என்டிடிவி நிறுவனத்தின் இந்தி ஒளிபரப்புக்கு நரேந்திர மோடி அரசு ஒரு நாள் தடை விதித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இதற்குத் தமிழக ஊடகங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொறுப்புப் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம் இருவரும் ஞாயிறன்று (நவ.6) வெளியிட்ட அறிக்கை:

ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தொடர்தாக்குதல்களின் புதிய பதிப்பாக, என்டிடிவிதொலைக்காட்சி நிறுவனத்தின் மீதுஒரு ஒடுக்குமுறை நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. அதன்படி, வருகிற 9ம் தேதியன்று அந்த நிறுவனத்தின் இந்தி மொழிப்பிரிவு ஒரு நாள் முழுக்க தனது நிகழ்ச்சிகள் எதையும் ஒளிபரப்பக் கூடாது என்றுதடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டுஜனவரியில் பதான்கோட் முகாமை தீவிரவாதிகள் தாக்கியபோது அந்த நிறுவனம் ஒளிபரப்பிய காட்சிகளைக் காரணம் காட்டி இந்த முடிவை அமைச்சகங்கள் குழு எடுத்து, அதற்கான ஆணையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை பிறப்பித்துள்ளது.

ஊடகச் சுதந்திரத்திற்காக நிற்கிற தமுஎகச அதே வேளையில் ஊடகங்களின் பொறுப்பையும் வலியுறுத்துகிறது. ஆனால், மத்திய பாஜக அரசு ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒரு நாள் ஒளிபரப்புக்குத் தடை என்கிற ஆணை பக்குவமான அணுகுமுறையைக் காட்டுவதாக இல்லை. குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அதே சட்டவிதியின் கீழ், இதை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று அதன் ஆணைப்படி செயல்படுகிற எண்ணம் ஏன் அரசுக்கு ஏற்படவில்லை? இதை யோசிக்கிறபோது, இது குறிப்பிட்ட ஒளிபரப்புக்கான நடவடிக்கை என்பதை விட, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அரசை விமர்சிக்கக்கூடிய ஊடகங்களை வாயடைக்கச் செய்கிற உத்தியாகவே, மறைமுக அவசரநிலை ஆட்சி போன்ற கட்டளையாகவே தோன்றுகிறது. இதனை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு உடனடியாக இந்தத் தடையாணையை விலக்கிக்கொள்ளவும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

இது ஒருபுறமிருக்க, பிற ஊடக நிறுவனங்கள், குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள், இது தொடர்பாகக் கடைப்பிடிக்கிற மவுனம் வருத்தமளிப்பதாக இருக்கிறது. இந்த மவுனமே ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு சாதகமாகிறது என்பதை ஊடக நிறுவனங்கள் புரிந்துக்கொள்ள வேண்டாமா? வேறு ஒரு நிறுவனத்தின் பிரச்சனை என்று பார்க்காமல், இதற்கு ஒருஅடையாளப்பூர்வ எதிர்ப்பை, குறைந்தது ஒரு மணி நேர வேலைநிறுத்தம் போன்றதொரு செயல்பாட்டின் மூலம் வெளிப்ப டுத்த ஊடக நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று தமுஎகச கேட்டுக்கொள்கிறது.