இழுவை வலை மீன்பிடிப்பு முறைதான் இந்திய, இலங்கை மீனவர் பிரச்னைக்கு பிரதானக் காரணம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்திய-இலங்கை மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் டெல்லியில் சனிக்கிழமை இரு நாட்டு வெளியுறவுத்துறை, வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுமந்திரன் எம்.பி., கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக  செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

பாக் நீரிணையில் மீன் பிடிப்பது நீண்ட கால பிரச்னையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இலங்கை, இந்திய அரசு தூதுக் குழுக்கள் இடையே சனிக்கிழமை நீண்டநேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. உயர் மட்ட அளவிலான இப்பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணக்கூடியதாக அமைந்திருந்தது. இப் பேச்சுவார்த்தையின்போது மடிவலையை உபோயேகித்து மீன் பிடிக்கும் இழுவைப் படகு முறை (பாட்டம் டிராலிங்), இரு நாடுகளின் கடல் எல்லையை இருநாட்டு மீனவர்களும் தாண்டுவதால் உருவாகும் சர்ச்சை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் கைதாவது குறித்தும், இலங்கை சிறையிலிருந்து இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதும் குறித்தும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய சிறையில் வாடும் இலங்கை மீனவர்கள் மூவரை விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என இலங்கை தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

மடிவலையை உபயோகித்து இழுவை படகுகளால் மீன் பிடிக்கும் முறை கடலின் அடித்தளத்தை முற்றாக பாதிக்கிறது என்பதை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தையின்போது சில புகைப்பட விளக்கங்களைக் காண்பித்தும் விளக்கினேன். இந்த மீன்பிடி முறையால் பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல் வளங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மீன் உற்பத்தியாவது அடியோடு நிறுத்தப்படும்.

எனவே, எதிர்காலத்தில் பாக் நீரிணையில் மீன்பிடித் தொழில் செய்ய வேண்டுமானால் மடிவலையை உபயோகித்து மீன்பிடிக்கும் முறை தடுக்கப்பட வேண்டும். மடிவலை உபயோகித்து மீன் பிடிக்கிற படகுகள் இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 1,000 படகுகள் வரை இலங்கை கடல் பகுதிக்கு வந்து செல்கின்றன.

ஒரு தரப்பு மீனவர்கள் பிற நாட்டு கடல் எல்லையில் மீன் பிடிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை பிரதானமாக, பூதாகரமாக உருவெடுக்கக் காரணம் மடிவலையை உபயோகித்து இழுவை படகுகள் மூலமாக செய்கிற மீன்பிடி முறைதான். இப் பிரச்னை இலங்கை மீனவர்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழக மீனவர்களைக்கூட பாதிக்கிறது. இழுவை படகுகளில் வேலை செய்கிறவர்கள் மீனவத் தொழிலாளிகள். இழுவை படகுகள் சாதாரண மீனவர்களின் வலைகளைச் சேதப்படுத்துகிறது. பாரம்பரிய மீன்பிடி முறையை பாதித்துள்ளது. எனவே இந்த இழுவை படகு முறைதான் மீனவர் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இழுவை படகு முறை நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய அரசும் கருத்தில் கொண்டுள்ளது.

இழுவை, மடிவலை படகு பிரச்னை 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை முறையாக கையாண்டால் மீனவர் பிரச்னையில் 90 சதவீதம் தீர்க்கப்பட்டுவிடும். இதனால் இந்த கருத்து இலங்கைத் தரப்பில் இருந்து தொடர்ந்து வலிறுத்தப்படுகிறது.

இரட்டை மடிவலை பயன்பாட்டை நிறுத்துவதற்குத்தான் 3 ஆண்டுகால அவகாசத்தை இந்திய மீனவர்கள் கோரியுள்ளனர். அவ்வாறு 3 ஆண்டுகள் தொடர்ந்து அனுமதித்தால் மீன்பிடி தொழில் முடங்கிப்போகும். நீடித்த மீன்பிடித்தல் முறையில்தான் இலங்கை நம்பிக்கைக் கொண்டுள்ளது. மீனவர் பிரச்னைக்கு இழுவை வலை மீன்பிடிப்பு முறையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் விசை படகுகளை யார் வைத்திருக்கின்றனர் என்பது குறித்து எனக்கு தெரியாது. கச்சத்தீவு விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விரைவில் விடுக்கப்படுவார்கள் என நம்புகிறேன்’ என்றார் சுமந்திரன்.