நவம்பர் புரட்சியின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டமானது தலைநகர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

உலகத்திலேயே ஆயுதப்புரட்சியின் மூலம் முறையான சோசலிச அரசை இரசியாவில் நிறுவி, நூறாண்டுகள் ஆவதையொட்டி நாளை உலகம் முழுவதும் கம்யூனிச கட்சிகள், இடதுசாரி அமைப்புகளின் சார்பில் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.

சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் இன்று ஞாயிறு மாலையில் பறையிசை, டிரம்சு ஆகிய இசைக்கருவிகளின் மீட்டலுடன் புரட்சிகரப் பாடல்களும் முழங்க நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சிவப்பைக் கொண்டாடுவோம் எனும் இந்நிகழ்ச்சி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில், நாளை மாலை 4 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில், நவம்பர் புரட்சி நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாசு காரத், மூத்த தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, இ.பொ.க.(மா) மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன், கல்வியாளர் வே.வசந்திதேவி, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் இராஜூமுருகன் ஆகியோர் முதன்மையாகப் பங்கேற்கின்றனர். முன்னதாக, அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் ஜி. ராமகிருஷ்ணன் கொடியேற்றிவைப்பார் என இ.பொ.க.(மா) செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்நிகழ்வையொட்டி, சோவியத் கம்யூனிஸ்ட் (போல்செவிக்) கட்சியின் வரலாறு எனும் நூலின் மறுபதிப்பும் வெளியிடப்படுகிறது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி 7.11.2016 காலை 10.00 மணிக்கு நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முத்தரசன் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், “ மாபெரும் அக்டோபர் சோசலிச புரட்சி என வரலாற்றில் அறிவிக்கப்பட்ட ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டு நவம்பர் 7 ல் துவங்குகிறது. அக்டோபர் புரட்சி என அழைக்கப்பட்ட இப்புரட்சி கால சூழலில் காலண்டர் மாற்றபடி நவம்பர் புரட்சி என அழைக்கப்படுகிறது. 1917ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர் தோழர் லெனின் வழிகாட்டுதலில் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கைபற்றிய நாள் இது. இதனைதான் பாரதி யுகபுரட்சி என வரவேற்றார். தாகூர், நேரு, பெரியார், சிங்காரவேலர் என பல மேதமை பொருந்திய பெரியோர்களால் வாழ்த்தி வரவேற்ற புரட்சி இது. அக்டோபர் புரட்சி வாகைசூடிய முதல் நாளில் லெனின் சமாதானம் குறித்து முதல் கையெழுத்திட்டார். விவசாய நிலங்களை அரசுடமையாக்கி உத்தரவிட்டார். ஜார்மன்னன், பிரபுகள் ரஷ்புதின் போன்ற மாந்திரவாதிகள் போன்றோரின் சொத்துக்கள் யாவும் நாட்டுமை செய்யப்பட்டது. நீர், மின்சாரம், தாய்மொழி கல்வி, மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் என ரஷ்ய மாபொரும் முன்னேற்றம் கண்டது. கனரக தொழில், பாதுகாப்பு துறை, விண்வெளி ஆய்வுகள் என பல துறைகளில் நாடு முன்னேறியது. இரண்டாம் உலக யுத்தத்தில் 2 கோடி மக்களை பலி கொடுத்து பாசிசத்தை வீழ்த்தி உலக யுத்தத்திற்கு முடிவு கட்டியது. 1917 க்கு பின் உலக விடுதலை இயக்கங்கள் அனைத்தையும் ஆதரித்தது. இந்திய விடுதலை இயக்கங்கள், சீனபுரட்சி, பாலஸ்தீனம்,தென் ஆப்பரிக்கா விடுதலை, காங்கோ, அங்கோலா என அனைத்து விடுதலை இயக்கங்களையும் ஆதரித்தது. இன்று உலக வரைபடத்தில் சோவியத் சிதறியிருக்கலாம். அன்று அது தொடங்கி வைத்த சமாதானம் சகவாழ்வு பாட்டாளி வர்க்க சர்வ தேசியம் எனும் அரசியல் மொழிவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ரஷ்ய புரட்சி வெற்றியிலும், சோவியத் வீழ்ச்சியிலும் உலக கம்யூனிஸ்டுகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பாடங்கள் கற்று அக்டோபர் புரட்சியின் மாபெரும் முன்மொழிவுகளை முன்னெடுக்கும். சுரண்டலற்ற, ஆதிக்கமற்ற சமத்துவ சமுகம் காணும் நோக்கில் நாடும், மனிதகுலமும் முன்னேற வாகைச்சூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கலை இலக்கியக் கழகம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நான்கு இடங்களில் 7ஆம் தேதி மாலையில் தெருமுனைக் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சென்னை : அம்பேத்கர் திடல் அருகில், சேத்துப்பட்டு, கும்மிடிப்பூண்டி- சிவம் ஜி.அர். மண்டபம், ரெட்டம்பேடு சாலை, காஞ்சிபுரம்- ஐயங்கார் குளம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் ஆகிய இடங்களில் நிகழ்வு நடக்கிறது.