தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப் பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் மூன்று தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் 139 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

இதில் முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ கே போஸ், திமுக வேட்பாளர் சரவணன், பாரதிய ஜனதா உள்ளிட்ட 7 கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 21 சுயேட்சை வேட்பாளர்கள் என 30 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி பழனிச்சாமி உள்ளிட்ட 46 ‌பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி, திமுக வேட்பாளர் அஞ்சுகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 15 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை உரிய அதிகாரிகளால் சான்றளிக்கப்படாததால் அவர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும் என திமுக சார்பில் மூன்று தொகுதிகளிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.