தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்தால் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும் என்றும் ஆனால், தற்போது ஒரு நபர்‌ மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அரசி வழங்கப்பட்டு வருகிறது. அதே அளவினைத் தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் . தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனால், தமிழக அரசு தற்போது வழங்கும் 16 கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும் . 3 முதல் 10 நப‌ர் வரை கொண்ட குடும்பங்களுக்கு தற்போது 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இனி அந்த அளவு அதிகரிக்கப்படும் . அதன் படி 5 ‌ உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு இனி 25 கிலோ அரிசியும், 6 பேர் கொண்ட குடும்பங்களுக்கு இனி 30 கிலோ அரிசியும் 7 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், 8 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 40 கிலோ அரிசியும், 9 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 45 கிலோ அரிசியும், 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும்’.