மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது. அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 88பேருக்கும் மேல் மீட்கப்பட்டாலும், அந்த பேராபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலுக்கு இன்னும் மருந்து போட முடியவில்லை. மவுலிவாக்கத்தில் அடுத்தடுத்து விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களை அதிமுக அரசு வேடிக்கை பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் மக்களை நிலைகுலைய வைத்து விட்டது. அக்கட்டிடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் இன்றைக்கு சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகியிருப்பதையும், அந்த அடுக்குமாடிக் கட்டிடங்களில் வீடுகளை வாங்கி விட்டு தவிப்போரின் நிலை பரிதாபமாகவும், வேதனையாகவும் இருப்பதையும் உணர முடிகிறது.தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது. அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 88பேருக்கும் மேல் மீட்கப்பட்டாலும், அந்த பேராபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலுக்கு இன்னும் மருந்து போட முடியவில்லை. மவுலிவாக்கத்தில் அடுத்தடுத்து விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களை அதிமுக அரசு வேடிக்கை பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் மக்களை நிலைகுலைய வைத்து விட்டது. அக்கட்டிடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் இன்றைக்கு சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகியிருப்பதையும், அந்த அடுக்குமாடிக் கட்டிடங்களில் வீடுகளை வாங்கி விட்டு தவிப்போரின் நிலை பரிதாபமாகவும், வேதனையாகவும் இருப்பதையும் உணர முடிகிறது.

இந்த கட்டிட விபத்து ஏற்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயம்பட்டவர்களுக்கும் நான் ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்குரிய இழப்பீடும், நியாயமும் கிடைப்பதற்காகவும், இந்த விபத்தின் பின்னணியை நேர்மையாக விசாரித்து நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் தி.மு.கழகத்தின் சார்பில் எனது தலைமையில் எழுச்சிமிகு 12.07.2014 அன்று பேரணி நடத்தப்பட்டது. எழும்பூர் சி.எம்.டி.ஏ. அருகே உள்ள எல்.ஜி. சாலையில் இருந்து தொடங்கி, ராஜரத்தினம் விளையாட்டரங்கம் வரை பேரணி நடைபெற்றது. அதன் பின்னர் நானும் கழகத்தின் முன்னோடிகளும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அப்போதைய ஆளுநர் கவர்னர் ரோசைய்யாவிடம் நேரில் மனு அளித்து, “மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்று அன்று கோரிக்கை வைத்தேன். ஆனால் அதிமுக அரசோ அதற்கு உடன்படாமல் முறைகேடுகளை மறைப்பதற்கு முழு மூச்சுடன் செயல்பட்டது. அடுக்கு மாடிக் கட்டிட விபத்து குறித்து விசாரிக்க 03.07.2014 அன்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆர். ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை கண் துடைப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார். மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 04.08.2014 அன்று நான் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். அதே நேரத்தில், இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள, இன்று இடிக்கப்பட்ட அந்த ஆபத்தான அடுக்குமாடி கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கோரிக்கை வைத்தேன். இந்நிலையில், அதிமுக அரசு நியமித்த விசாரணை ஆணையம் 25.8.2014 அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கொடுத்த அந்த விசாரணை அறிக்கை முழுக்க முழுக்க மவுலிவாக்கம் கட்டிட விபத்திற்கு காரணமானவர்களையும், அதற்கு துணை போன அரசு அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கிலேயே அமைந்திருந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி அளித்த விசாரணை அறிக்கையைக் கூட சட்டமன்றத்தில் வைக்க மறுத்து அடம்பிடித்தது அதிமுக அரசு. ஆகவே எனது பொதுநல வழக்கு விசாரணையின் போது இது குறித்து உயர்நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டது. அப்போது, “விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவோம்” என்று அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ரகுபதியின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது அதிமுக அரசு.

அந்த அறிக்கை முழுமையான அறிக்கை அல்ல என்றும் தவறு செய்தவர்களைக் காப்பாற்றும் அறிக்கை என்பதையும் அப்போதே எடுத்துச் சொன்னதோடு, அந்த அறிக்கை குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதிக்காததால் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம். அப்போது செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டதற்கு, “நீதிமன்ற உத்தரவின் காரணமாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரகுபதியின் விசாரணை அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளன. அது முழுமை பெறாத அறிக்கையாக உள்ளது. சி.எம்.டி.ஏ. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட தகவல் அதில் இல்லை. விசாரணை கமிஷன் விதி 8-ன்படி இந்த விசாரணை நடக்கவில்லை. இடிந்து விழுந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு சில விதிமுறைகளை தளர்த்தி அரசு கட்டிட அனுமதி அளித்துள்ளது. மவுலிவாக்கம் கட்டிடப் பணி தொடங்கப்படும்போதே 2 சிறப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அது குறித்த விளக்கம் ஏதும் ரகுபதி கமிஷன் அறிக்கையில் இல்லை. விசாரணை கமிஷன் அறிக்கையின் பக்கம் 224-ல், மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளை வேகமாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஆளும் தரப்புக்கு சாதகமான அறிக்கை. ரகுபதி கமிஷன் அறிக்கை முழுமையாக இல்லாததால், அதன் இணைப்பு அறிக்கை வெளியிட வேண்டும் என்று சபாநாயகர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அளித்துள்ளேன். ஆகவே இது தொடர்பாக, தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்தேன்.

இதுபோலவே, இப்போது இடிக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிக்கவும் முதலில் முட்டுக்கட்டை போட்டது அதிமுக அரசு. நான் தொடர்ந்த வழக்கின் மூலமாகத்தான் இதற்கான சட்டப் போராட்டத்தையும் நடத்தினேன். உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உடனடியாக கட்டிடத்தை இடிக்க கோரியும், அதற்கு இரண்டு முறை கால அவகாசம் கேட்ட அதிமுக அரசிற்கு உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் கண்டனத்திற்கு பிறகு, “இன்னும் 20 நாட்களில் அந்த கட்டிடத்தை இடித்து விடுகிறோம்” என்று கடந்த 13.8.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஒப்புக் கொண்டது அதிமுக அரசு. அதன்படி இன்றைக்கு அந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டிடம், இப்போது இடித்த அடுக்கு மாடிக் கட்டிடம் எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடுகளை அரசு வழங்க முன்வரவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஆகவே எனது பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் வாயிலாக இன்றைக்கு அடுக்குமாடிக் கட்டிடத்தை இடித்திருக்கும் அதிமுக அரசு கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டாலும், மக்களின் பாதுகாப்புக் கருதி இந்தக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே போல் இந்த கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், இதில் அதிமுக அரசு மூடி மறைத்துள்ள அனைத்து முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த கட்டிடங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் அதிமுக அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.