“தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை அதிகரித்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் உறுதி செய்துள்ளன. குறிப்பாக சென்னையில் தனியாக வாழும் பெண்கள் சொத்துக்காக படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. குற்றச்செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறை, அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“சென்னையில் அடுத்தடுத்து 3 நாட்களில் 3 பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தனியாக வாழும் பெண்கள் ஆவர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள மாளிகையில் தனியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வரப் பெண்மணியான சாந்தி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அதற்கு அடுத்த நாள் மேற்கு மாம்பலத்தில் லட்சுமி சுதா என்ற வழக்கறிஞர் அவரது வீட்டில் வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் நேற்று கடத்திச் செல்லப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அத்துடன் நிற்காமல் அவரது உடலை அவரது வீட்டின் முன்பாகவே வீசி விட்டு கொலையாளிகள் தப்பி ஓடியுள்ளனர். இந்த 3 கொலைகளிலும்  கொலையாளிகள் யார் என்பதைக் கூட காவல்துறையினரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சென்னையில் தனியாக வாழும் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை கடந்த 5 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையிலுள்ள தனது மாளிகையில் வாழ்ந்து வந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ரோகிணி பிரேமகுமாரி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு இரு மாதங்கள் முன்பாக மார்ச் 3-ஆம் தேதி அதே எழும்பூரில் சாரதா என்ற 72 வயது மூதாட்டி அவரது வீட்டில் படுகொலை ஆனார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தங்கி மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்த சத்யா என்ற இளம் மருத்துவரை மர்ம மனிதர்கள் கொடூரமான முறையில் கொலை செய்தனர். அதற்கு முன் 2012ஆம் ஆண்டு திசம்பர் 2-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் தனியாக வாழ்ந்த  அருணா சீதாலட்சுமி என்ற மூதாட்டி கொல்லப்பட்டார். கடந்த ஜூன் மாதம் சென்னை ராயப்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் தனியாக வாழ்வதும், அவர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்களை பறிக்க மற்றவர்கள் முயல்வதும் தான் பெண்களின் படுகொலைகளுக்கு காரணம் என்றாலும் கூட, இதைக் காரணம் காட்டி காவல்துறையினர் அவர்களின் பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட முடியாது. சென்னையில் தனியாக வாழும் பெண்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி அவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்திருக்க வேண்டும். அந்தக் கடமையிலிருந்து சென்னைக் காவல்துறை தவறி விட்டது.

பெண்கள் தவிர 4 நாட்களில் 5 போக்கிலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 3 பேர் துரைப்பாக்கம் கண்ணகி நகர் காவல்நிலையத்திற்கு அருகில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்பதும், தொழில் போட்டியில் தான் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. துரைப்பாக்கம் காவல்துறையினர் தான் அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, கஞ்சா விற்க அனுமதி அளித்துள்ளனர். அவ்வகையில் அவர்களின் கொலைக்கு காவல்துறை தான் பொறுப்பு ஏற்கவேண்டும். இவர்கள் தவிர அரசு அதிகாரி ஒருவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று படுகொலை செய்திருப்பதைப் பார்க்கும் போது, சென்னையில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் சந்தேகமின்றி உறுதி செய்திருக்கின்றன.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் எடுத்துக் கொண்டால் கடந்த அக்டோபர் மாதத்தில் 163 கொலைகள் நடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், கொள்ளை, வழிப்பறி ஆகிய குற்றங்களும் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரம் கொள்ளைகள், வழிப்பறிகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. கொலைகளையும், கொள்ளை உள்ளிட்ட நிகழ்வுகளையும் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக காவல்துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் தமிழகக் காவல்துறைக்கு திறமை இல்லை என்பதல்ல… காவல்துறையின் திறனை  தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான். திறமையான அதிகாரிகளை  சரியான இடங்களில் நியமித்து சுதந்திரம் அளிப்பதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் உரிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்தவும், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.