அருண் நெடுஞ்செழியன்

போபால் சிறையிலிருந்து தப்ப முயன்றதாக கூறி சிமி அமைப்பைச்(அவர்கள் அவ்வமைப்பினர் தானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை) சேர்ந்த எட்டு விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வானது, குஜராத் போலி மோதலைப் போல இஸ்லாம் வெறுப்பின்பாற்பட்ட பாஜக அரசின் மற்றொரு போலி மோதல் பச்சை படுகொலை நிகழ்வுதான் என்கிற ஐயம் ஒவ்வொன்றாக நிரூபணம் ஆகி வருகிறது.

இக்கொலைக்குப் பின்னாலான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகிற மத்தியப் பிரதேச அமைச்சர்,சிறைக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் சிறைக் கைதிகளை போலீஸ் பார்த்ததாகவும் அவர்கள் கையில் ஸ்பூன் தட்டுகள் இருந்ததாகவும் வேறு வழியின்றி போலீசார் துப்பாகியால் சுட்டுக் கொன்றதாகக் கூறி போலீசின் தீரமிக்க செயலை பாராட்டுகிறார்.அமைச்சர் கூறுவது மெய்யாகவே இருக்கட்டும்.மாறாக,தட்டும் ஸ்பூனும் கொண்டு கைதிகளனைவரும் அதி பயங்கரத் தாக்குதலை நடத்திவிடக்கூடும் என்பதை விட மடைமைத்தனம் இருக்க முடியுமா?தட்டுக்கு எதிராக துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்துவதுதான் தற்காப்பா?

மேலும்,இப்போலி மோதல் தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்தும் ஐஜி சௌத்திரி கூறிய கருத்தும் முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளது.அதாவது கைதிகள் அருகாமை கிராமத்தில் நுழைந்ததாகவும்,கிராம மக்கள் இவர்களை திருடர்கள் என்றெண்ணி போலீசை உஷார் படுத்தியதாகவும்,போலீசார் அங்கு வந்து கைதிகளை சரணடையக் கூறி,அதற்கு கைதிகள் மறுத்தக் காரணத்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாதகவும் விளக்கமளிக்கிறார்.இதில் அமைச்சர் கூறுவது உண்மையா போலீஸ் உயர் அதிகாரி கூறுவது உண்மையா?

இரண்டுமே பச்சைப்பொய்தான்.இக்கொலையானது,திட்டமிட்ட இஸ்லாம் விரோத அரசியலின் பாற்பட்ட ஆர் எஸ் எஸ் பசகவின் வகுப்புவாத அரசியல் நலனுக்கான பச்சைப் படுகொலை செயலாக பார்க்க வேண்டியுள்ளது.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்,நாளது வரையில் குற்றவாளி என இறுதி செய்யப்படாத விசாரணைக் கைதிகளாகவே சிறையில் இருந்துள்ளனர்.அவர்கள் மீதான விசாரணை வரும்வாரத்தில் முடிவுற்று தீர்ப்பு வரவுள்ள நிலையில், சிறையை உடைத்து தப்பிக்க வேண்டிய அவசியம் ஒன்றும் அவர்களுக்கு இருக்கவில்லை என வழக்கறிஞர் கான் தெரிவிக்கிறார்.

இந்திய தேச ஐக்கிய உணர்வை,பாஜகாவின் அரசியல் பரவலுக்கான தேவையிலிருந்து பார்க்கையில் அது இந்து தேச ஐக்கியமாக கருதுகிறது. தேச விரோத,இந்திய இறையாண்மைக்கு எதிரான,பாகிஸ்தான் விரோத இஸ்லாம் விரோத கருத்துருக்கள் ஆளும்வர்க்க அரசியல் மேலாண்மைக்கான கருத்தியலாக உருவாக்கப்பட்டு இந்து தேச ஐக்கியத்திற்கான சமூக ஏற்பை பெற முயல்கிறது.

ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வால் வெகுமக்களிடத்தில் திரட்டப்பட்டிருந்த இந்திய தேசிய ஐக்கிய உணர்வு,இந்துத்துவ தேசியவாத உணர்வுநிலை மட்டத்தில் மறுவார்ப்பு செய்ய முயல்கிறது.இந்துத்துவ பாசிசத்தை எதிர்ப்பது,இந்திய தேசிய ஐக்கியத்தை எதிர்ப்பது என்பது தேச எதிர்ப்போடு இணைக்கப்படுகிறது.

80 களின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டுகளிலும் இந்திய சமூகத்தின் பிற்போக்கு சக்திகளான வகுப்புவாத இந்துத்துவ சக்திகளுடன் சர்வதேச தேசிய முதலாளிகளும் அரசும் அதன் கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது.

நிலவுகிற உலகமய கட்டம் வரை இந்துத்துவ கருத்துநிலையாளர்கள் பாட்டாளி வர்க்கங்களின் அணிசேர்க்கையை வகுப்புவாத அரசியலால் தகர்த்துவருகின்றனர்.எனவே வரலாற்று ரீதியில் இந்துத்துவத்தின் இயக்கத்திற்கு முதலாளியமும் முட்டுக் கொடுத்து தீனிபோடுகிறது.

காலனியாதிக்க காலம் தொட்டு பாசக வடிவில் இந்துத்துவ சக்திகள் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துகிற கடந்த கால் நூற்றாண்டு காலம் வரையிலும் இவ்வணியினர் ஏகாதிபத்திய நலனுக்கு அடிபொடிகளாகவும் இந்திய தேச பெருமுதலாளி வர்க்கத்தின் சேவகர்களாகவும் குட்டி முதலாளி வர்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்துகொண்டு உழைக்கும் விவசாய,தொழிலாளி வர்க்கத்தின் அணிசேர்க்கைக்கும் ஒற்றுமைக்கும் தடை சக்திகளாக இருந்துவருகின்றனர்.

நிலவுகிற இந்துத்துவ பாசிசத்தின் வளர்ச்சிப் போக்குகளுக்கு,அதன் இயங்காற்றலுக்கு இந்து மத – பார்ப்பனீய கருத்துநிலைகளும் அதனுடன் இணைக்கப்பட்ட அதிகாரமும் மட்டுமே காரணமாக இருப்பதற்கில்லை.இவை மட்டுமே இந்துத்துவத்தின் இயக்குவிசையாகவும் இருக்கவில்லை.கருத்தியல்தளத்தின் துணைக் கொண்டு மட்டும் தனது மேலாதிக்கப் பரவலை அது மேற்கொள்ளவில்லை.வரலாற்று ரீதியில்,இந்துத்துவ சக்திககளின் வளர்ச்சிக்கு முதலாளிய வர்க்கத்தின் அரவணைப்பும் ஆதரவும் உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது.

இப்பின்புலத்தில் இருந்து இஸ்லாம் விரோத இந்துத்துவம் அரசியல் மேலாதிக்கத்திற்கான அனைத்து முற்போக்கு சக்திகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பரசியல் காலத்தின் கட்டாயமாக நம்முன் எழுந்துள்ளது.இரண்டாண்டுகளுக்கு முன் ஐந்து இஸ்லாமியர்கள் மீதான போலி மோதல் படுகொலை,காஷ்மீர் படுகொலைகளை,அண்மையில் கோவையில் கலவரம்,மோடியின் தலாக் கரிசனம்,பொது சிவில் சட்டம் அமல்,ஆயிரக்கணக்கில் சிறையில் வாடுகிற இஸ்லாமிய விசாரணைக் கைதிகள் என நாம் அடுக்குக் கொண்டே போகலாம். என்ன செய்யப் போகிறோம்?

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அணுசக்தி அரசியல் நூலின் ஆசிரியர்.