சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கைத் தமிழ்க் கவிஞர் லதாவின் புதிய கவிதைத் தொகுப்பு “யாருக்கும் இல்லாத பாலை” க்ரியா வெளியீடாக வந்துள்ளது. 57 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு முழுவதும் வார்த்தைகள் காட்சிகளாய் நம் கண்முன் விரிவதை உணரலாம். பகட்டற்ற, சாதாரண வார்த்தைகளைக் கொண்டு, எளிமை நிறைந்த அழகியலோடு கவிதைகளைப் படைத்துள்ளார். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையைப் போலவே, இவரது கவிதைகள் போரின் வலியையும் துயரத்தையும் சொல்வதினூடே சக மனிதர்கள் மீதான நேசத்தையும், காதல், காமம் என்று வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் கவித்துவமாகச் சொல்கின்றன. போரின் உக்கிரத்தையும் அவலத்தையும் வெளிப்படுத்தும் கவிதையில் இழையோடும் எள்ளல் தொனியும், பெண்ணிய அரசியலைப் பேசும் கவிதைகளில் பயன்படுத்தியிருக்கும் நுட்பமான மொழியும் இவரது எழுத்தின் முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

இத்தொகுப்புக்கு எம்.ஏ.நுஃமான் எழுதிய பின்னுரையில் ”லதாவின் எளிமை, மயக்கும் எளிமை” என்பதுடன் “சாதாரண மொழியை அசாதாரணமாக்கும் திறமை லதாவுக்குக் கைவந்திருக்கின்றது. இதுவே அவரது கவிதையின் பலம்” என்றும் குறிப்பிடுகிறார். மேலும், “நேசத்துக்கும், வெறுப்புக்கும் இடையில் பயணிக்கின்றன லதாவின் கவிதைகள். வன்முறையின் குரூரம் நிறைந்த உலகில் நேசத்தைப் பாடும் இத்தகைய கவிதைகள் ஆறுதல் தருவன” என்றும் குறிப்பிடுகிறார்.

யாருக்கும் இல்லாத பாலை (கவிதைத் தொகுப்பு) – லதா
விலை: 110
பக்கங்கள்: 96

தொடர்புக்கு;
க்ரியா பதிப்பகம்
எண் 2/25, 17ஆவது கிழக்குத் தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை- 600041.
கைபேசி: 7299905950
மின்னஞ்சல்: creapublishers@gmail.com

க்ரியா புத்தகக் கடை,
எண் 116/10, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர்,
சென்னை.
கைபேசி: 9551661806.