அருண் நெடுஞ்செழியன்

 

வாரக் கடன்:

இந்தியப் பெரு முதலாளிவர்க்கத்திடம் இருந்து சுமார் 7 1/2 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது.அதன் முதல் நான்கு இடங்களில் முறையே

ரிலயன்ஸ் அனில்அம்பானி -1.21 லட்சம் கோடி

ரிலயன்ஸ் முகேஷ் அம்பானி -1.87 லட்சம் கோடி

எஸ்ஸார் குழுமம் -1.01 லட்சம் கோடி

அதானி குழுமம் – 0.96 லட்சம் கோடி

உள்ளது.

நாளது வரை,இந்தக் தொகையை வசூலிக்கிற நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக, ஆளும் அரசோ கடனை தள்ளுபடி மட்டுமே செய்துவருகிறது …

ஒட்டுமொத்த ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்திய வங்கிகளில் மட்டுமே இவ்வாறன மட்டமான வாரக் கடன் நிலைமைகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது.

இதை முறைப்படுத்த முனைந்த ராஜனை தூக்கி வீசிய மோடி அரசுதான் தற்போது கறுப்புப் பணத்தை மீட்பதாக மார் தட்டுகிறது …

மோடியின் அறிவிப்பு:

நேற்றைய மோடியின் அறிவிப்பு 500 /1000 ரூபாய் பண நோட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையே அன்றி கறுப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கை அல்ல:

ஒரு பொருளின், சரக்கின், கருத்தளவிலான மதிப்பின் தெரிவிப்பே பணம். அதை சட்டமுறைகள் ஒழுங்குபடுத்துகின்றன. இந்த மதிப்பின் தெரிவிப்பை, அளவு வழிப்பட்ட வகையில் எத்தனை ஈவுக்களாக வேண்டுமென்றாலும் வசதிக்கேற்ப ரிசர்வ் வங்கி பிரிக்கிறது.

ஒரு ருபாய் முதல் ஆயிரம், இரண்டாயிரம் வரை.இந்த ஈவுக்களின் அளவு வழிப்பட்ட மாற்றத்தை,அதாவது ஆயிரம் ருபாய் நோட்டுகளை ஒழித்து இரண்டாயிரத்தை அறிமுகப்படுத்துவது, அல்லது மூவாயிரம் ரூபாய்களை அறிமுகப்படுத்துவது என்பது, பண வடிவில் ஏற்படுத்தப் படுகிற சாதாரண மாற்றமே.

நேற்றைய குறிப்பான அறிவிப்பு, புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாயை ஒழித்து,இரண்டாயிரம் ருபாய் நோட்டை அறிமுகப்படுத்துவது, புழக்கத்தில் உள்ள ஐநூறு ருபாய் நோட்டுக்கு மாற்றீடாக புதிய நோட்டை அறிமுகப்படுத்துவது அவ்வளவே. இதில் கறுப்புப் பணத்தை மீட்கிற சமாச்சாரத்தை இணைப்பது மோடியின் பச்சை அயோக்கியத்தனம்,பச்சை பொய்.நாட்டின் உயர் பொறுப்பு மிக்க பதவியில் உள்ள ஒருவர், இவ்வாறு உண்மைக்கு மாறாக மக்களிடத்தில் பச்சை பொய்யை கட்டவிழ்த்ததற்க்கு பொறுப்பேற்கவேண்டும்.

வருமான வரி சட்டகத்திற்குள் வராத ரொக்கப் பணமான கருப்புப் பணம்,வெளிநாட்டு வங்கிகளில் (சுவிஸ்,பனாமா) தூக்கம் போடுகிறது, நிலமுதலீடுகளில் உள்ளது, நகை ஆபரணத்தில் மாறியுள்ளது,அரசு சார நிறுவனங்களின் ஊடாக பாய்கிறது, இதில் தவறிய ரொக்கப் பணம், மோடி அரசின் அரவணைப்பில் பாதுகாப்பாக இயங்க இயலும்.

நேற்றைய அறிவுப்பின் குளறுபடிகள்:

உழைக்கும் மக்களிடம் கையிருப்பில் உள்ள ஐநூறு ருபாய் நோட்டுகளை அன்றாடத் தேவைக்காக பயன்படுத்துவதில் ஏற்பட்ட திடீர் நெருக்கடி. இந்தப் பணத்தை மாற்றுவதற்கு ஏற்ப பணப் பரிமாற்ற மையங்களோ,வசிதகளோ ஏற்படுத்தாமல் ஐநூறு ருபாய் செல்லாது என்ற அறிவிப்பு முட்டாள்தனத்தின் உச்சம்.அவசர தேவைக்கு பணத்தை பயன்படுத்துவதில் சிக்கல்,டோல்கேட்டுகளில் குழப்பம் போன்ற நடைமுறை பிரச்சனைகளை முன் யோசனை செய்யாமல் முட்டாள்தனமாக அறிவிப்பை வெளியிட்டது பச்சை அயோக்கியதனம்

திசை திருப்பல் அரசியல்

காஷ்மீர் மக்கள் போராட்டம்,போபால் படுகொலை,பொதுசிவில் சட்டம்,புதிய கல்விக் கொள்கை, புதிய வரிக் கொள்கை, ஜேஎன்யூ நாஜீம் மாயம், மாட்டரசியல், பஸ்தர் என மோடி அரசின் வலது பாசிச போக்கை, குவிமயப்படுத்தப்படுகிற சர்வாதிகார ஆட்சி முறையின் மீதான எதிப்பரசியலை திசை திருப்பி, ருபாய் நோட்டுகளின் மாற்றீடு அறிவிப்பை கருப்பு பண மீட்பு நடவடிக்கையாக மடை மாற்றுவது கருத்தியல் மேலாண்மையின் உச்சம்.ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தனது கருத்தியல் மேலாண்மைக்கு பயன்படுத்தி மக்களை பலி கொடுக்கிற பாசிச, மோடி அரசை ஒழித்தே தீரவேண்டும்.

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.