வன்னி அரசு

வன்னிஅரசு
வன்னிஅரசு

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறையிலிருந்து தப்பியதாக சொல்லப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த 8 பேரை என்கவுண்டர் மூலம் கொன்றதாக போலீஸ் அறிவித்துள்ளது. இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு தரப்பிலும் பலத்த சந்தேகங்கள் எழுப்பபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், ஹைதராபாத் எம்பி அசாதுதின் ஒவைசி உள்ளிட்ட தலைவர்கள் சந்தேகங்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட அனைவரும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள். அவர்களின் வழக்கறிஞர் தஹவூர் கான் சொல்லும்போது ‘போபால் மத்திய சிறை மிகவும் பாதுகாப்பானது. 8 பேரின் வழக்கும் விரைவில் முடிவுக்கு வரவிருந்தது. அதில் அனைவரும் விடுதலையாகவே வாய்ப்பு அதிகமிருந்தது. அவர்கள் எல்லோரும் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். தப்பிக்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை. இதற்குபின் பெரும் சதி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களை தாக்கியதால் தான் நாங்கள் திருப்பி சுட்டோம் என்று போலீஸ் சொன்ன கதைக்கு மாறாக, கொல்லப்பட்டவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் ஆயுதங்கள் ஏதுமின்றி அவர்கள் போலீசை நோக்கி கையசைப்பது, விழுந்து கிடக்கும் நபர்கள் மீது போலீஸ் சுடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இது நம் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கைதிகள் போலீஸ் விசாரணையின் போதோ, காவல் நிலையத்திலோ, சிறையிலோ மரணமடைந்தாலோ அல்லது என்கவுண்டர் போன்ற சம்பவம் நடைப்பெற்றாலோ அதை மாஜிஸ்ட்ரேட் தலைமையில் விசாரிக்க வேண்டும் என்னும் விதியை மறந்து சிறையிலிருந்து அவர்கள் தப்பித்தது பற்றி மட்டும் விசாரணை நடைபெரும் என்று ம.பி. பாஜக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு இசுலாமிய வெறுப்பை அடிப்படையாக கொண்டு தங்கள் பிரச்சாரத்தை இந்துத்துவ கும்பல் தொடங்கியுள்ளதையே இந்த படுகொலைகள் அறிவிக்கின்றன. ‘குஜராத் மாடல்’ என்பதை நாடு முழுக்க கொண்டு செல்வோம் என்று இந்துத்துவ கும்பல் சொன்னதன் செயல்வடிவத்தை தான் நாம் கோவை கலவரத்திலும், இப்போது போபாலில் இசுலாமிய விசாரணை கைதிகள் போலி மோதலில் கொல்லப்பட்டிருப்பதிலும் பார்க்கிறோம். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைப்பெற்ற போலி மோதல் (என்கவுண்டர்) வழக்கில் தொடர்புடைய அமித்ஷாவை கட்சியின் தலைவராக கொண்டவர்களிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

தலித் ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலா நிறுவனப் படுகொலை, உ.பி., குஜராத்தில் தலித்துகள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல், காஷ்மீரில் போராடும் பொதுமக்கள் படுகொலை, ஒரிசாவில் பழங்குடிகள் மீது தாக்குதல், தெலங்கானாவில் மாவோயிஸ்டுகள் போலி மோதலில் படுகொலை, இப்போது போபாலில் இசுலாமிய விசாரணை கைதிகள் போலி மோதலில் படுகொலை. நாடு முழுவதும் தலித்துகள், இசுலாமியர்கள், பழங்குடிகள், தேசிய இனவிடுதலை போராட்டங்கள் மிகத்தீவிரமாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இந்துத்துவ பாசிச கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. எதிர்த்து கேள்வி எழுப்புவோரை தேசவிரோதிகளாக சித்தரிக்கின்றனர். இந்துத்துவ கும்பலுக்கு எதிராக நாம் அணிசேர வேண்டிய தேவை வலுப்பெற்றுள்ளது. குஜராத் உனாவில் அதன் எழுச்சியை நாம் பார்த்தோம். போபாலில் நடத்தப்பட்டுள்ள பச்சைப் படுகொலைகளை கண்டிப்பது நம் எல்லோரது கடமையாகும்.

வன்னி அரசு, அரசியல் செயற்பாட்டாளர்.