சென்னையில் மாபெரும் அணு உலை எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட உள்ளதாக அணு எதிர்ப்பு இயக்கத்தினர்  அறிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

கூடங்குளம் அணு உலைத் திட்ட பாதிப்புக்குள்ளாகும் மக்களின் அனுமதியைப் பெறாமல், திட்டம் பற்றிய அடிப்படைத் தகவல்கள், அறிக்கைகள் எதையும் மக்களுக்குக் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக திணிக்கப்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலிரண்டு உலைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது. தொடர் நிகழ்வுகள் இன்னும் நடந்து வரும் நிலையில், அங்கே மேலும் நான்கு உலைகள் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

போராடும் மக்களின் கோரிக்கைகளை, நியாயங்களை, உணர்வுகளை முற்றிலும் புறந்தள்ளி, உளவுத்துறை, காவல்துறை சூழ்ச்சிகளால் மக்களைப் பிரித்தாண்டு, நலத்திட்டங்கள் எனும் பெயரில் மக்களை ஏமாற்றி மக்கள் போராட்டங்களை முறியடிப்பதிலேயே மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டுகின்றன. இந்த நிலையில் கூடங்குளம் திட்ட விரிவாக்கத்திற்கான எதிர்ப்பை அரசியல் தளத்தில் வலுவாக பதிவு செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணு உலைகள் கட்டக்கூடாது என்று கூடங்குளம் போராட்டத்தை ஆதரிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் தெளிவான, தீர்க்கமான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றன. இந்த கட்சிகள் இயக்கங்கள் அனைவருமாகக் சேர்ந்து கூடங்குளத்தில் கூடுதலாக அணுமின் நிலையங்கள் கட்டக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
கூடங்குளம் முதலிரண்டு அணுஉலைகளைப் பற்றி பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தாலும், அவற்றை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டு, மத்திய அரசு இந்தத் திட்டத்தை ஒரு வெற்றி திட்டமாகக் காட்டுவதற்கு கடினமாக முயல்கிறது. தமிழக மக்களின் பாதுகாப்பு, உடல்நலம், வருங்காலம் போன்றவற்றை முழுவதுமாகப் புறந்தள்ளி முதலிரண்டு உலைகள் பற்றி எந்தத் தகவலும் தராமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். முதலிரண்டு அணு உலைகள் பற்றிய முழு உண்மைகளை உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அனைவரும் கூட்டாக வலியுறுத்துகிறோம்.

கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்களை மிரட்டுவதற்கும், அவர்களை தடுப்பதற்கும் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டுவிட்டு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்ட பிறகும் மத்திய மாநில அரசுகள் அந்த வழக்குகளை திரும்பப் பெற மறுக்கின்றன. இதனால் கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடவுச்சீட்டுப் பெற முடியாமலும், வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போக முடியாமலும் அந்தப் பகுதி இளைஞர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர். வழக்குகளை திரும்பப் பெற எத்தனையோ முறை கேட்டுக்கொண்ட பிறகும், மாநில அரசு கண்டுகொள்ளாமலிருக்கிறது. போராடும் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் இந்த பொய் வழக்குகளை ஒட்டுமொத்தமாகத் திரும்பப்பெற வேண்டும் என்று மாநில அரசை வற்புறுத்துகிறோம்.
இந்த கோரிக்கைகளை மையப்படுத்தி சென்னையில் எதிர்வரும் திசம்பர் 10 தேதி அணு தீமையற்ற தமிழகம் என்கிற தலைப்பில் அணு உலைகளுக்கு எதிரான மாபெரும் மாநாடு நடைபெறும்.

பங்கு பெற்றவர்கள்.

திருமாவளவன், வி.சி.க
ஜவாஹிருல்லா, ம.ம.க
மல்லை சத்யா, ம.தி.மு.க,
அப்து ஹமீத், எஸ்.டி.பி.ஐ.
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி
சு.ப உதயகுமார், பச்சை தமிழகம்,
ஆழி செந்தில்நாதன், பச்சை தமிழகம்
கோ.சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்