மொழிவாரி மாநிலங்கள் அமைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை:

நவம்பர் 1 – 1956ஆம் ஆண்டு நவம்பர் 1- ஆம் தேதி தான், மொழி வழி மாநிலங்கள் பிரிந்து, தமிழ்நாடு தனி மாநிலமாகவும், ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து, அறுபது ஆண்டுகள் ஆகின்றன. பேரவையில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், ஜீவா அவர்கள் “இந்த அவையில் கன்னடர் இருக்கிறார்கள், தெலுங்கர் இருக்கிறார்கள், கேரள தேசத்தினர் இருக்கிறார்கள், ஆனால் நவம்பர் முதல் தமிழர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது”என்று கூறினார்.

மொழி வழி மாநிலம் அமைய பெரும் பாடு பட்டவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, சிலம்புச் செல்வர், சங்கரலிங்கனார், நேசமணி போன்ற தலைவர்களாவர். அதற்காக பல போராட்டங்கள் எல்லாம் நடைபெற்றன. அந்தக் காலத்தில் “மதராஸ் ஸ்டேட்”(சென்னை ராஜதானி) என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போதும், “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட மறுத்தது அப்போதிருந்த காங்கிரஸ் அரசு. இந்த மாநிலத்தின் பெயர் “மதராஸ்” என்று அழைக்கப்பட்டதை, “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை 1967ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் தேதியன்று தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் முதலமைச்சராக இருந்து சட்டப் பேரவையில் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் ஒருமனமாக நிறைவேறியது.

அப்போது அண்ணா அவர்கள் பேரவைத் தலைவராக இருந்த ஆதித்தனார் அவர்களை நோக்கி,”சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நன்னாளில் நான் “தமிழ்நாடு” என்று சொல்வதற்கும், அவை உறுப்பினர்கள் “வாழ்க” என்று சொல்வதற்கும் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்” என்றார். பேரவைத் தலைவர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர், “தமிழ்நாடு” என்று அண்ணா மூன்று முறை உரக்கக் குரல் எழுப்பவும், எல்லா உறுப்பினர்களும் “வாழ்க” என்று என்று முழக்கமிட்ட சம்பவமும் நடைபெற்றது. அவ்வாறு பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு”என்று பெயர் சூட்டிய தீர்மானத்திற்கு அடுத்த ஆண்டு ஐம்பதாம் ஆண்டு பிறக்க இருக்கின்ற நேரத்தில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்து நாளையோடு அறுபதாம் ஆண்டு நிறைவு பெறுகின்ற நேரத்தில் தமிழ் மக்களை எல்லாம் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு என்று பெயர்அமைய பாடுபட்ட தலைவர்களை எல்லாம் போற்றுகிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

மொழிவாரி மாநில அமைப்புகள், 1956 நவம்பர் 1ம் நாள் சட்டப்படி பிரிக்கப்பட்ட மாநிலங்களாக அதிகாரம் பெற்றன. தமிழகம் இழந்த பகுதிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வேதனை ஒருபக்கம் இருப்பினும், இன்றைய தமிழ்நாடு வரைபடமாக உருவான 60ம் ஆண்டில் தமிழர் பகுதிகளை பாதுகாத்து தமிழ்நாடு என்று அமைக்க உயிர்நீத்த உத்தமர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, போராடிய தலைவர்களை மனதால் போற்றுவோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு நாளும், 61-ஆம் ஆண்டு தொடக்க நாளும் கொண்டாடப்படும் நிலையில்,  தமிழ்நாட்டு மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1956-ஆம் ஆண்டு வரை இன்றைய தமிழ்நாடு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டாலும் அது ஒரு சிறிய திராவிட நாடாகவே இருந்தது. மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் 14 மாநிலங்களாகவும், 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் தமிழகம் பயனடைந்ததை விட இழந்ததே அதிகமாகும். கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி உள்ளிட்ட தலைவர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகத்துடன் இணைக்கப் பட்டது என்றாலும், தமிழர்கள் வாழும் பல பகுதிகள் ஆந்திரா மற்றும் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

தமிழர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தான் முல்லைப் பெரியாறு தீராத சிக்கலாக மாறியிருக்கிறது. அதேபோல், வடாற்காடு மாவட்டத்தின் பெரும்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் அதிக எண்ணிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. கே. வினாயகம், ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்கள் வட எல்லை மீட்புக் குழு அமைத்து போராடியிருக்காவிட்டால் தமிழகத்தின் மேலும் பல பகுதிகள் ஆந்திரத்திற்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும். தலைநகர் சென்னை கூட நமக்கு சொந்தமாக இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். தமிழகத்தின் நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடிய தலைவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் எதற்காக போராடினார்களோ, அதை சாதிக்க நாம் பாடுபட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், தமிழகத்தின் வரலாற்றை இளைய தலைமுறை அறிந்து கொள்ளவும் வசதியாக நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாட வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

மொழிவாரி மாநிலம் அமைய வேண்டும், தாய்மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் காந்தியடிகள். அவர் காட்டிய வழியில் 1956ம் ஆண்டு தமிழ் மாநில அமைப்பு மசோதா, தமிழ் ஆட்சிமொழி மசோதா ஆகியவற்றை நிறைவேற்றி சட்டமாக்கியது காமராஜர் அரசு. இதற்கு அடித்தளமாக இருந்த தலைவர்களை நாம் நன்றியோடு நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.