முகிலன்

கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி  மணல் குவாரியில் முறைகேடாகவும்.  பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல்படுவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டக்குறிச்சி, புகழூர்-தவுட்டுப்பாளையம், நடையனுர்-கோம்புபாளையம் ஆகிய பகுதிகளில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கும் செயல்படுவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து   காவரி ஆறு பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை அமைத்து   பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

இந்நிலையில்,  26-10-2016 புதன்கிழமை   மாலை கரூர் மாவட்டம்   வேலாயுதம் பாளையம்   பகுதியில்,   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும்,  இக்கூட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் அய்யா. நெடுமாறன், கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு பேச அழைக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால், வேலாயுதம்பாளையம் பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பேசுவதோடு, மணல்கொள்ளையை எதிர்த்தும் பேசுவார்கள் இதனால் கலவரம் ஏற்படும் –சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனக் கூறி   கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

அரவக்குறிச்சி தேர்தல் அலுவலரும், கரூர்  மாவட்ட ஆட்சியரும்,  காவல்துறையும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர்  பொதுக்கூட்டம் அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்ட தேதியில்  புகளூர் பகுதியில்  மக்களையும்,  பத்திரிக்கையாளர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில்  26-10-2016 புதன்கிழமை   மாலை புகழூரில்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தினை தொடர்ந்து,  காவிரி ஆற்றில்  முறைகேடாக இயங்கும் கடம்பன்குறிச்சி மணல் குவாரியையும்,  அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் குவாரி அமைக்கப்பட்டு 4கி.மீ நீளத்திற்கும், 2 கி.மீ அகலத்திற்கும் 20 அடி ஆழத்திற்கு அள்ளப்படடு வருவதை நேரில் பார்வையிட முடிவெடுத்து  அய்யா.நெடுமாறன்,  தோழர் . மகேந்திரன், தோழர் . முகிலன், மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க  பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என   ஏராளமானோர் தளவாபாளையம் அருகிலுள்ள கடம்பன்குறிச்சி  மணல் குவாரியை  பார்வையிட சென்றோம்.

2 கார், 1 வேனில்  25 பெண்கள்  மற்றவர்கள் 60  இரு சக்கர வாகனங்களில் என சுமார் 150 பேர் புறப்பட்டு சென்றோம். பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்.  மணல் கொள்ளை மாபியாக்களால் மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாது என முடிவெடுத்து  எந்த மணல் குவாரி நடக்கும் இடத்திற்கு செல்கிறோம் என செல்லும் இடம் பற்றி எவ்வித முன்னறிவிப்பும்  செய்யாமல்,  போராட்டக்குழு பொறுப்பாளர்களும், தலைவர்களும் முன்னால் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து அனைவரும் வாருங்கள் என அறிவித்து சென்றோம்.

புகழூரில் இருந்து சுமார் 6 கி.மீ துரத்தில் கடம்பன்குறிச்சி  மணல் குவாரி உள்ளது. 2 வது கி.மீ தூரத்தில் உள்ள தோட்டக்குறிச்சி ஊரை தாண்டிய போது காவல்துறையினர் 2 வாகனத்தில்  வாகன பேரணி நடுவே நுழைந்தனர். வாகனங்கள் தளவாபாளையம், கோவிந்தம்பாளையம், மேட்டுப்பாளையம் வழியாக சென்று கடம்பன்குறிச்சி ஊருக்குள் சென்று செல்லாண்டியம்மன் கோவில் வழியாக கடம்பன்குறிச்சி  மணல் குவாரிக்குள் சென்றோம். ஆற்றுக்குள் அமைந்த மணல்குவாரியில் சுமார் 5 கி.மீ தூரம் வரை அனைவரும்  சென்றோம். எங்களுடன் காவல்துறை வாகனமும் பின் தொடர்ந்து வந்தது.

அங்கு பார்த்த கொடுமைகளை தனியாக எழுதுகிறோம். மணல் குவாரி கொடுமைகளைப் பற்றிஅய்யா. நெடுமாறன்,  தோழர் . மகேந்திரன் ஆகியோர் சட்ட விரோத மணல் குவாரிக்குள் 5 கி.மீ தூரம் சென்ற நிலையில் அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு அவர்கள் பார்த்த மணல் குவாரிகொடுமைகளை, அத்துமீறல்களை சட்டவிரோத மணல்குவாரியில் நின்றே  பேட்டி அளித்தனர்.

மக்கள் மீது கல்வீச்சு

கடம்பன்குறிச்சி  ஊருக்குள் நாங்கள்  சென்ற போது  எங்களோடு உடன் பின் தொடர்ந்து  வந்த  வாகனங்கள் பல காலதாழ்வாக வந்ததால்,   வழித்தடம்  மாறி கடம்பன்குறிச்சியை தாண்டி சென்று நன்னியூர் புதூர் வரை சென்று விட்டனர். அங்கிருந்து அவர்கள்தொடர்பு கொண்டுகடம்பன்குறிச்சி மணல் குவாரிக்கு அருகே வர  சுமார் 30 நிமிடம் வரை அவர்களுக்கு காலத்தாழ்வு ஏற்பட்டது. வழி மாறி சென்று கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்கு திரும்பியவர்களும் அனைவரும் இணைந்து வராமல் இடைவெளியிட்டு தனித்தனியாக வந்தனர்.

கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்குள் தலைவர்களும், மற்றவர்களும் பத்திரிக்கையாளர்களையும் அழைத்துக் கொண்டு   நுழைந்ததை  மணல் கொள்ளை மாபியாக்களால் ஏற்றுக் கொள்ளவே  முடியவில்லை. எண்ணற்ற அடியாட்களை தாங்கள்  வைத்து இருந்தாலும், காவல்துறை அதிகாரிகளை தங்களுக்கு ஏவல் வேலை செய்யும் நாய்கள் போல வைத்து  ஆட்டுவித்துக் கொண்டு  இருந்தும், மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களுக்கு கைகட்டி வேலை செய்யும் நிலையில் இருந்தும், அரசாங்கமே தாங்கள்தான் நடத்துகிறோம் என்ற மமதையில் திளைத்து வந்த மணல் கொள்ளை மாபியாக்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

காவரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் ஆற்றுப் பக்கம் வந்தால் உள்ளூர் மக்களால்  கலவரம் ஏற்படும் என பிம்பத்தை கட்டமைக்க  தங்கள் அடியாட்கள் முலம் பல்வேறு  செயல்பாடு ஏற்கனவே  செய்தும்,   அவர்கள்  மக்கள் அனைவரின் ஆதரவோடு  எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்  கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்குள் வந்ததை வன்முறையாக்க திட்டமிட்டனர்.மணல் கொள்ளை மாபியாக்கள் தங்களிடம் வேலை பார்க்கும்   அடியாட்களை சுமார் 10 பேரை  ஏவி விட்டு மக்கள் மீது கல்வீசி  தாக்க திட்டமிட்டு கொடுத்தனர்.

மேலும் வழி மாறி சென்று கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்கு திரும்பி  வரும் மக்கள்  மணல்குவாரிக்குள் வந்து விடக் கூடாது என்பதற்காக மணல்குவாரிக்குள் இருந்த சாலையை பொக்லைன் இயந்திரத்தை வைத்து மிக பெரிய குழியை வெட்டி துண்டித்தனர். எங்களோடு உடன் வந்த  பலர் கடம்பன்குறிச்சி மணல்குவாரிக்குள் வந்து விட்டு மேற்கொண்டு செல்ல வழியில்லாமல் திருப்பினர்.

மேலும் மணல்குவாரிக்குள் இருந்த நிழலுக்காக போடப்பட்ட  ஓலையால்  வேய்ந்த குடிசையை மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் தீ வைத்து எரித்தனர். இதை வெளியே இருந்து பார்க்கும் மக்கள் மணல்குவாரிக்குள் நுழைய அச்சப்பட வேண்டும் என்பதும், நாளை ஏதாவது காவல்துறையினர்  காவரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் மீது வழக்கு போட வேண்டும் என்றால் குடிசை  வீட்டை தீ வைத்து கொளுத்தி விட்டனர் எனச சொல்லி விடலாம் என்பதுதான் மணல் கொள்ளை மாபியாக்களின்  திட்டம்.

இந்நிலையில் வழி மாறி சென்றவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த பாதைகளில் கடம்பன்குறிச்சிமணல்குவாரிக்கு அருகில் வந்தனர்.அப்போது மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் சுமார் 10 பேர்  பயங்கர போதையோடு கத்திக்கொண்டும், கற்களை எடுத்து வீசவும் செய்தனர். வாகனங்களில் செல்வோர்களை கத்திக்கொண்டே ஓடி துரத்துவது, அச்சுறுத்துவது என பயமுறுத்தினர். வழி மாறி சென்று கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்கு  வாகனங்களில் திரும்பியவர்கள் ஒன்றாக வராமல் தனித்தனியாக வந்ததால் இது அவர்களால் எளிமையாக செய்ய முடிந்தது.  இவர்கள் இந்த செயல் மேற்கொண்ட போது காவல்துறையினரும் உடன் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் போதையோடு கத்திக்கொண்டும், கற்களை எடுத்து கண்மண் தெரியாமல் வீசியதில்  இரு சக்கர வாகனத்தில் வந்த திருக்காடுதுறை. ராசப்பன்(வயது65) அவர்களின் மூக்கில் கல்பட்டு  ரத்தம் கொட்டியது. அவரது சட்டை முழுக்க ரத்தம் ஆகியது.

காவரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் வழிகாட்டலில்;   எவரும், எந்த நிலையிலும் ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும், நம்மை அடித்தாலும்   அடி வாங்க வேண்டுமே,  தவிர யாரையும்  திருப்பி அடிக்கக் கூடாது என்பதுதான்.

25 பெண்கள் வந்த வேன் வழிமாறி சென்று விட, அவர்களை வழிகாட்டி அழைத்துவர  அய்யா. விசுவநாதன் அவர்களும், தோழர். அண்ணாவேலுவும் ஒரு வாகனத்தில் மணல்குவாரியில் இருந்து திரும்பி சென்றனர். அப்போது மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் பயங்கரமாக  கத்திக்கொண்டு  வந்து வாகனத்தின் பின்பக்கமாக அமர்ந்து இருந்த  அய்யா. விசுவநாதன் அவர்களை பிடித்து இழுத்தனர்.வண்டி தடுமாறவே அய்யா இறங்கி கொண்டார்.

மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் அய்யாவை பார்த்து “இவன் தான் புகழூர் விசுவநாதன். இந்த கிழவன் தான் போராட்டம் உட்பட எல்லாத்துக்கும் காரணம்.  இவனை அடிச்சு தொங்க விட்டுட்டா சரியாகிடும்ன்னு”  சொல்லிட்டு தனியாக அவரை இழுத்து சென்றனர்.   அங்கு விசுவநாதன் அய்யாவையும்  அடிப்பது போல் கையை முகத்திற்கு நேராக கொண்டு வந்து மிரட்டினார்கள்.  அவரது உடலை  பிடித்து உலுக்கினார்கள். ”மாவட்ட கலெக்டரும் , எஸ்.பி யும் எங்களோடு இருக்கிறார்கள்.  வைகோவும், நல்லக்கண்ணுவும்   வந்து இப்பொழுது  உன்னை  காப்பாற்றி விடுவானா” என பல இழிசொற்களைப் போட்டு பேசினார்கள். மேலும் “உன்னால்தான்  எங்கள் வருவாய் எல்லாம்  போகிறது” எனக் கத்தினார்கள். அவருடன் உடன் இருந்த அண்ணாவேலுவை  மூன்று பேர் சுற்றி வளைத்துக் கொண்டு  அவரை   கைகளால் தாக்கினார்கள். அவரின் இரு சக்கர வாகன சாவியையும், அலைபேசியையும் பிடுங்கிக்  கொண்டனர்.

அப்பொழுது  அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த புஷ்பலதா – தமிழ்ச்செல்வி  ஆகியோர் மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்களை எதிர்த்து சத்தம் போட்டுள்ளனர். அவர்களது வண்டியையும் பிடித்து ஒருவன் இழுக்க மற்றொருவன் பொம்பளைகளை கை வைத்தால் வேறு பிரச்சினை ஆகிவிடும். எனவே, விட்டுவிடு என சொல்லி பின் வாங்கியுள்ளான்.

புஷ்பலதா – தமிழ்ச்செல்வி ஆகியோர் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு,  ஒரு வகையில் மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்களுக்கு பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு இருந்த காவலர்களின் செயலை பார்த்து  சத்தம் போட்டு திட்டி விட்டு அங்கிருந்த பெண் காவலர்களிடம் சென்று,  “ இப்படி அண்ணாவேலுவை அடித்தும், 70 வயதான அய்யாவை அடிப்பது போல் துன்புறுத்தி,  அடிச்சு அராஜகம் பண்றாங்களே ரவுடிகள், உங்கள்   காவல் துறையை சேர்ந்தவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு நிக்கிறார்களே,  வேணும்ன்னா எங்க புடவையைத் தர்றோம், உங்க ஆண் காவலர்களை கட்டிக்க சொல்லுங்கன்னு” சொல்லி சண்டை போட்டனர். இது ஏதோ பெரிய பிரச்சனையாகிடும்ன்னு பயந்து அந்த ரவுடிகள் விசுவநாதன் அய்யாவை அதன் பின் விட்டுள்ளார்கள்.

புகழூர் விசுவநாதன் அவர்களை  மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் இழுத்துப் பிடித்த போது காவல்துறையை சேர்ந்த சிலரும் கற்களை எடுத்து வாகனத்தில் வந்த மக்களை நோக்கி வீசியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு காவல்துறை அதிகாரி அங்கிருந்த மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்களுடன் கைகுலுக்கிய கொடுமையும் நடந்தது.

மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் புஷ்பலதா – தமிழ்ச்செல்வி  ஆகியோரைப் பார்த்து,  “நீங்கள் மட்டும் தனியாக வண்டியில் வந்து இருந்தால் உங்களை இந்த ஆற்று குழிக்குள் தள்ளி மண்ணை போட்டு மூடியிருப்போம்” என்று கொக்கரித்து மிரட்டியுள்ளார்கள்.

வழி மாறி சென்று கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்கு தனியாக  திரும்பிய பாடகர்.சமர்பா குமரனையும் அவரோடு உடன் வந்த வேலூர் தோழர்.சதீசையும் மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் பிடித்துக் நிறுத்திக் கொண்டு,  அவர்களை பைக்கோடு இழுத்து சென்று ஆற்றின் குழிக்குள் தள்ள முயற்சித்துள்ளனர். தோழர்கள் அவர்களுடன் போராடி மீண்டுள்ளனர். அப்போது ஒருவன் ஜல்லிகற்களை  துண்டில் போட்டு சுற்றி வைத்து

தோழர்.சதீசை பலமுறை முதுகில்   அடித்துள்ளான். தோழர்.சதீசு அவர்கள் பலமுறை தாக்கப்பட்டும் நெஞ்சுரத்தோடு அவர்களுடன் போராடியுள்ளார்.   இவன்தானே பாடுகிறவன் இவனை உயிரோடு விடக்கூடாது எனக் கூறி சமர்ப்பா குமரனை கொலைவெறியோடு தாக்க முயற்சித்து உள்ளனர். அவர்களிடம் இருந்து இருவரும் தப்பித்து உள்ளனர். காவல்துறை இத்தனை அராஜகத்தையும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்துள்ளது.

கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்கு உள்ளே சென்று விட்டு, அங்கே வழியில்  குழி தோண்டி வைத்ததால் மேலும் செல்ல முடியாமல் திரும்பிய புங்கோடை. நவலடி சுப்பிரமணி, திருக்காடுதுறை சுப்பிரமணி ஆகியோரையும் கைகளால்  தாக்கியுள்ளனர் இந்த ரௌடிகள்.  புங்கோடை. நவலடி சுப்பிரமணி அவர்களது இரு சக்கர வாகனத்தில் முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டியிருந்தார். அவரை பார்த்து”” ‘’அஇஅதிமுக காரனாக இருந்தால் எங்களை எதிர்த்து விடுவாயா, ஆற்று பக்கம்  வராதே, ஓடுடா’’ என சொல்லி கைகளால் அடித்துள்ளார்கள்.

மேலும் காரில் தனியாக   மணல் குவாரிக்கு உள்ளே சென்று விட்டு குழி தோண்டியதால் திரும்பிய கரூர் வழக்கறிஞர்.ராஜேந்திரனை வழிமறித்து குண்டர்கள் அவர் முகத்தில் இரண்டு முறை குத்தியுள்ளார்கள். அவரது  முகம் வீங்கியது. அவர் தான் ஒரு வக்கீல் என்று சொல்லியும், “”வக்கீலா இருந்தா என்ன, மயிரா இருந்தா என்ன,ஆத்துக்கு வராதே, ஓடுடா” என்று சொல்லி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நடக்கும் இடத்தின்  அருகில் இரண்டு பேருந்து நிறைய காவல்துறையினர்இருந்தும், அவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தனரே தவிர வேறு எதுவும்  கண்டுகொள்ளவே இல்லை…

குண்டர்களால் பொது மக்கள் தாக்கப்படுவதை போலீசார் புன்சிரிப்புடன் பார்த்து, பார்த்து  ரசித்த கொடுமை இங்கு நடந்தது.

மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள் கல்வீசி தாக்கியதில்,  திருக்காடுதுறை முருகையன், புகழூர். கந்தசாமி ஆகியோர் கற்களால் தாக்கி அடிபட்டனர்.  பொதுமக்கள் மட்டும் இன்றி சில பெண் காவல்துறையினரும் கல்வீச்சில் அடிபட்டனர். அது வீடியோ ஆதாரமாகவே நம்மிடம் உள்ளது.

25 பெண்கள் வந்த வேன் வழிமாறி சென்று பகவதி அம்மன் கோவில்  வழியில் திரும்பி   வர குறிப்ப்பிட்ட இடத்திற்கு மேல் வேன் வர முடியாததால் இறங்கி பெண்கள் நடந்து வந்துள்ளனர். அப்போது  வாகனத்தை விட்டு இறங்கி குவாரியை நோக்கி பெண்கள்  நடந்து  வந்த போது ஒருவன் தனது பைக்கில் வந்து,   நடந்து  வந்த  பெண்களை வழிமறித்து நின்று  எங்கே போகிறீர்கள் நில்லுங்கள் என்று கூறினான். அப்போது அவர்கள் அவனிடம்  ஏதும் பேசாமல் போகவே “ அங்கே போகாதீர்கள். அங்கே நீங்கள் போனால் உயிருடன் திரும்ப முடியாது, ஜாக்கிரதை”  என்று  மிரட்டல் போல் கூறவே வந்திருந்த பெண்களில் சிலர் தயங்கினர்.

ஆனால் தோழர்.மாதேஸ்வரி உட்பட பல பெண்களும் எவ்வித அச்சமும் இல்லாமல்  தைரியமாக முன்னேறியுள்ளனர். மீண்டும் அவன் பெண்களை  பின் தொடர்ந்து வந்து வழிமறித்து நின்று  “சொன்னால் கேட்க மாட்டாயா?  எங்கள் ஊருக்கு வந்து பிரச்சினை செய்வதற்கு நீ யார்? “ எனக் கேட்டு உள்ளான். தோழர்.மாதேஸ்வரி அவர்கள்  “நானும் கேட்கிறேன்.  இதை எங்களிடம்  கேட்பதற்க்கு நீ யார் ?” என்று கேட்டுக் கொண்டே அவனை மீறி  பெண்கள் ஆவேசமாக முன்னேறியுள்ளனர். வண்டியில் வந்தவன்  மீண்டும் வழிமறித்து “உள்ளே பெண்கள் சென்றால் கொலை விழும் என்று மிரட்டினான்.  எங்கள்  உயிரே போனாலும் பரவாயில்லை நாங்கள்  திரும்பி போக மாட்டோம்”  என்று கூறி அவனை சத்தம் போட்டு விட்டு தோழர்.மாதேஸ்வரியுடன் பெண்கள் முன்னேற,   அவன்  பெண்களுடன்  தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு  நின்றான்.

அப்போது அந்த வழியாக வேகமாக பைக் ஓட்டி வந்த  ஒரு காவல்துறை  அதிகாரி  சீருடையில் கடந்து சென்றார். பெண்களோடு நடு சாலையில் ஒருவன் தகராறு செய்து கொண்டு இருக்க,   எதுவுமே ரோட்டில் நடக்காதது மாதிரி அந்த அதிகாரி சென்றுள்ளார்.  பின்பு பெண்களை  மிரட்டிய அந்த  ரவுடி காவல்துறை சென்ற பைக்கை பின் தொடர்ந்து வேகமாக சென்றான்.

இதனிடையில் ஆற்றுக்குள் குண்டர்களால் தாக்கப்பட்டு ரத்த காயங்களுங்களோடு  இரு சக்கர வாகனத்தில்  ராசப்பன் போன்றோர் மருத்துவ சிகிச்சைக்காக திரும்பி   வந்து கொண்டிருந்தனர்.  பெண்களிடம் நெருங்கிய தோழர்கள்,  “நீங்கள் அங்கே செல்ல வேண்டாம் அங்கே நமக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை, காவல்துறை பாதுகாப்போடு  மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள்  ரௌடித்தனம் செய்கின்றனர், கல் வீசுகின்றனர்”  என்றனர்.  அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை கண்களில் பயத்துடன் சொல்லவே,   பெண்கள் அதற்கு மேல் செல்லாமல்  நிலைமையை உணர்ந்து வாகனத்திற்கு திரும்பினர்.

சட்டவிரோத மணல்குவாரியில் (கடமன்குறிச்சி  மணல்குவாரியில் இருந்து  4 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் உள்ளே) நாங்கள் நின்று பார்வையிட்டுக் கொண்டு இருந்த போது  ம் மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள்  மக்களை நோக்கி கல்வீசுவதையும், காவல்துறை அதை வேடிக்கை மட்டும் பார்ப்பதையும் அலைபேசியில் அழைத்து சொன்னார்கள். அப்போது எங்களோடு அரவக்குறிச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்ப்பாளர் கலைச்செல்வன் அவர்களும், வேலாயுதம்பாளையம் காவல் ஆயவாளர் செட்ரிக் மானுவல் அவர்களும் இருந்து அதை அவர்களும் கேட்டனர். ஆனால் அவர்கள் இதை தடுக்க  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ((26 10 2016 KAVERI MANAL KOLLAI 11 முதல் 15 வரை – youtube லிங்கில் பார்க்கலாம்)

கடமன்குறிச்சி  மணல்குவாரியையையும், சட்டவிரோத மணல்குவாரியையும்  தலைவர்களுடன் நாங்கள்  பார்வையிட்டு பின்பு,  அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு கடைசியாக நான் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டு இருந்தோம்.

வழியில் கடமன்குறிச்சி குவாரி தொடங்கும் இடம் அருகே மணல்குவாரி கொள்ளையர்களின் கையாட்கள்   எங்களை எதிர்பார்த்து போலீஸ்      துணையோடு   காத்துக் கொண்டு இருந்தனர். (26 10 2016  KAVERI MANAL KOLLAI  35 முதல் 40 வரை – youtube லிங்கில் பார்க்கலாம்).   அவர்களை வண்டியில் வந்த நாங்கள் நின்று , எதிர்கொண்டு நிற்க, வேறுவழியில்லாமல்  அவர்களை அங்கே நிற்க கூடாது என காவல்துறை வேறுவழியின்றி வெளியேற்றியது.

அங்கு இருந்து  வெளியேறிய மணல்குவாரி கொள்ளையர்களின் கையாட்கள் ஊருக்குள் ஒடி வந்து  கடமன்குறிச்சி குவாரி தொடங்கும் இடத்தை தாண்டி, கடமன்குறிச்சி ஊரில் செல்லாண்டியம்மன் கோவில் செல்லும் வழியில் காவல்துறை பாதுகாப்போடு மணல்கொள்ளையார்களின் கையாட்கள் ஒரு பத்துப் பேர் காத்துக் கொண்டு இருந்தனர். ஊடகத்தினரும்க ஏதோ ஒன்று  நடக்க இருக்கிறது என அங்கு நின்றனர்

வாகன வரிசையில் கடைசியாக நான் வந்து கொண்டு இருந்தேன். என் அருகே தோழர் தமிழ்கவி இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர்.

நான் வருவதை அறிந்து மணல்கொள்ளையார்களின் கையாட்கள் ஒரு ஒன்னரை கிலோ எடையுள்ள ஒரு பட்டையான கல்லை எடுத்து ” இன்றோடு முகிலன் தொலைந்தாண்டா” என   என் தலையை குறிவைத்து எறிந்தனர்.  அதை பார்த்த  என்னருகே வாகனத்தில் வந்து கொண்டு இருந்த தோழர் . தமிழ்கவி அவர்கள் வண்டியில் இருந்து குதித்து அந்த கல்லை மறித்து நின்று அவர்  முதுகில் அடிவாங்கி என்னைக் காற்றினார்.

அப்போது நிலை தடுமாறிய தோழர் . தமிழ்கவியிடம் இருந்த முழுப்படங்கள் எடுத்த ” ஐ பேடை” மணல்கொள்ளையார்களின் கையாட்களில் ஒருவன்  பிடுங்கி கொண்டு ஓட நமது தோழர்கள் துரத்தி பிடுங்க முயற்சித்தனர். உடனே அதை திருடி சென்ற மணல்கொள்ளையார்களின் கையாட்கள் அதை தரையில் அடித்து உடைத்தான். இவ்வளவும் காவல்துறையினர் முன்பே நடைபெற்றது. அப்போது நிலை தடுமாறி ” ஐ பேடை” பிடுங்கியவனை துரத்திய தோழர் . தமிழ்கவியை தடுத்து இழுத்து மணல்கொள்ளையார்களின் கையாட்கள் ஏழெட்டுப் பேர் சேர்ந்து நின்று அவரை கீழே தள்ளி தாக்கத் தொடங்கினர். வாகனம் நிறைய காவல்துறையினர் இருக்க அவர்களின் பாதுகாப்போடு ரௌடிகளின் தாக்குதல் அரங்கேறியது.

எப்போதும் அதிகார மமதையோடு இயங்கும் வேலாயுதம்பாளையம் காவல் ஆயவாளர் செட்ரிக் மானுவல் முன்னிலையிலேயே இந்த நிகழ்வை ரௌடிகள் அரங்கேறினர்.

காவல் ஆயவாளர் செட்ரிக் மானுவல் மற்றும் 25 க்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்தும் தமிழ்கவியை காக்க எதுவும் செய்யாததோடு, ரௌடிகளிடம் இருந்து காப்பாற்ற முயன்ற தோழர்களை தடுக்கவும் செய்தனர். பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே எனக் கேள்வி கேட்டவர்களிடம் வேலாயுதம்பாளையம் காவல் ஆயவாளர் செட்ரிக் மானுவல் “என்னால் என்ன செய்ய முடியும்” என்றே பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.

உடனே நான் இருசக்கர வண்டியில் இருந்து குதித்து தமிழ்கவியை மீட்க ஓடினேன். அவர் தோழர்களால் மீட்கப்பட்டார்…

தைரியம் உள்ளவர்கள் வாங்க என்று நாங்கள் எதிர்த்து நிற்க மணல்கொள்ளையார்களின் கையாட்களான ரௌடிகளை காவல்துறையினர் வெளியேற்றுவது போல் நடித்தனர்.

அந்கிருந்து தமிழ்கவியை அழைத்துக் கொண்டு  கிளம்பி, புகழூரில்  நிகழ்வு இடத்திற்கு வந்து சேர்ந்தோம்..

அங்கு  மணல்குவாரி கொள்ளையர்களின் கையாட்களால் பாதிக்கப்பட்ட அனைவரும் பத்திரிக்கையாளர்களிடம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தெரிவித்தனர். நிறைவாக அய்யா. நெடுமாறன், தோழர் . மகேந்திரன் உள்ளிட்டோர்  இது தொடர்பாக  அடுத்து செய்யவேண்டிய பணிகளை பேசி நிறைவு செய்தனர்.

முகிலன், தமிழ்நாடு சுற்றுசூழல்  பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்.