானது, திட்டமிட்டோ திட்டமிடாலமோ ஒருபகுதியை அப்படியே விட்டுவிட்டது; சாதிய- மதவாத எதிர்ப்பு – இனவாத எதிர்ப்பு கொண்டதாக இங்கு பேச்சில், எழுத்தில் மட்டுமல்ல, மக்கள்மத்தியிலான செயல்பாடாகவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்தேசியம் உயிர்ப்போடு இருந்துவருகிறது எனும் அப்பட்டமான உண்மையை மறைப்பது தவறான சித்திரத்தைத் தருவதாகவும் இருக்கிறது.

தமிழ்நாட்டுத் தமிழ்ச்சமூகத்தில் பார்ப்பனியத்தை எதிர்த்து பாசிசத்தை எதிர்த்து கல்விப்புலத்திலும் கருத்துருவாக்கத்திலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அ.மா., இப்படியாகக் கருத்திட்டிருப்பது, வியப்பை அளிக்கிறது. ஏனெனில் தமிழ்த்தேசியர்களிடம் அவர் வைத்திருக்கும் கேள்விகளுக்கான விடைகள் எல்லாமே அவர் கடந்துபோகக்கூடிய நிகழ்வுகளாகவே இருந்துவருகின்றன.

இந்திய மார்க்சிய இலெனினிய இயக்கத்தின் தொடர்ச்சியாக தோழர் தமிழரசன் தலைமையில் உருவான தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி, சாதியத்தையும் பார்ப்பனியம் உட்பட்ட மதவாதத்தையும் ஆதரித்து பாராட்டி சீராட்டி பூரிப்படைந்ததா, என்ன? தனிநபர்களின் தலைமறைவு ஆயுதக்குழுவாக- மக்கள் ஆதரவு பெறமுடியாத நிலையை எடுத்தபோதும், சாதியத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களையும் பிற சாதி உழைக்கும் மக்களையும் ஒன்றுசேரவிடாமல் சாதிய- அடையாள அரசியல் செய்யும் வடதமிழக மண்ணில் சாதிய சக்திகளுக்கு எதிராக அந்த இயக்கம் நடைமுறை வேலைகளிலும் ஈடுபட்டது, உங்களுக்குத் தெரியாதா என்ன?

அதன் தொடர்ச்சியெனக் கூறிக்கொள்ளும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், சாதியத்தை, மதவாதத்தை ஆதரிக்கிறதா என்ன?

பார்ப்பனியத்தின் பொற்காலமாக இருந்த இராசராசனைக் கொண்டாடுவதற்காக தமிழ்த் தேசியப் பேரியக்கம் இன்றைக்கு கடுமையாக விமர்சிக்கப்படுவது உங்களால் மட்டுமா? த.தே.பேரியக்கத்தின் முன்னியான ததேபொக வைப்பது மன்னரின் வழியா, மார்க்சியவழியா என தமிழ்த் தேசியத் தளத்திலேயே விமர்சிக்கப்பட்டதுதானே? …………ஆயினும்கூட இதே ததேபொக சாதியத்துக்கு எதிரான கருத்துப்பரப்பலையும் களவேலைகளையும் செய்திருப்பதும் வரலாறு!

70-களில் சிறைப்பட்டு நெடுங்காலம் இருந்து வெளிவந்து அண்மையில் மறைந்த தோழர் அ.கோ.கசுத்தூரிரங்கனின் தமிழர் தன்மானப் பேரவையும் தமிழ்த் தேசியத்தைத்தானே முன்வைத்தது?

சிறையில் அவரின் சகாவாக இருந்த தோழர் தியாகு தலைமையிலான முந்தைய தமிழ் தமிழர் இயக்கமும் சுப.வீ, விலகலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கமும் எந்த சாதியத்தை, மதவாதத்தை ஆதரித்து நின்றன?

1992-ல் தொடங்கப்பட்ட த.நா.மா.இலெ.க.வின் பார்ப்பனிய எதிர்ப்பு- வல்லரசிய எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளைப் பார்க்கிறீர்களா, இல்லையா?

பிற மொழியினராக இருக்கும் தமிழ்நாட்டார் மீது இனவெறுப்பைக் கக்கும் இனவாதம் அதிகரித்துவருகிறது என்றாலும், தமிழ்த்தேசியத் தளத்திலேயே இதற்கு எதிராக விமர்சனம் வைக்கப்பட்டு வருவதை விட்டுவிட்டு, (சமூக அரசியல் ஆய்வாளராக விளங்கும் நீங்கள்) இதை ஒரு கேள்வியாக முன்வைக்கிறீர்கள்..?

எப்படி உங்களால் உண்மைகளைக் கடந்துபோக முடிகிறது? அதை மட்டும் சொல்லுங்கள், தோழரே!

– பரணன்