என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு ஒருநாள் தடை விதித்திருப்பது ஜனநாயக இந்தியா, சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறியான என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கை:

“கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் தாக்குதல் குறித்த செய்தியை ஒளிபரப்பியதற்காக என்.டி.டிவி ஹிந்தி செய்திச் சேனலுக்கு மத்திய தகவல்- ஒலிபரப்பு அமைச்சகம் ஒருநாள் தடை விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய பாஜக அரசின் அவலங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது, ஊடகச் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது என ஜனநாயக விரோதச் செயல்கள் தொடர்கின்றன. தற்போது என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ‘நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா?’ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

திரு. நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற 2014 முதல் எடுத்து வரும் சில நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மக்களை இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து கவலையடைய வைத்துள்ளது. அரசை விமர்சிப்போர், எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் என தங்களுக்கு வேண்டாதோர் மீது ஒரு மறைமுக யுத்தத்தை நரேந்திர மோடி அரசு நடத்தி வருகின்றது. இதன் ஒரு வெளிப்பாடு தான் தற்கொலைச் செய்துக்கொண்ட 70 வயதான ஓய்வுப் பெற்ற இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்ட நடவடிக்கை அமைந்துள்ளது. இதே போல் தான் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அலைக்கழிக்க வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நடவடிக்கையும் அமைந்துள்ளது. ஜனநாயக இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறிகளாக இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆனால் இதே வேளையில் பதான்கோட் ஒளிபரப்பு விவகாரத்தில் வரம்புமீறல் இருந்தால் அதனைத் திருத்துவதற்கும் கண்டிப்பதற்கும் பல்வேறு வழிமுறைகள் உள்ள நிலையில் 24 மணி நேரம் ஒரு செய்தி தொலைக்காட்சி அலைவரிசையை முடக்குவது என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் ஊடகத்தின் கழுத்தை நெறிப்பதாக உள்ளது. அரசை விமர்சிக்கும் ஏனைய ஊடகங்களும் இந்த நடவடிக்கையைப் பார்த்து அஞ்சவேண்டும் என்ற வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

சங்பரிவார அமைப்பினரால் ரசிக்க முடியாத உண்மைகளை தம் எழுத்துக்களால் வெளிப்படுத்திய கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்பெருக்கி, நாரயண் தபோல்கர் முதலியோர் கொல்லப்பட்ட போதும் மத்தியில் ஆட்சியில் இருப்போரின் நடவடிக்கைகளை விமர்சிப்போருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வேளைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வெடிகுண்டுகளை வீசியபோதும் மவுனம் காத்த மோடி அரசு தற்போது தேசப் பாதுகாப்பு எனக் கூறி ஊடகங்களை முடக்குவது ஏற்புடையதாக இல்லை.

எனவே, மத்திய அரசு என்.டி.டிவி செய்தித் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட ஒரு நாள் தடையை உடனே திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.