அருண் நெடுஞ்செழியன்

போபால் போலி மோதலில், எட்டு விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸ் தரப்பு விளக்கமும் அமைச்சர் தரப்பு விளக்கமும் முரண்பட்டு வருகிறது. இது குறித்து பேசுவோர்களை, தேசிய பாதுகாப்பு நடவடிக்கையை விமர்சிப்பதா என ஆளும் இந்துத்துவ பாசிசம் இந்து தேசப்பற்றின் ஊடாக வாயடைக்க முயல்கிறது. இந்தப் பின்புலத்தில், இந்தப் போலி மோதல் தொடர்பாக இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் எழுப்பாத முக்கியமான கேள்விகள் குறித்து பார்ப்போம்.

1. போபால் மத்திய சிறைச்சாலையானது உச்ச கட்ட பாதுகாப்பு அம்சமுடைய சிறையாகும். தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பியாக கூறப்படுகிற கைதிகள் இந்த ISO தரச் சான்றிதல் பெற்ற சிறையிலிருந்து அவ்வளவு சுலபமாக எவ்வாறு தப்ப இயலும்?

2. சில ஊடகத் தகவலின்படி எட்டு கைதிகளும் சிறப்பு பாதுகாப்பு அரணுடைய தீவிரவாத தனிச் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது. அவ்வாறு இருக்கையில் வெறும் தட்டையும் ஸ்பூனையும் கொண்டு எவ்வாறு தப்ப இயலும்?

3. அதேபோல சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு விசாரணைக் கைதிகளும் ஒரே சிறையில் அடைக்கப்படிருந்தனரா?அல்லது வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தினரா? என்பது குறித்த முரண்பாடுகள் நிலவுகிறது.இதை தெளிவுபடுத்துவதில் போலீசாருக்கு உள்ள சிரமம்தான் என்ன?

4. வாதத்தின்பொருட்டு, அனைவரும் ஒரே சிறையில் அடைக்கப்படிருந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்படியானால் யாரின் உத்தரவின்பேரில் அனைவரும் ஒரே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டனர்? அதற்கான காரணம் என்ன?

5. சரி அனைவரும் ஒரே சிறையில் இல்லையென்றால் எவ்வாறு வெவ்வேறு சிறைகளில் இருந்து தப்ப இயலும்?

6. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் ஊடகத்திற்கு வழங்கிய விளக்கமென்னவென்றால், முதலில் ஒரு சிறையில் இருந்த கைதி, ஸ்பூனைக் கொண்டு சிறைக்காவலரை கொன்றுவிட்டு மரச்சாவியை வைத்து மற்ற சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்ததாக கூறுகிறார். ஷோலே என்ற பாலிவுட் படத்தில் வீருவும் குருவும் விரல்களை துப்பாக்கிகள் போல காண்பித்து சிறையில் இருந்து தப்புவார்கள். அநேகேமாக அமைச்சர் இப்படத்தை பார்த்திவிட்டு இம்முடிவுக்கு வந்திருப்பார் போல. மக்களை நம்பவைப்பதற்காக ஸ்பூனையும் மரச்சாவியையும் கொண்டு மத்திய சிறையில் இருந்து தப்பியதாக கூறுகிறார். திரைக்கதையை கொஞ்சம் மாற்றிக் கூறலாம்.

7. சரி, ஸ்பூனையும் தட்டையும்கொண்டு பாதுகாவலரை கொன்றதாகவே வைத்துக்கொள்வோம், ஏன் சிறையின் அபாயச் சங்கொலி எழுப்பப்படவில்லை? மற்ற பாதுகாவலர்கள் உடனே உஷாராகாத காரணம் என்ன?

8. எட்டு கைதிகளும் மூன்று வெவ்வேறு சிறைஅறைகளில் அடைக்கப்பட்டதாக சில தகவல்கள் வருகின்றது. அது அவ்வாறு இருப்பின், முதலில் சிறையை உடைத்து தப்பிய கைதி எவ்வாறு மற்ற இரு சிறைகளையும் சத்தமில்லாமல் உடைக்க முடியும்? மேலும் சிறைக்கதவின் சாவியோ ஜெயிலரிடம் மட்டுமே இருக்கிற நிலையில் யாரிடம் சாவிகளை கைப்பற்றி சிறைக்கதவை திறந்திருக்க இயலும்?

9. பெட்ஷீட்கள் போன்ற துணிகளை ஒன்றாகக் கட்டி இருபத்தைந்து அடி உயர சிறை மதிலை தாண்டியதாக சொல்கிறார்கள். சரி,மறுமுனையில் கட்டமாலும்,மதிலில் பிடிப்பு இல்லாமலும் ஒருபக்கத்தில் இருந்து துணிகளை மதிலில் போட்டு எவ்வாறு ஏற இயலும்? நமது பத்திரிக்கையாளர்கள் இது குறித்து ஏன் கேள்வியொன்றும் எழுப்பவில்லை?

10. மேலும் சிறை மதில் மதிலின் மேல் சக்திவாய்ந்த மின்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு கைதி கூட எவ்வாறு மின்சாரம் தாக்காமல் தப்பிக்க இயலும்?

11. ஒரு சிறைக்காவலர் கொலை,மற்றொருவர் காயம், எட்டு கைதிகள் தப்புதல் என மிகப்பெரும் சலசலப்பு நடந்த பிற்பாடு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்தான் அபாயச் சங்கொலி எழுப்பப்படுகிறது. ஏன் இந்த தாமதம்?

12. தப்பித்த விசாரணைக் கைதியில் ஒருவர், பலவீனமாக உடல் தகுதியுடன் உள்ளவர் என அவரின் வழக்கறிஞர் கூறுகிறார். அப்படி இருக்கையில் அவர் எவ்வாறு மதிலின் மேல் ஏறி தப்பியிருக்க இயலும்?

13. மேலும்,விசாரணைக் கைதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகாத நிலையில், உயிரை பணையம் வைத்து தப்பிக்கிற யோசனை எவ்வாறு வந்திருக்க இயலும்?

14. அதிக பாதுகாப்பு உள்ள சிறைகளில் பொதுவாக கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கும். வருடம் முழுவதும், இருபத்தி மணி நான்கு நேரமும் இயங்குகிற கேமாராக்களை, சிறைப் பாதுகாவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பார்கள். போபால் சிறையில் பாதுகாவலரைக் கொன்று சிறைக் கைதிகள் தப்பிய காட்சியை இதுவரை போலீஸ் ஏன் வெளியிடவில்லை? சிலநாட்கள் கழித்து, தப்பிய நாள் அன்று மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துவிட்டது எனக் கூறுவார்கள் பாருங்கள்!

15. கைதிகள் ஸ்பூனையும் தட்டையும் ஆயுதமாக பயன்படுத்தி தப்பியதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். அது அவ்வாறு இருப்பின் கைதுசெய்யாமல், துப்பாக்கிகளைக் கொண்டு சுடவேண்டிய அவசியம் என்ன?

16. கைதிகள் நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு போலீசாரை சுட்டதால் போலீஸ் திருப்பி சுட்டனர் என அமைச்சர் கூற்றுக்கு முரணாக போலீஸ் தரப்பு கூற்று உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் எந்த ஆயுதம் வைத்திருந்தாலும் என்கவுண்டர் செய்வது சட்டப்புறம்பானது என்கிறது உச்ச நீதிமன்றம்.

17. மோதல் தொடர்பாக முதலில் நம்பகத்தன்மையற்ற இரு வீடியோக்கள் வெளியிடப்பட்டது. முதல் வீடியோவில், ஐந்து கைதிகள் பேச விரும்புவதாக ஒரு போலீசார் கூறுவது கேட்கிறது. பிறகு எதற்காக அவர்களிடம் பேசாமல், சுட்டுக் கொல்லவேண்டும்?

18. இரண்டாவது வீடியோவில், சுட்டுக் கொல்லப்பட்டு கீழே கிடக்கிற சடலத்தின் ஆடையிலிருந்து அந்தத் துப்பாக்கியை எடு என ஒரு போலீசார் கூறுகிறார், அவரும் எடுக்கிறார். இது நாடகத்தின் உச்ச கட்ட காட்சியாக உள்ளது. கொல்லப்பட்டவரின் பாக்கட்டில் துப்பாக்கி இருக்கும் என்பது போலீசுக்கு எவ்வாறு தெரியும்? கைகளிலோ அல்லது அருகாமையலோ அல்லவா கைதியின் துப்பாக்கி இருந்திருக்க வேண்டும்? மேலும், பாக்கட்டில் துப்பாக்கி வைத்திருந்தவரை ஏன் சுட்டுக் கொல்லவேண்டும்?

19. அதே வீடியோவில், உயிர் இருக்கிற ஒருவரை கொல்லுகிற மனிதத்தன்மையற்ற காட்சி வருகிறது. காயம் பட்டு உயிர் இருப்பின் காப்பாற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் ஏன் கொடூரமாக கொல்ல வேண்டும்?

20. போலீஸ் தரப்பு கதைக்கு முரணாக, நேரடி சாட்சியாக அருகாமய் கிராம மக்கள் சொல்வது வேறாக உள்ளது. தப்பிவந்த கைதிகள் கற்களையும் மரக்கட்டைகளும் தூக்கி எறிந்து முழக்கம் போட்டதாக கூறுகிறார்கள். என்ன முழங்கினார்கள் என்று கேட்டால் தெரியவில்லை என்கிறார்கள். ஜப்பான் அல்லது ஹீப்ரு மொழியிலா கைதிகள் முழங்கியிருப்பார்கள்?

21. போலீஸ் தரப்பு கதைப்படி பார்த்தால், கைதிகள் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். சரி   சிறைக்குள் இருந்த அவர்களுக்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது? யார் உதவினார்கள்? உதவியவர்கள் ஏகே ரக துப்பாக்கிகள் தராமல் ஏன் வெறும் நாட்டுத் துப்பாக்கிகள் தர வேண்டும்? சரி துப்பாக்கிகள் கொடுத்தவர்கள் தப்புவதற்கு வாகனம் தயார் செய்யாமல் விட்டதேன்?

இதுபோல பல கேள்விகள் எழுகின்றன.இந்தியாவின் சோ கால்டு மீடியாக்கள் இது குறித்து எதுவும் பேசாமல், விஷயத்தை மூட்டை கட்டி நழுவிச் செல்கின்றன.

http://www.indiaresists.com/22-questions-bhopal-encounter-…/

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.