யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவில் பகுதி போலீஸ் சோதனை சாவடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் இருவர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலில், அந்த மாணவர்களை சுட்டுக் கொல்லவில்லை என்றும், சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் உயிரிழந்தததாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனையின்போது, இரு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தும்படி, அந்நாட்டு காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு அதிபர் சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திங்கள்கிழமை இலங்கை தூதரகம் முன்பு போராட்டத்தை அறிவித்துள்ளது மே பதினேழு இயக்கம்.