இரங்கல்

அலிகர் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் மூர்த்தி மறைவு; அஞ்சலி!

உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் து. மூர்த்தி, திங்கள்கிழமை காலமானார். அவருடைய உடல் வேலூரில் புதன்கிழமை மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பேராசிரியர் து. மூர்த்திக்கு பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள் செலுத்திய அஞ்சலிகளின் தொகுப்பு இங்கே:

தெய்வ சுந்தரம் நயினார்:

பேரா. து. மூர்த்தி

மனிதர்… தனித்துவம் வாய்ந்த மனிதர்… சமூக உணர்வுடைய தோழர்… முற்போக்கு எழுத்தாளர்… சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரகராதி திட்டத்தில் முதலில் பணிபுரிந்தார். அவரது பதவியே சில காரணங்களால் பறிக்கப்பட்டது. அவரது நேர்மையின் காரணமாகப் பழிவாங்கப்பட்டார்! பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்குள்ள தொழிலாளிகளுக்காகப் போராடிய காரணத்தால் அன்றைய ”புகழ்வாய்ந்த” ஜனநாயக விரோதத் துணைவேந்தரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்துத் தஞ்சாவூரில் அன்று பல முனைகளில் முழக்கங்கள் ஒலித்தன. ஆனால் ஜனநாயகம் அற்ற அன்றைய அந்தப் பல்கலைக்கழகத்தின் காதுகள் மூடிக்கொண்டன. பின்னர் பல இன்னல்களுக்குப் பிறகு அலிகார் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதிவரை அங்கே பணியாற்றினார்.

பெரியார் பற்றாளர். ஐயா ஆனைமுத்து அவர்களின் இயக்கத்திற்குத் துணையாக நின்று செயல்பட்டவர். தமிழகத்தில் 80 களில் தமிழகத்தின் மூன்றாவது அணியின் செயல்பாடுகளுக்குத் துணைபுரிந்தவர். மூன்றாம் அணியினரின் இலக்கிய, பண்பாட்டு இயக்கங்களில் பங்கேற்றவர்.

சமூக இயக்க உணர்வின் காரணமாக 80-களில் நான் பாதிக்கப்பட்டபோது, எனக்குத் துணைநின்றவர். எனது அத்தனை துன்பங்களிலும் துணைநின்றவர். எனக்காக… நான் வெளியுலகில் இல்லாதபோது… எனது புத்தகத்தை வெளியிட்டு உதவியவர். ஈழத் தமிழர்களின் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் உதவிபுரிந்தவர்.

அவரது பாதிப்புகளுக்கு ஒரே காரணம்….. அவரது வெளிப்படையான சமூக உணர்வும் செயல்பாடுகளுமே ஆகும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு மனிதர். கொள்கைகளில் சமரசம் செய்யாதவர்.

மொத்தத்தில் ஒரு நேர்மையான மனிதர்! அதுபோன்ற மனிதர்களைக் காண்பது அரிது.

அவரது எதிர்பாராத மறைவு… என்னைத் திணறவைக்கிறது! என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மறுபடியும் தோழர் து. மூர்த்தியைப் பார்க்கமுடியாதா? என் உயிரைக் காப்பாற்றி, இன்று நான் நடமாடுவதற்கு வழிவகுத்த மூர்த்தி மறைந்துவிட்டார் என்ற செய்தியை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை!

 

அ. மார்க்ஸ்:

கண்ணீர் மல்க ஒரு இரங்கல்..பேரா.முனைவர் து.மூர்த்தி (1952 – 2016)

தோழர், பேராசிரியர், அலிகர் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் து.மூர்த்தி அவர்கள் நேற்று அகால மரணம் அடைந்த செய்தி சற்று முன் அறிந்தேன்.

இன்றிரவு தோழரின் உடல் இங்கு கொண்டுவரப்பட்டு வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள அவரது மூத்த சகோதரரின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இறுதி அஞ்சலி நாளை மாலை 3- 4 மணி அளவில் என அறிகிறேன்.

தோழர் மூர்த்தி குறித்து சில மாதங்கள் முன் நான் முகநூலில் எழுதியிருந்தேன். அன்றிரவுதான் நான் அவருடன் கடைசியாகப் பேசியது. தான் அலிகர் பலகலைகழகத்தின் இந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு ப்கிர்ந்து கொண்டார். எனினும் இனி ஓராண்டுதான் பணி உள்ளதென்பதையும் குறிப்பிட்டார்.

தூய தமிழிலேயே இலக்கணமாக உரையாடும் அளவிற்குத் தமிழ்ப் பற்றுடையவர். தந்தை பெரியார் மீதும் அவர் வழி வந்த ஆனைமுத்து அவர்கள் மீதும் மிக்க மரியாதை உடையவர். இறுதிவரை பெரியவர் ஆனைமுத்து அவர்கள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்.

கல்லூரிப் பருவத்தில், அன்று அவரது வட ஆற்காடு மாவட்டத்தில் எழுச்சியுடன் இருந்த நக்சல்பாரி இயக்கங்களின் தாக்கத்தால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டவர். தோழர் பாலன் காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட போது சென்னை அரசு மருத்துவ மனை வாசலில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, கடும் போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் காத்திருந்த கதையை அவர் விவரிக்கும்போதெல்லாம் உணர்ச்சி வயப்படும் காட்சியை என்னால் மறக்க இயலாது.

மாநிலக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் “தமிழ், மலையாளத்தில் உள்ள பொதுவான சொற்கள் குறித்த ஆய்வு” எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது விரிவுரையாளர்களில் ஒருவராகப் பணி ஏற்றார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் நெருங்கிய பழக்கம், ‘கைலாசபதி இலக்கிய வட்டம்’ எனும் பெயரில் நான், அவர், பேரா. இராம சுந்தரம் ஆகியோர் இணைந்து செய்த பணிகள், நடத்திய ஆய்வரங்குகள் ஏராளம். 1983 யூலை படுகொலையை ஒட்டி இங்கு ஒரு ஈழ ஆதரவு அலை எழும்பியபோது தஞ்சையில் நாங்கள் நடத்திய ஆதரவுக் கூட்டங்கள் வெளியிட்ட இரண்டு முக்கிய பிரசுரங்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் அனைவரது கவனத்தியும் ஈர்த்தன. ஈழத்தின் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவர் தோழர் ஷன் அதற்கு ஒரு மறுப்புரை எழுதும் அளவிற்கு அது கவனம் பெற்றது. டானியல் அவர்களின் பஞ்சமர் நாவலைத் தஞ்சையில் நாங்கள் வெளிய்யிட்ட நிகழ்வும் குறிப்பிடத் தக்க ஒன்று.

என்ன காரணமோ, இன்று வரை அறியோம், தமிழ்ப் பலகலைக் கழகத் துணை வேந்தர் வ.ஐ. சுப்பிரமணியத்திற்கு மூர்த்தியைப் பிடிக்காமல் போயிற்று. மூர்த்தி ஒரு நாள் பணி நீக்கம் செய்யப்பட்ட போது பல்கலைக்கழக ஆசிரியர்களால் அநுதாபம், அதுவும் இரகசியமாகத் தெரிவிக்க மட்டுமே முடிந்தது. வெளியிலுள்ள இயக்கங்களை எல்லாம் இணைத்து எங்களின் ஆரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக போராட்டங்கள் நடத்தினோம்.பேரா. ப.சிவகுமார் முதலானோர் சென்னையிலிருந்து வந்து இங்கு போராட்டங்களில்ல் கலந்து கொண்டார்.

ஒரு நாள் இரவு அவரது பணி நீக்கத்தைக் கண்டித்து என் வீட்டில் என் மனைவி பசை காச்ச, என் இரு குழந்தைகளும் நானும் மூர்த்தியும் காத்திருந்து சுவரொட்டிகளை எடுத்துச் சென்று ஊரெங்கும் ஒட்டி வந்த நிகழ்ச்சியை அதற்குப் பின் அவர் என்னைக் காணும்போதெல்லாம் குரல் நடுங்கச் சொல்லாமல் இருந்ததில்லை.

சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் போலந்தில் வார்சாப் பலகலைக் கழகத்தில் தமிழ்த்துறைக்குப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் பணி புரிந்தார்.

பின் இறுதிவரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

என்னை விட மூன்று வயது இளைஞர். ஆனால் என்னை விட பத்து வயது மூத்தவரைப்போலத்தான் என்னை அணுகுவார். என் மனைவி, மகள்கள் எல்லோருக்கும் இனியவர். என் குடும்ப நண்பர். அரசியல் தோழர். தீவிர தமிழ் மற்றும் பெரியார் பற்றாளர்.

அவர் மிகவும் நேசித அவரது மனைவி, ஒரே மகன் ஆகியோரை அவர் நிரந்தரமாகப் பிரிய நேர்ந்த துயரத்தை அவரால் இறுதிவரை கடந்து வர இயலவில்லை. தோழர் கே.டானியல், நான், தம்பிராஜா இளங்கோவன் மூவரும் டேனியல் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர் கடலூர் சென்று மூர்த்தியின் மனைவி (அவரும் ஒரு முனைவர், பேராசிரியர்) அவர்களைச் சந்தித்து அவர்கள் இருவரையும் இணைக்கச் செய்த முயற்சி தோல்வியுற்றது.

அவரது மகன் குறித்த அவரது நினைவுகளை ஒரு சிறு நூலாகியுள்ளார். சுமார் ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார் என நினைவு.

நாகர்கோவிலில் இருக்கிறேன். இறுதியாக அவரது முகத்தை ஒருமுறை பார்ப்பேனோ தெரியவில்லை.

அவர் குறித்து நான் சென்ற ஆண்டு முகநூலில் எழுதிய கட்டுரை கிடைத்தால் தேடிப் பதிவிடுவேன்.

பெரியாரையும் தமிழ்த் தேசியத்தையும் எதிர் எதிராக நிறுத்தாமல் நேசித்த இன்னொரு அன்பர் நம்மை விட்டுப் போய் விட்டார்.

செந்தலை கவுதமன்:
தோழமை கனிந்த பேரா. து.மூர்த்தி நினைவானார்!

கருத்தாழமும் நெஞ்சுரமும் மிக்க தமிழாசிரியராய்த் திகழ்ந்தவர் முனைவர் து.மூர்த்தி. அலிகர் பல்கலைக் கழகப் பேராசிரியர். அங்கேயே 24.10.2016 இல் மறைந்து விட்டார்.  அறிவுலகிற்கு நேர்ந்த இழப்பு இது! சென்னைப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத் துணைவராய் அவர் பணியாற்றி வந்தபோது, நான் சென்னை ஆசிரியர் கல்லூரியில் (1975இல்) பயின்று வந்தேன். எங்கள் இருவரையும் இணைத்து வைத்தவர் உவமைப் பாவலர் சுரதா. மூவரும் கடற்கரை மணலிலும் அண்ணாசாலை நூலக அரங்கிலும் கலந்துரையாடிய செய்திகள் இன்றும் மனத்தில் ததும்புகின்றன.

பெரியாரிய, மார்க்சியத் தோழமையால் எங்கள்நட்பு தொடர்ந்தது. இரு துறையிலும் பெற்ற பெரும்புலமையைத் தமிழாய்வுத் தடமாக்கியவர் அவர். அவர் எழுத்தாக்கியும்
நூலாகாதவை மிகுதி. விடியல் பதிப்பகம் சிவா, கோவை மருத்துவமனையில் இறுதி
நிமையங்களைத் தொட்டுக்கொண்டிருந்த போது து.மூர்த்தி பறந்தோடி வந்து விட்டார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் அன்றுதான் மருத்துவமனையில் – சிவாவுக்கு அருகில் அமர்ந்தபடி -அதிகம் பேசினோம். நாற்பதாண்டு நினைவு வெள்ளத்தில் மனம் மூழ்கித் தவிக்கிறது.

வி. ரி. இளங்கோவன்:

பேராசிரியர் து. மூர்த்தி காலமானார்..!

நினைவுகள் சாவதில்லை..!!

எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார்.

அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் – பொ. வேல்சாமி – து. மூர்த்தி – இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள்.

இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ”பஞ்சமர்” நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் “கோவிந்தன்” நாவல் அச்சாகி வெளிவந்தது.

“கோவிந்தன்” நாவல் வெளியீட்டு விழா – அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி, து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார்.

மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் – வேலணை – வடமராச்சி – திருமலை – கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற “கோவிந்தன்” நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் – ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

வடபகுதியில் பட்டதாரி மாணவர்க்கான கல்வி நிலையங்கள் சிலவற்றிலும் மூர்த்தி உரையாற்ற ஒழுங்கு செய்தேன். பல்வேறு இலக்கியச் சந்திப்புகளை நடாத்தியபின் கொழும்புக்கு அவரை அழைத்துச் சென்றேன். கொழும்பில் “கோவிந்தன்” நாவல் அறிமுக நிகழ்வு முடிந்தபின் இலக்கியத்துறையினர் பலர் அவரைச் சந்தித்து உரையாடினர். இந்தச் சந்திப்புகளை ஒழுங்கு செய்யும் பொறுப்பினை டானியல் என்னிடமே ஒப்படைத்திருந்தார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரமுகர்களான பிரேம்ஜீ – சோமகாந்தன் ஆகியோர் து. மூர்த்தியுடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்து அழைத்திருந்தனர். சோமகாந்தன் வீட்டில்தான் சந்திப்பு நடந்தது. நண்பர் முருகபூபதி உட்பட மற்றும் சிலரும் அங்கிருந்ததாக ஞாபகம். கடுமையான வாதங்கள் இடம்பெற்றன. அவர்களின் கருத்துக்களை திரிபுவாதமென மூர்த்தி கடுமையாகச் சாடினார். இருப்பினும் சிநேகபூர்வமாகவே பேச்சுக்கள் அமைந்தன.

கொழும்பிலிருந்து அவரை கட்டுநாயக்கா விமான நிலையம்வரை சென்று அனுப்பிவைத்தமை இன்றும் ஞாபகத்திலுண்டு.

மூர்த்தி கலந்துகொண்டு உரையாற்றிய கூட்ட நிகழ்வுகளின் செய்தித் தொகுப்புகளை யான் பத்திரிகைகள் யாவற்றுக்கும் வழங்கியிருந்தேன். அவை பத்திரிகைகளில் நன்கு பிரசுரமாகியிருந்தன. அவற்றையும் எனது கடிதங்களுடன் பின்னர் மூர்த்திக்கு அனுப்பிவைத்தேன்.

1986 -ம் ஆண்டு டானியலும் நானும் தமிழகம் சென்றபோது சென்னையில் மூர்த்தி எங்களைச் சந்தித்து உரையாடினார்; அவ்வேளை அவர் மிகுந்த சோகமான நிலையில் காணப்பட்டார். வேலை நிறுத்தம் காரணமாகத் தஞ்சைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை இழந்திருந்தார். ”கிரியா” பதிப்பகத்தில் தற்காலிகமாக தமிழ் அகராதி தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
குடும்பப் பிரச்சினை அவரை வாட்டியது. ஆசைமகன்மீது கொண்ட அளவுகடந்த பாசம் அவரை வதைத்தது.

பாண்டிச்சேரியில் இலக்கியச் சந்திப்புகளை மேற்கொண்ட பின்னர் பேராசிரியர் அ. மார்க்ஸ் – பேராசிரியர் இராமசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைப்படி திருமதி மூர்த்தியைச் சந்தித்துப்பேச டானியலும் நானும் சென்றோம்.
உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் டானியலும் நானும் திருமதி மூர்த்தியைச் சந்தித்து அவர்களது குடும்பப் பிணக்கிணைச் சுமூகமாகத் தீர்த்துவைப்பதற்காகத் திருமதி மூர்த்தி விரிவரையாளராகக் கடமையாற்றிய கல்லூரிக்குச் சென்றோம்.
கல்லூரி மதிய இடைவேளையின்போது அவரைச் சந்தித்து உரையாடினோம்.
அவர் எம்மை வீட்டிற்கு அழைத்து மதிய உணவும் அளித்து அன்பாக உரையாடினார்.

மீண்டும் மூர்த்தியுடன் பேசி அவர்களை ஒருங்கிணைக்கலாம் என்று சொல்லி வந்த ஓரிரு நாட்களிலேயே டானியல் காலமாகிவிட்டார்.
பின்னர் அவர்களுடன் பேச எனக்கு அப்போது வாய்ப்பு இருக்கவில்லை.
மூர்த்தியும் சென்னையைவிட்டு புதுடில்லிப் பக்கம் போய்விட்டாரென அறிந்தேன்.

2012 -ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி எனது சிறுகதைத் தொகுதியின் இந்தி மொழிபெயர்ப்பு புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அதில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள பேராசிரியர் சந்திரசேகரனிடம் மூர்த்தி குறித்துப் பேசினேன். அவர் உடனே அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூர்த்தியுடன் தொடர்புகொண்டு என்னைப் பேசவைத்தார்.

பல வருடங்களுக்குப் பின் சில நிமிடங்கள் மூர்த்தியுடன் அன்பாகப் பேச முடிந்தது. பணி நிமித்தம் உடன் சந்தித்துப் பேச முடியவில்லையென்றும் ஒரு சில நாட்களில் சந்திப்பதாகவும் கூறினார்.
ஆனால் நான் அடுத்த ஓரிரு நாட்களில் சென்னை திரும்பிவிட்டேன். அதனால் நேரில் சந்தித்துப்பேச முடியவில்லை.

இம்முறை இந்தியா போகும்போது புதுடில்லி சென்று நண்பர்கள் பலரையும் சந்திப்பதுடன் மூர்த்தியையும் சந்தித்து நிறையப் பேசவேண்டுமென எண்ணியிருந்தேன். அதற்குள் இப்படி ஒரு செய்தியா..?

உணர்ச்சிகரமான மனிதன் மூர்த்தி. அவ்வாறே அவரது மேடைப் பேச்சும் உணர்ச்சிகரமாக அமைந்து மக்களைக் கவரும்.
இலங்கை வந்தபோது அவருடன் பழகிய சில நாட்கள் என்றும் மறக்க முடியாத இனிய இலக்கிய அரசியல் கருத்தாடல் நிறைந்த பொழுதுகளாக அமைந்தன.

தோழர் டானியல் மூலம் அறிமுகமாகிய மூர்த்தியும் டானியல் போன்றே என் நெஞ்சில் நிறைந்துள்ளார்..!

 

அழகுசுப்பையா:

Last Journey of Prof.D.murthy.

மார்க்சிய பெரியாரிய சிந்தனையாளர் பேரா.து.மூர்த்தி அவர்களின் இறுதிப் பயணம். இன்று இரவு 10 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை பேராசிரியரின் உடல் வேலூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அதன் பிறகு வேலூர் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுக்கப்படவுள்ளது…

தொடர்பிற்கு

குருநாதன் – 9600010989
ராமநாதன் – 9884431860

முகவரி
வள்ளலார் பள்ளி நிறுத்தம்,
துரைசாமி இல்லம்,
சத்துவச்சாரி அருகில்,
வேலூர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: