500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் அறிவித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின், “நாட்டினுடைய பொருளாதார நிலையை உயர்த்த, இந்திய நாட்டினுடைய சீர்திருத்தத்திற்காக இந்த அறிவிப்பு உண்மையிலேயே உதவியாக இருக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் இதை வரவேற்கக் கூடிய நிலையில் தான் இருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும் ” பிரதமர் மோடி அவர்கள் தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் இருக்கக் கூடிய கறுப்பு பணத்தை மீட்டு, அதன்மூலமாக ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தார். அதனை இதுவரை அவர் நிறைவேற்றவில்லை. இது கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்படும் திட்டம் என்று சொல்கிறார்கள். இந்த அறிவிப்பை பொறுத்தவரையில், மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் அவகாசத்தை வழங்கியிருக்க வேண்டும். குறிப்பாக, நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள், வணிகர் பெருமக்கள் பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, “இந்த அறிவிப்பின் காரணமாக அவசர நிலையில் நோட்டுகளை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்தாலும் இப்போது வந்து கொண்டிருக்கிற செய்திகளெல்லாம் எந்த இடத்திலும் அந்த நோட்டுகள் வாங்கப்படவில்லை என்பதும், அதனால் மக்கள் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கின்ற போது கவலை அளிக்கிறது. உடனடியாக, மத்திய அரசு இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.