மாதவராஜ்

எழுத்தாளர் ஜெயமோகனிடம் துப்பாக்கி இருந்தால் அந்த இடத்திலேயே அந்தப் பெண் வங்கி ஊழியரை சுட்டுத் தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது.

இந்தியன் வங்கிக் கிளைக்கு செந்தில்நாதன் என்பவர் சென்றதாகவும், அங்கு ஒரு ஒரு பெண் ஊழியர் வேலை பார்க்கும் லட்சணம் கண்டு எரிச்சல் அடைந்ததாகவும், இந்தியாவின் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலும் பெண் வங்கி ஊழியர்கள் இப்படித்தான் வேலை பார்ப்பதாகவும், ஜெயமோகன் எழுதிய காடு நாவலில் வரும் சுறுசுறுப்பற்ற தேவாங்கு போல இருப்பதாகவும், தேசீய வங்கிகளின் நிலைமை கண்டு பொருமியும் ஒரு கடிதம் எழுதுகிறார்.

உலகின் சகல நோய்களுக்கும் மருந்து சொல்வதாய் தெருவில் பாட்டில்களை வைத்து உட்கார்ந்து இருக்கும் ஜெயமோகன் கப்பென்று பிடித்துக் கொள்கிறார். அந்தக் கிழவியை அப்படியே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் என்கிறார். வீட்டில் கீரை ஆயக்கூட லாயக்கில்லை எனவும் மூளையை எதற்குமே உபயோகிக்காததால் இந்த அசமந்தம் ஏற்படுகிறது என கண்டு பிடிக்கிறார். தேசீய மயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் இந்த நிலைமை எனச் சொல்லி சோஷலிசக் கொடுமையாக முடிக்கிறார்.

ஜெயமோகனின் பிற்போக்குத்தனம் அத்தனையும், அவரது கருத்துக்களில் மொத்தமாய் மண்டிக்கிடந்து நாற்றமடிக்கிறது. தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் என்றாலே ஜெயமோகனுக்கு பற்றிக்கொண்டுதான் வருகிறது.

1806ம் ஆண்டு துவங்கப்பட்ட வங்கித் துறையின் வரலாற்றில், 1969ல் வங்கிகள் தேசீய மயமாக்கப்பட்ட பின்னர்தான் வங்கிக் கிளைகள் சாதாரண மனிதர்களை சென்றடைந்தது. கிராமப்புறங்களை எட்டிப் பார்த்தது. இன்று பிரதமர், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என அறிவித்தவுடன் தேசீய வங்கிகளே அந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றன. தனியார் வங்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. நலத்திட்டங்கள் குறித்து அவை கவலைப்படுவதே இல்லை. அதுதான் ஜெயமோகனுக்கு பிடித்திருக்கிறது போலும்.

கடுமையான ஆள் பற்றாக்குறை, தொழில்நுட்பக் கோளாறுகள், போதிய பணிச்சூழல் இல்லாமை, புதிய புதிய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் என்ற நெருக்கடிகளுக்கு இடையே இன்று வங்கி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வெளியே நிற்கும் வாடிக்கையாளர்கள் சில நிமிடங்கள் அதிகமாய் காத்துக் கிடப்பதை தாங்க முடியாத ஜெயமோகனுக்கு உள்ளே புழுங்கி, வாடிக்கொண்டு இருக்கும் ஊழியர்கள் குறித்து கொஞ்சமும் தெரியப்போவதில்லை.

அதிலும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்னும் கருத்து போகிற போக்கில் தூவப்பட்டு இருக்கிறது. படித்து, வங்கித் தேர்வுகள் எழுதி சமீப வருடங்களில்தான் வங்கிகளில் பெண் ஊழியர்கள் அதிகமாக வங்கிகளில் பணிபுரிய வந்திருக்கின்றனர். அது ஜெயமோகனுக்கு தாங்க முடியவில்லை.

பணிபுரியும் அந்த ஊழியரைப் பார்த்தால் பாவம் போலிருக்கிறது. அந்த அம்மாவிற்கு வயசு ஐம்பதையொட்டி இருக்கும். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக குடும்பத்துக்கு உழைத்து விட்டு, அவசரம் அவசரமாக பஸ்ஸில் ஏறி நெரிசலில் பயணம் செய்து, வங்கியில் உழைத்து விட்டு, மீண்டும் பஸ் பயணம் செய்து, வீடு சென்று குடும்பத்துக்காக உழைத்து உழைத்து அயர்ந்திருக்கும் முகம் அவருடையது. ஐம்பது வயதையொட்டி பெண்களுக்கு வரும் பிரச்சினைகளில் எவையெல்லாம் அவருக்கு தாக்கி இருக்கிறதோ, எதனால் அவர் அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கிறாரோ என பதற்றமும், பரிவும்தான் வருகிறது.

வங்கிக் கிளைகளில் சரியாக டாய்லெட் வசதிகள் இருப்பதில்லை. இருந்தாலும் பெண்களுக்கு என்று தனியாக இருப்பது அபூர்வம். இயற்கை அவஸ்தைகளை அடக்கிக் கொண்டு, எவ்வளவோ தருணங்கள் வாடிக்கையாளர் சேவை செய்த பெண் ஊழியர்கள் நினைவுக்கு வருகிறார்கள். மாதவிடாய் சமயங்களில் நாப்கினை மாற்றக் கூட முடியாமல் மொத்தக் கூட்டத்திற்கும் நடுவில் கூனிக் குறுகி உட்கார்ந்து வேலை பார்ப்பதை ஆண்கள் அறிவதில்லை. தனிக் கழிப்பறை வசதியில்லாததால், ஹிந்து பேப்பரை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு போய், மாற்றிய நாப்கின்னை அந்த ஹிந்து பேப்பரில் சுருட்டி, ஹேண்ட் பேக்கில் வைத்து திரும்பக் கொண்டு வரும் அனுபவங்கள் ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?.

தொழிலாளர்கள் மீது அக்கறையும், அன்பும் வெளிப்பட வேண்டிய சிந்தனைகளில் எவ்வளவு கேவலமாக, ‘தேவாங்கு;, ‘கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டும், ‘கீரை ஆயக் கூட லாயக்கில்லை’ என அதிகாரம் மிக்க வார்த்தைகள் பொங்கி வருகின்றன. இப்படி தன் கோபத்தை அவர் அம்பானிகள் மீதும், மோடிகள் மீதும் ஒருபோதும் காட்டமாட்டார்.

உண்மைகளை அறியமுடியாமல் மரத்துப் போனவரை மரமண்டை என்றே சொல்லலாம். அந்த மரமண்டைக்காக –

http://www.thehindu.com/…/all-in-a-days…/article7523493.ece…

மாதவராஜ், எழுத்தாளர்; வங்கிப் பணியாளர் சங்க செயல்பாட்டாளர்.