மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வறட்சி காரணமாக விதைத்த நெல் விளையாததால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் உயிரிழந்ததால் ஏற்பட்ட துயரம் விலகும் முன்பே, பயிர்கள் காய்ந்ததால் மேலும் 2 விவசாயிகள் அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து இறந்துள்ளனர். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இந்த துயர முடிவு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன் என்ற என்ற விவசாயி அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சம்பா நேரடி விதைப்பு செய்திருந்தார். ஆனால், காவிரியில் தண்ணீர் வராததாலும், பருவமழை பெய்யாததாலும் நெற்பயிர்கள் கருகிவிட்டன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வயலுக்கு சென்ற அழகேசன் பயிர்கள் கருகிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த கீழ் திருப்பந்துருத்தியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்ற விவசாயி 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்திருந்தார். காவிரியில் தண்ணீர் வராததால் அவரது பயிரும் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாத ராஜேஷ் கண்ணன் அவரது வயலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி விவசாயி கோவிந்தராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘‘அண்டை மாநிலமான கர்நாடகமோ மனிதாபிமான அடிப்படையில் கூட காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது. இவற்றுக்கு அப்பாற்பட்ட சக்தியான இயற்கையாவது வடகிழக்குப் பருவமழையாவது நன்றாக பெய்து உழவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் முதல் வாரம் நிறைவடையவுள்ள சூழலில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியாக மழை இல்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில், காவிரியில் தண்ணீர் வந்து சம்பா பயிரைக் காப்பாற்றும் என்று நம்பியிருப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டால் தமிழகம் முழுவதும் வறட்சியும், தமிழக உழவர்கள் வாழ்க்கையில் வறுமையும் தான் தாண்டவமாடும். அத்தகைய சூழலில் விவசாயிகளின் தற்கொலையை ஆண்டவனே நினைத்தாலும் தடுக்க முடியாது’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால், இப்போது நிலைமை மேலும் மோசமாகி வாடிப்போன பயிர்களை காண சகிக்க முடியாமல் 2 விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களின் நிலை மிகவும் மோசமாகவும், உயிரைப் பறிக்கும் அளவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலும் இருப்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. திருவையாறை அடுத்த கீழ் திருப்பந்துருத்தி மிகவும் வளமான பகுதியாகும். அங்கு காவிரி உள்ளிட்ட 5 ஆறுகள் பாய்கின்றன. அந்த பகுதியிலேயே பயிர்கள் கருகுகின்றன என்றால் காவிரி பாசன மாவட்டங்களின் பிற பகுதிகளில் சம்பா பருவ நெல் பயிர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

விவசாயிகளின் தற்கொலையாக இருந்தாலும், அதிர்ச்சி உயிரிழப்பாக இருந்தாலும் அதற்கு காரணம் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், அது குறித்த கவலையும் தான். சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், உழவர்களின் கவலையை போக்குவதன் மூலம் மட்டும் தான் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதையும், அவர்களே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வதையும் தடுக்க முடியும். உழவர்களின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவது தான் இதற்கு ஒரே தீர்வாகும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளர்ச்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த கேரளமும், 90% கர்நாடகமும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை வறட்சி மாதித்த மாநிலமாக அறிவிக்க எந்த தடையும் இல்லை. அதுமட்டுமின்றி, உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியில் உயிரிழந்த இரு உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.