முகிலன்

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்  ஒருங்கிணைப்பு குழுவின்   கலந்தாய்வுக்  கூட்டம் நேற்று மாலை (01-11-2016)   புகழூரில்  விசுவநாதன்  அவர்கள் இல்லத்தில் ஒரம்புபாளையம். காளியப்பன்  அவர்கள்   தலைமையில்,   தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் அவர்களின்  வழிகாட்டலில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. மணல் கொள்ளையர்களால் நமது காவிரி ஆறு வேகமாக கொல்லப்பட்டுக் கொண்டு உள்ளது.  காவிரி ஆற்றில் கரூர் மாவட்டத்தில் கடம்பன்குறிச்சி  அரசு மணல் குவாரியில்  முறைகேடாகவும், மற்ற இடங்களில்  சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துபவர்களாகவும்  தமிழக பொறுப்பு  முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல், இப்பகுதியில் உள்ள கடம்பங்குறிச்சி மனோ ஆகியோர் இருந்து வருகின்றனர்.

இது பற்றி  பல்வேறு ஆதாரங்களுடன் பலமுறை கரூர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், வீடியோ ஆதாரமும் கொடுத்தும்   இதுவரை அவர்  எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கின்றோம்.

  1. தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் நடத்தும் மணல் கொள்ளைக்கு கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் முழு பாதுகாப்பாக இருந்து வருகிறார்.

கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் சட்டப்படி நடக்காமல், முழுக்க முழுக்க மணல் கொள்ளையர்களின் கூட்டாளி போல் இருந்து செயல்பட்டு வருகிறார். 

மணல் கொள்ளையர்களின் தலைவர் போல் செயல்பட்டு, ,  அனைத்து அரசு சட்டங்களையும், மணல்குவாரி விதிமுறைகளையும்  காலில் போட்டு மிதித்து, கடந்த 3 மாதத்தில் மட்டும்  சட்டவிரோத மணல் கொள்ளையால் அரசுக்கும் –மக்களுக்கும்  சுமார் 3000 கோடி ரூபாய்  இழப்பு ஏற்படுத்தியுள்ள  கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் கோவிந்தராஜ்  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  1. காவிரியில் மணல் கொள்ளையை தடுக்க போராடி வரும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த விசுவநாதன் அவர்களை புகழூரில்  வீடு புகுந்து 27-08-2016 &03-09-2016  ஆகிய நாட்களில்    கொலைமிரட்டல்  விடுத்த தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல், இப்பகுதியில் உள்ள கடம்பங்குறிச்சி மனோ ஆகியோர் மீது கரூர்  மாவட்ட செயல்துறை நடுவரான/ மாவட்ட ஆட்சி தலைவரான  கோவிந்தராஜ் அவர்களிடம் நேரில் 06-09-2016 அன்று  இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள்  புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும்  எடுக்காத நிலையே உள்ளது.

இரண்டு மாதங்கள் ஆகியும் கூட சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்த மறுக்கும்,   மாவட்ட செயல்துறை நடுவர்/ மாவட்ட ஆட்சி தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. 26-10-2016புதன்கிழமை அன்று  முறைகேடாக நடக்கும்   கடம்பன்குறிச்சி மணல் குவாரியை  பார்வையிட  அய்யா. நெடுமாறன்,  தோழர் . மகேந்திரன், தோழர்.முகிலன்   ஆகியோர் உடன்  150க்கும் மேற்பட்ட மக்கள் சென்றனர்.  எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்  கடம்பன்குறிச்சி மணல் குவாரிக்குள் வந்ததை வன்முறையாக்க திட்டமிட்டு,  மணல் கொள்ளை மாபியாக்கள் தங்களிடம் வேலை பார்க்கும்   அடியாட்களை சுமார் 10 பேரை  ஏவி விட்டு மக்கள் மீது கல்வீசி தாக்க செய்தனர்.

காவல்துறை பாதுகாப்போடு இந்த கல்வீச்சு நடைபெற்றது. இதை பத்திரிக்கையாளர் பலரும் நேரில் பார்த்தனர். படம் பிடித்து காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பினர். மணல் கொள்ளை மாபியாக்களின் அடியாட்கள்  கல்வீச்சு மற்றும் தாக்குதலில் திருக்காடுதுறை .ராசப்பன், கரூர்.தமிழ்கவி, புகழூர். விசுவநாதன், வேலாயுதம் பாளையம் .அண்ணாவேலு, வேலூர்.சதீசு, புங்கோடை சுப்பிரமணி வழக்கறிஞர். ராஜேந்திரன், திருக்காடுதுறை.சுப்பிரமணி, திருக்காடுதுறை முருகையன்,   புகழூர். கந்தசாமி ஆகியோரும், சில பெண் காவலர்களும் கூட  காயமுற்றனர். புஷ்பலதா, தமிழ்செல்வி,மாதேசுவரி உட்பட பல பெண்களை இழிவுபடுத்தி பேசியும், கொலைமிரட்டலும் விடுத்தனர் மாபியாக்களின் அடியாட்கள்.

தாக்கியவர்களுக்கு  காவல்துறை முழு பாதுகாப்பு கொடுத்தது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினரை  தாக்கியவர்கள் “கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் கோவிந்தராஜ் அவர்களும், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் எங்களோடு உள்ளனர். உங்களால் எங்களை  என்ன செய்ய முடியும்”  என்று சொல்லியே தாக்கியுள்ளனர். காவல்துறையினர் கண் முன்பே இந்த தாக்குதல் நடந்தும், தாக்கியவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருப்பதும்,  அவர்கள் மீது கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததும், எதுவுமே நடக்காதது போல்  எவ்வித நடவடிக்கையும் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் எடுக்காதது “காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும்  ரௌடிகளுக்காக”“ என்பதை இந்த நிகழ்வு  மேலும்  உறுதிபடுத்துகிறது.

வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் செட்ரிக் மானுவல் முன்னிலையிலேயே கடம்பன்குறிச்சி ஊருக்குள்  கரூர்.தமிழ்கவி தாக்கப்பட்டும் அவர் இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவரை பார்த்து  என்னால் என்ன செய்ய முடியும் யார் உங்களை இங்கு வரச் சொன்னார்கள்  என்று கூறியதும் அதிகாரிகள் என்ன மனநிலையில், உண்மையில் யாருக்காக செயல்பட்டு வருகின்றனர் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தி  காட்டிவிட்டது.

  1. கடமையை செய்யாமல் மணல்கொள்ளை மாபியாக்களின் கூட்டாளி போல் செயல்படும்   கரூர் மாவட்ட செயல்துறை நடுவர்/ மாவட்ட ஆட்சி தலைவர் கோவிந்தராஜ் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

 

கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை  அதிகாரிகள் மீது வெளிப்படையான விசாரணை செய்து  அரசு  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  1. அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் உடனே  பணிமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் மணல்கொள்ளை  மாபியாக்கள் (தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல், இப்பகுதியில் உள்ள கடம்பங்குறிச்சி மனோ ஆகியோர்) நடக்க இருக்கும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில.  அரவக்குறிச்சி தொகுதிக்குள் தங்களது அடியாட்களை வைத்து காவல்துறை, வருவாய்துறை, அதிகாரிகள் பாதுகாப்போடு   தொடர்ந்து கலவரத்தை ஏற்படுத்துவார்கள்,  என உறுதியாக நம்புகிறோம்.

மேலும்  அரவக்குறிச்சி தொகுதிக்குள்தான்  நான்கு புதிய மணல் குவாரியும் வருவதால் (கடம்பன்குறிச்சி, தோட்டக்குறிச்சி,  புகழூர்- தவுட்டுப்பாளையம்,  நடையனுர்-  கோம்புபாளையம்)  இந்த தொகுதிக்குள் உள்ள  அனைத்து ஊர்களிலும் உள்ள  மக்களை விலை பேசி, பணம் கொடுக்க முயற்சித்து  வருகின்றனர். இவர்களுக்கு காவல்துறை, வருவாய்துறையினர் முழு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பதுதான் நடக்கும்.

எனவே, தேர்தல் நேர்மையாக நடக்க,   அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை  அதிகாரிகளையும் உடனே  பணிமாற்றம் செய்ய வேண்டும்

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புகழூர் நீரேற்று பாசன சங்க தலைவர் கே.சி.ஆர்.சண்முகம் அவர்கள் வரவேற்று  பேசி தொடங்கி வைத்தார். வேலாயுதம் பாளையம் அண்ணாவேலு அவர்கள் நன்றியுரை ஆற்றி நிறைவு செய்தார். அனைத்து ஊர்களிலும் இருந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

முகிலன், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்.