மேலூர் மாவட்டத்தில் கீழவளவு, பூரண்குளம், கண்மாயை பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், அரசு நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாகவும் பி.ஆர்.பி. மற்றும் அவரது பங்குதாரர்கள் 20 பேர் மீது 2 ஆயிரத்து 536 பக்க குற்றப்பத்திரிகை மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, ஓம்ஸ்ரீ கிரானைட் உரிமையாளர் ஷைலஜா மற்றும் பங்குதாரர் டாக்டர் சாந்தமோகன் மீது 353 பக்க குற்றப்பத்திரிகையும், பி.எஸ். செல்வராஜ், கண்ணன் ஆகியோர் மீது 78 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசுக்கு 331 கோடியே 71 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மொத்தம் 5 கிரானைட் நிறுவனங்கள் மீது 3 ஆயிரத்து 881 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கீழவளவு மற்றும் ஒத்தக்கடை பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 5 கிரானைட் நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட 98 வழக்குகளில் 48 வழக்குகளுக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது புதிய தலைமுறை செய்தி.