முதலில், கொடூரமான குஜராத் படுகொலை நிகழ்த்த சங் பரிவாரை சுதந்திரமாக அனுமதித்து, பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் செய்து, குஜராத்தில் மோடி தனது ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்டார். சட்டத்தின் ஆட்சியை இப்படி முழுவதுமாக சீர்குலைவுக்கு உள்ளாக்கியதை நியாயப்படுத்த, (குஜராத் கவுரவம் என்ற) சோதனைக்குட்படுத்தப்பட்ட, நம்பகமான மூர்க்கமான பிராந்திய வெறிவாத வாய்வீச்சையும், பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறிவாதத்ததையும் (அவரது தேர்தல் பரப்புரைகள் மியான் முஷ்ரப்பை குறிவைப்பதாக இருந்தன) பயன்படுத்தினார். அவரது பதவி காலத்தின் பாதி காலம் வரை, அதே நம்பகமான செயல்தந்திரத்தை நாடு முழுவதும் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது. குஜராத் மாதிரியை இப்போது நாடு முழுவதும் மூர்க்கமாக நிகழ்த்த முனைப்பு காட்டப்படுகிறது.

போபால் மோதல் படுகொலையை எடுத்துக்கொள்வோம். சிமி அமைப்பைச் சேர்ந்த விசாரணைக் கைதிகள் 8 பேர் உயர்பாதுகாப்பு போபால் சிறையில் இருந்து தப்பிவிட்டார்கள் என்ற செய்தியை அக்டோபர் 31 அன்று நாளிதழ்களில் பார்த்தோம். ராம்சங்கர் யாதவ் என்ற கான்ஸ்ட்பிளின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு அவர்கள் தப்பினார்கள் என்று சொல்லப்பட்டது. அந்த எட்டு விசாரணைக் கைதிகளும் மத்தியபிரதேச காவல்துறையினரால் மோதலில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி சில மணிநேரங்களில் தொலைக்காட்சிகளில் வெளியானது. காவல்துறையினர் ‘உடனடியாக, சாமர்த்தியமாக பதில் நடவடிக்கை’ எடுத்துவிட்டார்கள் என்று இந்த மோதல் படுகொலையை ஊடகங்களின் பெரும்பிரிவினர் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அதிகாரத்தில் இருக்கும் வெவ்வேறு பிரிவினர் சொன்னவை கோர்வையாக இல்லை; ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகவில்லை; அவற்றில் தெளிவாகத் தெரிகிற, பெரிய ஓட்டைகள் நிறைய இருந்தன.

மத்தியபிரதேச சிறைத்துறை அமைச்சர் சிறைப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்டார்; சிறையில் இருந்த சிசிடிவி பழுதடைந்துள்ளதாகச் சொன்னார்; அப்படியானால், சிறையில் இருந்து தப்பித்தது பற்றிய காட்சிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. அந்த விசாரணைக் கைதிகளிடம் ஆயுதங்கள் எவையும் இல்லை என்று சிறைத் துறை அமைச்சர் சொல்லியுள்ளார். மோதல் படுகொலை தொடர்பாக இது வரை வெளியாகியுள்ள காணொளி காட்சிகள் எல்லாம் இந்த உண்மையை உறுதிபடுத்துகின்றன. அவர்களிடம் கூர்மையான ஆயுதங்கள் இருந்ததாகவும் அவற்றால்தான் காவல்துறையினரை தாக்கியதாகவும் காவல்துறை தலைமை ஆய்வாளர் சொல்கிறார். மோதல் படுகொலை நடந்த இடத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர், அந்த விசாரணைக் கைதிகள் காவல்துறையினரை நோக்கி கல்லெறிந்ததாகச் சொல்லியுள்ளார். வெறும் பிளாஸ்டிக் கரண்டிகளும் மரச்சாவிகளும் கொண்டு சிறைக்கதவுகளைத் திறந்தார்கள், பிறகு அனைவருமாக, சாவகாசமாகச் சென்று புதிய உடைகள் வாங்கிக் கொண்டார்கள், அருகில் இருந்த மலை மீது ஏறினார்கள், அப்போதுதான் மற்றவர்கள் அவர்களைப் பார்த்தார்கள் என்ற கதை அப்பாவி பார்வையாளரை நம்பி எடுக்கிற பாலிவுட் திரில்லர் போல் இருக்கிறது.

வியாபம் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மத்தியபிரதேச சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம், இந்த மொத்த விசயம் பற்றியும் கோர்வையான, நம்பகத்தன்மை கொண்ட ஒரு செய்தியை சொல்வது பற்றி அக்கறையின்றி இருப்பது, மோடியின் காலத்தில் உள்ள ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்தை வெளிப்படுத்துகிறது. ஓட்டைகளால் நிறைந்துள்ள இந்தக் கதையையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல, ஒத்துப்போகிற, உறுதுணையாக இருக்கிற ஊடகங்களின் சேவை, சங் பரிவாரின் மூர்க்கமான அதிதீவிர தேசவெறி வாய்வீச்சு ஆகியவற்றின் மீது எப்போதும் சார்ந்திருக்க முடியும் என்று அவர்களுக்குச் தெரியும். ஏற்கனவே இரண்டு மத்திய அமைச்சர்கள் இந்தக் கதையை நியாயப்படுத்த துவங்கிவிட்டார்கள். பிரதமர் அலுவலகத்தில் உள்ள இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், இந்த மோதல் படுகொலை நாட்டுக்கு தார்மீகரீதியாக ஊக்கம் அளித்திருக்கிறது என்று சொல்லியுள்ளார். உள்துறை விவகாரங்கள் அமைச்சக இணை அமைச்சர் கிரேன் ரிஜிஜ÷, அதிகாரத்தில் உள்ளவர்களை சந்தேகப்படும், அவர்களை கேள்விகளுக்கு உள்ளாக்கும் பழக்கத்தை இந்திய மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் சொல்வதை நம்ப வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

போபால் ஏதோ தனித்த ஒரு பிறழ்வு அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் புதிய ‘சகஜ நிலை’ என்பதையே இது குறிக்கிறது. இதுதான் மோடியின் ‘குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகையின்’ செயல்பாடு. போபால் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, மல்கன்கிரியில், ஆந்திராவைச் சேர்ந்த கிரேஹவுண்ட் பிரிவின் படைவீரர் ஒருவர், ஒடிஷா காடுகளில் இருந்த மாவோயிஸ்ட் மறைவிடத்தில் நுழைந்து பழங்குடியினர் உட்பட பல மாவோயிஸ்ட் தலைவர்களை, செயல்வீரர்களை படுகொலை செய்தார். மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்தாங்கியிருந்து, அந்தக் கொலைகள் உண்மையிலேயே நடந்த மோதலின் விளைவாக நடந்திருந்தால், காவல்துறையினருக்கும் இழப்புகள் இருந்திருக்கும்; மல்கன்கிரி தொடர்பாக முன்வைக்கப்ட்ட செய்தியில் இது பற்றிய அறிக்கை எதுவும் இல்லை. அரசு நடத்தியதாகச் சொல்லும் மோதல் படுகொலைகள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையமும் உச்சநீதிமன்றமும் தெளிவான நீதித்துறை மற்றும் நிர்வாகரீதியான வழிகாட்டுதல்கள் முன்வைத்துள்ளன. ஆனால், போபால் விசயத்திலும், மல்கன்கரி விசயத்திலும் மனித உரிமை ஆணையமும் உச்சநீதிமன்றமும் முன்வைத்துள்ள விதிகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மோதல் படுகொலைகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, எந்தக் காரணமும் இல்லாமல் நடக்கும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆயுதங்கள் எதுவும் இல்லாத சாமான்ய மக்கள் கொல்லப்படுவது அதிகரித்துக் கொண்டு செல்கிறது; காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்ற ‘பதட்டமான’ பகுதிகளில் மட்டுமின்றி, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றன; கடந்த இரண்டு மாதங்களில் ஜார்க்கண்டடின் கோலா, பர்காகான், குன்தி ஆகிய இடங்களில், மூன்று வெவ்வேறு சம்பவங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உரிக்குப் பிறகு நடந்த ‘துல்லியத் தாக்குதலை’ தொடர்ந்து, தேர்தல் நடக்கவுள்ள உத்தரபிரதேசத்தில் பிரதமரையும் பாதுகாப்பு அமைச்சரையும் பாராட்டியும், ‘நாங்கள் உங்களைக் கொல்வோம்; நிச்சயம் கொல்வோம்; எங்கள் துப்பாக்கிகள், எங்கள் குண்டுகள் கொண்டு, எங்களுக்கு வசதிப்படும் நேரத்தில், ஆனால் உங்கள் இடத்தில் உங்களைக் கொல்வோம்’ என்ற அடாவடியான எச்சரிக்கைகள் விடுத்தும் தட்டிகள் வைக்கப்பட்டன. ‘நீ, உன் இடத்தில் இரு’ என்பது நமது எல்லைகள் தாண்டி நமக்கு தெரியாத இடங்களில் இருக்கும் நமக்குத் தெரியாத நபர்களுக்காக என்று இருக்க வேண்டியதில்லை, ஆனால், நமது ஆட்சியாளர்கள் நினைத்தால், அது நமது இடத்தில் இந்தியர்கள் யாராவது என்று கூட இருக்கலாம் என்பது தெளிவாகிவிட்டது. நாம் கேள்விகள் எழுப்பினால், நாம் ராணுவத்தை அவமானப்படுத்துகிறோம், காவல்துறையினரின் உணர்வை இழிவுபடுத்துகிறோம் என்று நம் மீது குற்றம் சுமத்தப்படும். ராணுவத்தை அரசியல்மயமாக்குவது, அரசியலை ராணுவமயமாக்குவது என்ற போக்கு இதற்கு முன் இவ்வளவு தெளிவாக இருந்ததில்லை. நெருக்கடி நிலையின்போதும், அதற்கு இட்டுச் சென்ற காலகட்டம் தவிர, வேறெப்போதும், இப்போது நடப்பதுபோல், போலீஸ் ஆட்சியாக மாறும் ஆபத்தான யதார்த்தத்தை நோக்கி இந்தியா நகர்ந்ததில்லை.

நெருக்கடி நிலையில் இருந்து இந்தியாவை மீட்க, பத்திரிகை சுதந்திரத்தையும் குடியுரிமைகளையும் மீண்டும் பெற ஓர் உறுதியான ஜனநாயக எதிர்ப்பு தேவைப்பட்டது. இன்று மோடியும் பகவத்தும் அவரது ஆட்களும், நாம், இந்த ஜனநாயகம் என்ற பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்றும், போலீஸ் ஆட்சியையும் எங்கும் பரவுகிற பாசிச கும்பல்வெறியையும் புதிய சகஜ நிலை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ‘நல்ல நாட்கள்’ காலத்தில் இதுதான் தேசத்தின் பெருமை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்த எதேச்சதிகார ஒழுங்கை ஜனநாயக இந்தியா ஏற்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் உறுதியான போராட்டம் இப்போது, இங்கு உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும். ராணுவத்தினரும் துணைராணுவத்தினரும் காவல்துறையினரும் சந்திக்கும் உயிரிழப்புகளுக்காக வருத்தம் தெரிவிக்கும் அதேநேரம், உண்மையும் நீதியும் வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தியாக வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்தப்பட்டு, போபால், மல்கன்கிரி உண்மைகள் வெளிவர வேண்டும். காவல்துறை நீதியை கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது; ஊடகங்கள் அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு முகமையாகவோ, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் பிரச்சார சாதனமாகவோ சுருக்கப்பட்டுவிடக் கூடாது.

– எம்எல் அப்டேட் தொகுப்பு 19, எண் 45, 2016 நவம்பர் 01 – 07