கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி
கிருபா முனுசாமி

தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!” என்று திருமுருகன் காந்தி எழுதியதை வெளியிட்ட ‘தி டைம்ஸ் தமிழ்’ (The Times Tamil) இணையதளத்தை “வெறுப்பைப் பரப்புகிறது, முற்போக்கு முகங்களுக்குப் பின் வக்கிரங்கள்” என்றெல்லாம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் திரு. சமஸ் அவர்களுக்கு!

உங்கள் எழுத்துக்களை பொறுக்கித்தனம் என்றும், ‘தி இந்து’ பத்திரிகையை மலம் என்றும் திருமுருகன் காந்தி எழுதினால், அதன் பின்னான உண்மைத்தன்மையை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான எதிர்வினையை நீங்கள் திருமுருகன் காந்திக்கு எதிராக ஆற்றியிருக்க வேண்டுமேயன்றி, ‘தி டைம்ஸ் தமிழ்’ எதிராக அல்ல. அதுவே ஊடக அறமும் ஆகும். அதைவிடுத்து, யாரோ மீதான வன்மத்தை இதனூடாக நீங்கள் தீர்த்துக்கொள்ளக் கூடாது.

நீங்கள், ‘தி இந்து’வின் ஊழியர் என்ற அடிப்படையில் உங்களிடம் கேட்கிறேன், ‘தி இந்து’வில் வெளிவரும் கட்டுரைகளுக்கான எதிர்வினைகளை வெளியிடுவதற்கான வெளி ‘தி இந்து’வில் இருக்கிறதா? இல்லையெனும் பட்சத்தில், ‘தி இந்து’விற்கான எதிர்ப்புக் குரலை எங்கே தெரிவிப்பது என்பதை சொல்ல முடியுமா?

உங்கள் நிலைத்தகவலினூடாக நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்? உங்களின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய திருமுருகன் காந்தியின் வார்த்தையையே ‘தி டைம்ஸ் தமிழ்’ போடக்கூடாது என்கிறீர்களா? இல்லை, ‘தி இந்து’வில் எது வெளிவந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றிற்கு எதிரிவினையாற்றத் கூடாது என்கிறீர்களா? இது, ஊடக பயங்கரவாதம், எதேச்சிகாரம்! அதனை மீறி எதிர்வினைகளை வெளியிட்டால், வெளியிடுபவர்களை அன்னியக் கைக்கூலி என்ற ரீதியில் விமர்சிப்பதெல்லாம் பச்சை அவதூறு.

‘தி இந்து’ தமிழர்களுக்கான நாளேடு என்பதற்கு வலுவான பத்து ஆதாரங்களையும், தமிழீழப் பிரச்சனையின் போதும், நியூட்ரினோ விவாகரத்தின் போதும், ‘தி இந்து’ நாளேடு தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்றியதற்கான ஆதாரங்களையும் தயவு செய்து மக்களாகிய எங்களுக்கு கொடுத்து, உங்களுக்கு கூலி கொடுக்கும் ‘தி இந்து’ நிறுவனத்தின் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!

பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக நின்ற தனிக் குரல்களுக்கான வெளி தான் ‘தி டைம்ஸ் தமிழ்’.  தலித்துகளின் குரல்கள் பெரும்பான்மை ஊடகங்களால் நிராகரிக்கப்படும் போது, அதை இணையவெளியில் பெருமளவு கொண்டுவந்தது ‘தி டைம்ஸ் தமிழ்’ என்பதை இந்நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்!

நிராகரிக்கப்படும் எளிய மக்களின் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக ‘தி டைம்ஸ் தமிழ்’ வந்து நிற்கும் என்பதற்கு, “மயிலாடுதுறை அருகேயுள்ள திருநாள் கொண்டச்சேரியை சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்துவின் உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல மறுத்த ஆதிக்க ஜாதியினரை கண்டித்து ஒலித்துக்கொண்டிருந்த ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தோழர்களின் தனித்த குரல்களை ஒன்றிணைத்து முதன்முதலாக வெளியிட்டதோடு, தொடர்ந்து வெளியிட்டு வந்ததே” எடுத்துக்காட்டு.

ஒடுக்கப்பட்ட மக்கள், இந்துவோ, இஸ்லாமியரே, கிருத்துவரோ, பௌத்தரோ, சமணரோ, மதமற்றவரோ, யாராக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுப்பது வக்கிரம் என்றால், தேச துரோகம் என்றால் அதனை ‘தி டைம்ஸ் தமிழ்’ தொடர்ந்து செய்யும். உங்களுக்கு வேண்டுமானால் ‘தி டைம்ஸ் தமிழ்’ எதிராக எப்பேர்ப்பட்ட வழக்கையும் போடுங்கள். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர். சமூக செயற்பாட்டாளர்.