அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தலித் மற்றும் பழங்குடிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தமக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக பேசினார். ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கிய இலவச பைகளில் ‘ஆதி திராவிடர்/பழங்குடி நலத்திட்டத்தில் வழங்கப்பட்டது’ என முத்திரை குத்தி வழங்கியிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் மண்டாசூர் மாவட்ட அரசு கல்லூரியில் 250 ஆதி திராவிடர்/பழங்குடி மாணவர்களுக்கு வழங்கிய பைகளில் இப்படியான வாசகங்களை பளிச்சென அச்சிட்டு வழங்கப்பட்டிருக்கிறது. தலித்துகள், பழங்குடிகளுக்கு எதிராக சாதிய மனோபாவம் உள்ள சமூகத்தில், அதை வெளிப்படைய காட்டிக் கொடுக்கும் விதத்தில் ம.பி. அரசின் செயல்பாடு உள்ளதாக கண்டனங்கள் கிளம்பி வருகிறது.

பாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் சாதிய படிநிலையைப் பேணும் இத்தகைய செயலை கண்டிப்பதோடு, போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளது ம.பி. காங்கிரஸ்.