சந்திர மோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

நவ.10 முதல் ரூ.500, ரூ.1000 கரன்சி நோட்டுக்கள் செல்லாது என திடீரென பிரதமர் மோடி அறிவித்துவிட்டார். இரண்டு நாட்கள் ஏடிஎம் இயங்காது. வங்கிகளும் இயங்காது.

வங்கிகள் திறந்த பின்னர், ரூ.4000 வரை ஆதார் அட்டை காட்டி சில்லறை நோட்டுக்கள் மாற்றிக் கொள்ளலாம். ATM களில் நாளொன்றிற்கு ரூ.2000 மட்டுமே, வங்கிகளில் வாரத்திற்கு ரூ.20,000 மட்டுமே இனிமேல் எடுக்க வேண்டும்.

கூடுதலான பணம் என்றால் அக்கவுண்டில் போட்டு மாற்ற வேண்டும். புதிய 500 , 2000 ரூபாய் நோட்டுக்கள் இனி வாங்க வேண்டும். டிசம்பர் இறுதி வரையில், ATM களும், வங்கிகளும் நிரம்பி வழியும். அங்கு மக்கள் கோபங்கள் கொதித்து எழும் அபாயமும் உள்ளது.

மக்கள் தடுமாறுகின்றனர், வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர்!

100 ரூபாய் நோட்டுக்கள் இல்லாதவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் தடுமாறுகின்றனர். வழக்கமாக பணப்பரிவர்த்தனைக்கு உள்ளான நோட்டுக்கள் செல்லாது என்பதால், பீதியடைந்த வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர். பெட்ரோல் பங்குகளைக் கூட மூடிவிட்டனர்.

புரட்சிகரமான கருப்பு பணம் ஒழிப்புத் திட்டம் என பாரதீய சனதா கட்சியினர் பீற்றத் துவங்கிவிட்டனர். இனிமேல் ரூ.100, ரூ.50 கூடச் செல்லாது எனச் சொல்லி விடலாம்.

பொருளாதார அறிஞர்கள், நடுத்தர வர்க்க மேதைகள் மற்றும் பாஜக- பார்ப்பனீய ஊதுகுழல்கள் மக்களுக்கு பொருளாதார அறிவுரைகளை/அடிப்படைகளை போதிக்கிறார்கள். ” கணக்கில் காட்டப்படாமல் “புரளும் பணம்” (Liquid Cash) தான் “விலை உயர்வு” உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். பணம் நிறைய புழக்கம் இருப்பதால் தான் விலை உயர்கிறது என்கிறது பொருளாதார பாடம். மோடியின் அதிரடி நடவடிக்கையால் வியாபாரிகளின் கருப்பு பணம் பிடிபடும், விலைகள் குறையும் ” என ஜோசியம் சொல்கின்றனர். அவர்களது அறிவாற்றல் மூலமாக மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்.

உழைக்கும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. தொழிலாளர்களிடம் பணம் இல்லை; ஆனால் , விலை ஏன் குறையவில்லை என்பதற்கு இவர்களது பொருளாதார பாலபாடத்தில் பதில்கள் இல்லை.

மக்கள் ATM களில் அலைமோதுகின்றனர். ரூ.400 வீதம் 100 ரூபாய் நோட்டுக்களை எடுக்க நீண்ட வரிசையில் நிற்கின்றனர். சண்டை போட்டு கொண்டு இருக்கின்றனர். ஒரே நாள் இரவில் நாட்டு மக்களை பைத்தியக்காரர்கள் போல் மாற்றி விட்டார், மோடி.

இந்த நடவடிக்கை மூலமாக கருப்பு பணம் எல்லாம் வெளியே வந்துவிடுமா?

  1. கருப்பு பணம் எல்லாம் வெறும் கரன்சி நோட்டில் தான் இருக்கிறது என நாங்கள் நம்ப வேண்டுமா?
    பணக்காரர்கள் கணக்கில் வராத கருப்பு பணத்தை அசையா சொத்துக்கள், நிலங்கள், கட்டிடங்கள், வாகனங்கள், நகைகள் எனப் பல்வேறு வகைகளில், இந்தியாவில் உள்ள 48,000 கோடீஸ்வரர்களும் பதுக்கி வைக்கவில்லை என்கிறீர்களா?

  2.  சுமார் 50 டிரில்லியன் ரூபாய், அதாவது 50 இலட்சம் கோடிகளிலிருந்து, 70 இலட்சம் கோடிகள் வரை ஸ்விஸ் வங்கிகளில் கருப்பு பணம் இருப்பதாக சொல்லப்படுகிறதே! அதை எப்படிக் கைப்பற்றுவீர்கள்? அல்லது அங்கு இல்லாதது போல நடிக்கிறீர்களா?

  3. இந்தியாவின் கரன்சி வடிவிலான பணப்புழக்கம் ரூ.75,000 கோடி மட்டுமே என பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்களே! அதை முறைப்படுத்தினால் கூட எவ்வளவு தான் கருப்பு பணம் கிடைக்கும்? ஸ்விஸ் வங்கிகளில் உள்ள 70 இலட்சம் கோடிகளைக் கைப்பற்ற வழி என்ன? மறைக்கிறீர்களே!

  4. பெரிய நோட்டுக்களில் தான் கருப்பு பணம் புழங்குகிறது, எனவேத் தடை என்றால்…..
    ஏன் ரூ.2000 நோட்டு வெளியிட்டுள்ளீர்கள்? மக்களை முட்டாள்கள் ஆக்குகிறீர்களா?

கார்ப்பரேட்டுகளின் நாயகன், கருப்பு பண பதுக்கல்காரர்களின் நண்பன், புதிய வேடம் போட்டு வருகிறார்! பராக்! பராக்! எச்சரிக்கை! எச்சரிக்கை!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.