பத்தி

மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!: கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி
கிருபா முனுசாமி

சமூகத்தின் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு, ஜாதிய, இன, நிற, மத, வர்க்க அடிப்படையிலான அடக்குமுறைகளுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆட்படும் ஒடுக்கப்பட்ட பெண்கள் அவைகளை இயல்பாக கடந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க, மற்றப் பெண்களோ தாங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனையைக் கூட ஏதோ இவ்வுலகமே ஒன்று திரண்டு தனக்கு துரோகம் இளைத்து விட்டது போல பெரியதாக உருவகப்படுத்தி, குருதி சொட்ட சொட்ட கதை வசனம் எல்லாம் எழுதி பரிதாபம் ஏற்படுத்தும் விதமாக ஒப்பாரி வைக்கின்றனர்.

இருக்க வீடு இல்லாது தெருக்களில் வசித்து, நாள் முழுக்க உழைத்தால் மட்டுமே ஒரு வேளை சோறு எனும் நிலையில் குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு எழும்புகள் தேய கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்களும்;

பிறப்பு முதல் ஒடுக்குமுறையை சந்தித்து, ஜாதியினால் அவமானப்பட்டு, வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை நகர்த்தி, படித்ததே வேலைக்கு செல்ல தான் என்ற சூழலில் படிப்பை முடித்த அடுத்த கணமே வேலைக்கு ஓடி, கடன் கட்டி, மாத வாடகையோடு மூன்று வேளை சோற்றிற்கே திண்டாடி, 30 வயது வரையிலும் காதல் கிட்டாது, திருமணம், ஆண் வாசம் என்பதே கனவாய் மாறி, அதை மீறி காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்ததோ கணவனை புரிந்துக்கொண்டு, புரியவைத்து அவர் வீட்டையும் சகித்துக் கொண்டு, குழந்தைகளை பெற்று, அவர்களை பார்த்துக்கொள்ள ஆளில்லாது, வேலையும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களும் கூட ஒரு போதும் இப்படியான கதை, வசனங்களை எழுவதில்லை.

ஆனால், திருமணம் ஆகும் வரை பெற்றோரின் அரவணைப்பு, படிப்பதே வேலைக்கு போகத்தான் என்பதில்லை, ஏதேனும் வேலை செய்தால் மட்டுமே வாழ்வாதாரம் என்றில்லை, விரும்பிய நபருடன் முன் இருபதுகளில் காதல் திருமணம், குழந்தை, திருமணம் முறிந்தாலும் பெற்றோர் வீட்டில் இடம், சமூக வலைத்தளம் என அனைத்தும் வாய்க்கப்பட்ட பெண்களின் கூக்குரல்களை பார்க்கும் பொழுது, தோழர் வே. மதிமாறன் எழுதிய “தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்” என்ற கட்டுரையில் இடம்பெறும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கதையே நினைவுக்கு வருகிறது. அது பின்வருமாறு:

“உண்மையில் துயரம் என்றால் என்ன? இதோ இந்தப் பெண்ணின் வாழ்க்கையே சாட்சி.

ஊருக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்து விட்டு, வீதியில் வாழ்கிற மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களில் ஒரு பெண். அவள் நிறைமாத கர்ப்பினி. நிறைமாத கர்ப்பத்தோடே கல் உடைத்தல், மண் சுமத்தல் என்று கடுமையான உடல் உழைப்பில் இருந்த பெண் அவள்.

கணவன், வேறு ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அன்றும் அவள் வழக்கம் போல் வேலைக்கு சென்று தன் இருப்பிடமான சாலைக்குத் திரும்பியிருந்தாள்.

இரவு நடுநிசியில் பிரசவவலி. யார் உதவியும் இன்றி ஒரு அனாதையைப்போல் பிரசவமான அவளுக்கு,
‘நீ அனாதை இல்லையம்மா, உன் உயிரின் உறவு நான் இருக்கிறேன் ’ என்று தன் அழுகையால் பதில் சொல்வது போல் குழந்தை பிறந்தது. மயக்கமானாள் அந்தத் தாய்.

நேரம் கழிந்தது. மயக்கம் தெளிந்து ஆசையோடு தன் குழந்தையை பார்க்கிறாள். குழந்தையின் தலையை நாய் கடித்துப் போட்டிருந்தது. பிரசவ வலியால் அவள் இட்ட கூக்குரலை விடவும், பல மடங்கு அதிகமாகக் கதறினாள்.

ஆனால், அவள் கதறலைக் கேட்பதற்குக் காதுகள் இல்லை. அந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க மனிதரும் இல்லை. கடவுளும் இல்லை. ஆம், அந்த இரவு விடிந்தது. அவளுக்கு மட்டும் இருண்டது.

இந்த சோகத்தால் மனம் உடைந்து அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டாள். பழையபடி தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

வெளியூர் சென்று இருந்த கணவனும் வந்து சேர்ந்தான். அவள் வாழ்க்கை நம்பிக்கையோடு நகர்ந்தது. விசேஷம் என்னவென்றால், அவள் மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.

வருமை தருகிற துயரங்களோடு அவள் வாழ்க்கை நகர்ந்தாலும், நம்பிக்கையோடு இருக்கிறாள். அதனால் தன் வாழ்க்கையை அதிகம் நேசிக்கிறாள்.”

இப்படியான பெரும் இன்னல்களை அனுபவிக்கும் பெண்களின் கதைகள் ஒருபுறம் என் நெஞ்சை உருக்க, மறுபுறம் ஏதோவொரு மனவேறுப்பாடு காரணமாக தங்கள் திருமணத்தை முறித்துக்கொள்ள நேரிடும் பெண்கள் அதில் தனக்கிருக்கும் பங்களிப்பை சிறிதும் ஒப்புக்கொள்ளாது, அதற்கான மொத்த பொறுப்பையும் ஆண்கள் மீது மட்டும் சுமத்தி, தன்னை நியாயப்படுத்தி கூக்குரல் இடும் போது, அந்த அழுகைகள் என் காதுகளைக் கூட எட்டுவதில்லை.

ஏனெனில், அவர்களின் திருமணங்கள் உயிர்ப்போடு இருக்கும் போதும் சரி, அது முறிந்த பிறகும் சரி, அந்த ஆணின் உரிமை எந்த அளவிற்கு மீறப்பட்டிருக்கிறது என்பதை தங்களின் ஒப்பாரிகள் மூலம் இப்பெண்கள் மழுங்கடித்து விடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும். சிறு வாக்குவாதம் வந்தாலும் உடனே குழந்தையை தூக்கி கொண்டு சென்றுவிடுவேன் என மிரட்டுவார்கள். அவரோடு ஏற்பட்ட மனக்கசப்பு என்பது அப்பெண்ணுடன் மட்டும் தானே தவிர, குழந்தையோடு இல்லை என்ற பக்குவமில்லாது ஒரு தந்தையாக அவரின் கடமையை ஆற்றவிடாமல் தடுப்பார்கள்.

அக்குழந்தையை தந்தையின் வாசமே இல்லாமல் பிரிப்பது, தந்தையை எதிரிப்போல அவதானிக்கும்படி குழந்தையை தவறாக வழிநடத்துவது, தந்தைக்கு அடிப்படையிலேயே இருக்கும் பார்வையிடல் உரிமையை மறுப்பது என பல வகைகளில் அந்த ஆணின் உரிமைகள் மறுக்கப்படும் தருணங்களில், அவள் பெண்ணாதிக்கம் செலுத்துபவளாகவே இருந்தாலும், அவை பேசப்படுவதே இல்லை.

இதுவே, மேற்கத்திய நாடுகளை எடுத்துக்கொண்டால், திருமணத்தை முறித்துக் கொண்ட ஆணும், பெண்ணும் அதன் பிறகு எத்தனை திருமணம் செய்துக்கொண்டாலும், அக்குழந்தைக்கு அவள் தான் தாய். அவர் தான் தந்தை. விடுமுறை நாட்களில் அம்மாவை பிரிந்து வாழும் அப்பாவுடன் அந்த குழந்தைகள் சுற்றுலா செல்வார்கள். அந்த குழந்தைகளின் பள்ளியில் நடக்கும் பெற்றோர் கூட்டங்களிலும் அவர்கள் இருவரும் சேர்ந்தே பங்கேற்பர்.

இது, இங்கே சாத்தியமா? “நான் வேண்டாம். என் குழந்தை மட்டும் வேண்டுமா?” என்று அந்த ஆணிற்கு குழந்தை பிறப்பில் சம்பந்தமே இல்லாதது போல கேட்கும் பெண்களே அதிகம். இதற்கு முற்போக்கு பெண்ணியவாதிகளும் விதிவிலக்கல்ல. இதன் பின்னிருக்கும் உட்பொருளை ஆராய்ந்தால், அது திருமணத்தை புனிதப்படுத்தி, ஒரு முறை ஒருவரோடு திருமணம் நடந்துவிட்டால் அது நிரந்தரமானது, அதை மாற்ற முடியாது. மீறி, ஒரு திருமணத்தை முறித்துக் கொண்டு வேறொரு திருமணம் செய்துக்கொள்வது ஒழுக்கமின்மை என்பதை முன்னிறுத்தும் மூடத்தனத்தின் ஒரு பரிமாணமே ஒழிய, வேறில்லை.

இதுபோன்ற காரணங்களினால் தான், கல்யாண ரத்து குறித்து பெரியார் பேசுகையில், ஒத்துப்போகாது என்பது உறுதியாகும் பட்சத்தில் அத்திருமணத்தை முறித்து கொள்ளும் ஆண்களின் உரிமையை பற்றியும் குறிப்பிடுகிறார். அவ்வுரை, “பெண் ஏன் அடிமையானாள்” நூலிலும் கிடைக்கப்பெறுகிறது.

ஆணாதிக்க எதிர்ப்பு என்பது ஆணை அடிமையாக்கி பெண்ணாதிக்க சமூகத்தை நிறுவுவதன்று. மாறாக பெண், ஆண் இருபாலரின் ஆதிக்கமும் இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.