திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயினான இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் விவசாயத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் இந்தாண்டு வராமல் இருந்துள்ளது. இதனால் பயிர்கள் கருகி சுமார் 4 ஏக்கர் நிலமும் முற்றிலும் பாதிப்பிற்குள்ளானதால் அடுத்த என்ன செய்வதென்று புரியாமல் வேதனையில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார். வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற சோகம் அவரை தூங்க விடாமல் வைத்துள்ளது. வீட்டில் உள்ளவர்களிடம் இதுகுறித்து சொல்லி வேதனையும் அடைந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 1-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அக்கம்பக்கத்தில் கோவிந்தராஜை உறவினர்கள் தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேடுகையில், வயலில் கோவிந்தராஜ் இறந்த நிலையில் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் கோவிந்தராஜ் விஷம் அருந்தியே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

பயிர்கள் வாடியதால் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்தே விவசாயி கோவிந்தராஜ் இந்த முடிவை எடுத்ததாக அவரது உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர். ஆனால் இது சந்தேக மரணம் எனக் கூறி காவல்துறை விசாரித்து வருகிறது.