பதான்கோட்டில் இந்திய ராணுவ தளத்தின் மீது பாக். ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் நடத்திய தாக்குதல் குறித்து  செய்தி வெளியிட்ட என்டிடீவி  இந்தி செய்தி சேனலுக்கு ஒரு நாள் முழுக்க தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 9-ஆம் தேதி முழுநாளும் ஒளிபரப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பரப்பு துறையின் அறிவுறுத்தல்களை மீறி செய்தி வெளியிட்டதற்காக இந்தத் தடை என மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,

“சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நேற்று கோயங்கா விருது வழங்கிய மோடி, ‘எமர்ஜென்ஸி மீண்டும் வந்துவிடக்கூடாது என்று பேசினார். இன்று என்டிடீவியை மூடச் சொல்கிறார். வஞ்சகமாக உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

என்டிடீவி இந்தி சேனலில் மூத்த ஆசிரியரான ராவிஷ் குமார், கடுமையாக மோடி அரசை எதிர்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.