நவம்பர் புரட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு நவ.7ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், கல்வியாளர் டாக்டர் வே. வசந்தி தேவி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக திங்களன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் செங்கொடியை மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்றினார். இதுபோல தமிழகம் முழுவதும் நவம்பர் புரட்சி தினவிழா கொடியேற்றம், சிறப்பு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடைபெற உள்ளதாக சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.