அருண் நெடுஞ்செழியன்

1.பணத்தின் மதிப்பு:

மோடியின் நேற்றைய பித்தலாட்ட அறிவிப்பின் ஊடாக பணத்தின் மதிப்பு மீதான புரிதலை இன்றைய சூழலில் புரிந்துகொள்வது அவசியமாகிறது. இன்றைய முதலாளித்துவ அமைப்பினில்,தேவைகளை நிறைவு செய்கிற பொருட்களை/சரக்குகளை வாங்குவதற்கு “பணம்” என்கிற சாதனம் எவ்வாறு முன்னுக்கு வந்தது? பணத்தின் மதிப்பின் (ஐம்பது காசு முதல் முதல் ஆயிரம் வரை) வாயிலாக பொருளின் மதிப்பு (குண்டூசி முதல் வைடூரியம் வரை) எவ்வாறு தெரிவிக்கப்படுகிறது என்ற சிக்கலான ஆய்வை முதன் முதலாக ஆராய்ந்து அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ் மட்டுமே.

முதலாளிய அறிஞர்கள்கூட பணத்தின் மதிப்பு குறித்த வரலாற்றுரீதியான வளர்ச்சிகளை அதன் பண்புகளை விளக்கியது இல்லை. ஒரு உற்பத்தி பொருளுக்கு மதிப்பை வழங்குவது, அதில் செலவிடப்பட்டுள்ள மனித உழைப்பின் கால அளவால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சட்டையை தைக்க இரண்டு நாள் உழைப்பை(சராசரி எட்டு மணி நேரம்) செலுத்தவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்,அதே இரண்டு நாளில் நான்கு துணிப்பை தைக்க முடிகிறதென்றால்,ஒரு சட்டைக்கு நான்கு துணிப்பை சமமாகிறது. அதாவது பொருளின் மதிப்பு சமூகமயமாக்கப்பட்ட உழைப்பின் ஊடாக தன்னை தெரிவிக்கிறது. இருண்டு பொருட்கள் இருக்கிற வகையில் சிக்கல் இல்லை, பல பொருட்கள் வாழ்க்கைக்கு தேவைப்படுகிற சூழலில், இடைத்தரகனாக பொது பரிமாற்ற சமதை சாதனமாக தங்கம் உள்ளே வருகிறது. ஒரு கிராம் தங்கக் காசிற்கு செலவிடப்படுகிற உழைப்பிற்கு நூறு சட்டைகள் செய்வதற்கு செலுத்தப்படுகிற உழைப்பு என்ற அர்த்தத்தில்(ஒரு கிராம் தங்கம்=நூறு சட்டை) அளவு வழிப்பட்ட மதிப்பாக, தங்கத்திற்கு ஈடாக சட்டை தனது மதிப்பை தெரிவிக்கிறது. அதேபோல எல்லா பொருட்களுக்கு தங்கம் சர்வப் பொது சமதைப் பண்டமாக மாறுகிறது. தங்கக் காசுகளைக் கொண்டு அனைத்தையும் வாங்கவும் அனைத்தையும் விற்கவும் முடிகிறது. குறிப்பான வளர்ச்சிக் கட்டத்தில் தங்கத்தின் பாத்திரத்தை பணம் கைப்பற்றுகிறது.

ஒரு கிராம் தங்கம் முதல் ஒரு கிலோ தங்கம் என்ற அளவு வழிப்பட்ட மதிப்பின் தெரிவிப்பனது ஒரு ரூபாய்,பத்து ருபாய் என கருத்தளவிலான மதிப்பாக,ஈவுக்களாக பிரிக்கிறது. இதற்கு அரசின் சட்ட முறைகள் உத்தரவாதம் வழங்கி கருத்தளவிலான மதிப்பை பணத்திற்கு செலுத்தி, பொருட்களை வாங்க விற்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது, சட்டமுறைகளின் ஊடாக தங்கத்தின் இடத்தை நீக்கி, வெறும் கருத்தளவிலான மதிப்பை பணத்திற்கு வழங்குகிற வகையிலான நிதிக் கொள்கைகளை அரசுகள் மேற்கொள்கிறது.

(பொருட்களின்)சரக்கின் சுற்றோட்டத்திற்கு பணம் இடையீடு பாத்திரம் வகிப்பது என்ற உண்மையானது எதார்த்தத்தில் அவ்வாறு நமக்கு புலப்படுவதில்லை. அது பணத்தின் சுற்றோற்றட்டத்தில் சரக்கு இடையீடு பாத்திரம் வகிப்பது போல நமக்குத் தெரிகிறது.முதலாளிய உற்பத்தி முறையில், பொருட்களை உற்பத்தி செய்வதில் செலவிடப்படுகிற உழைப்பை கூடுதலாக அபகரிப்பதன் ஊடாக முதலாளிக்கு உபரி கிடைகிறது. அந்த உபரியை சந்தையில் விற்று,மீண்டும் உற்பத்தியில் அந்த உபரி மறு முதலீடு செய்யப்பட்டு உபரி மூலதனம்(பணம்) திரட்டப்படுகிறது.மீள் உற்பத்தியின் பொருட்டு திருப்பி செலுத்தப்படும் உபரி மூலதனத்தை, மாறும் மூலதனம் என மார்க்ஸ் அழைத்தார்.

2. உபரி மூலதனமும் கருப்புப் பணமும்:

இந்த மூலதனத்தின் சுற்றோடத்தில்,குறிப்பாக சொல்லப் போனால் கருப்புப் பணம் என்பது உபரி மூலதனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த உபரி மூலதனமானது (கருப்புப்பணம்) மீண்டும் உற்பத்திக்கு செல்லாமல், மூலதன சுற்றோடத்தில் வாராமல் வெறுமென உபரியாக பதுங்கியுள்ளது. இந்தியப் பெரு முதலாளிவர்க்கத்தினர் இந்த உபரியை ஐநூறு ரூபாயாக, ஆயிரம் ரூபாயாக வெறுமனே கொள்ளைப் புறத்தில் மூட்டைக் கட்டி வைக்கவில்லை. சுவிஸ் வங்கியில் வெளிநாட்டு நாணயமாக மாற்றிவைத்துள்ளனர். இந்த எந்தெந்த முதலாளி எவ்வளவு பதுக்கியுள்ளனர் என்ற விவரத்தை இதுவரை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளியிடவில்லை. கருப்புப் பணம் குறித்த பனாமா அறிக்கை மீதான நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு கள்ள மௌனம் காக்கிறது.

3. வலது பாசிசம்:

திடுமென புழக்கத்தில் உள்ள 500/1000 ருபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததன் ஊடாக கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்பதை விட ஒரு நகைச்சுவை உளறல் இருக்க முடியாது. பொய், பித்தலாட்டம், வகுப்புவாத அரசியல் என பாசிசத்தின் மொத்த உருவமாக ஆர். எஸ். எஸ். வார்ப்பின் மொத்த தீய சக்தியாக ஆபத்தாக உருவெடுத்துள்ள மோசடி மோடியை வீழ்த்துவதே இன்றைய வரலாற்றுக் கடமையாக உள்ளது.

இத்தாலியின் பாசிசத்திற்கும், ஜெர்மனியின் நாசிசத்திற்கும், இந்துதுவத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. கம்யூனிச தத்துவத்தில் புடம்போடப்பட்ட இத்தாலிய, ஜெர்மானிய தொழிலாளர்களையே மீறி நாசிசமும் பாசிசமும் தலை தூக்க முடிகிறதென்றால் நடுத்தரவர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த முடிகிறதென்றால், அதன் நச்சு வீரியத்தை உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்திய ஒன்றியத்தின் சிதறுண்டுள்ள தொழிலாளி வர்க்கம், அரசியலற்ற நடுத்தர வர்க்கத்தின் உதவியோடு ஆட்சிக்கு வந்துள்ள மோடி, மக்களின் பலவீனத்தை உணர்ந்துள்ள காரணத்தாலேயே பாகிஸ்தான் வெறுப்பரசியலின் பாற்பட்ட இந்து தேசிய வெறியூட்டல், பொது சிவில் சட்டம், சிமி விசாரணைக்கைதிகள் கொலை என துணிந்து வருகிறது.

இன்று நம்முன் இரு வாய்ப்பு மட்டுமே உள்ளது .. ஒன்று இந்த காடுமிராண்டித்தன அரசை ஏற்பது, இல்லையென்றால் இந்த அரசை தூக்கி எறிந்து சோசலிசத்தை நிறுவுவது.

காட்டுமிராண்டித்தனமா? சோசலிசமா?

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.