அருண் நெடுஞ்செழியன்

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவித்த நாள்தொட்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுவரை, டொனால்ட் டிரம்பின் எழுச்சியானது, பெருவாரியான ஜனநாயக சக்திகளுக்கு குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டு ஏதிலிகளால்தான் அமெரிக்காவிற்கு பிரச்சனை,எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றி,மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர்கட்டவேண்டும் என்றவர்.மெக்சிகோ நாட்டு ஏதிலிகள் வன்புணர்வாளர்கள் என்றவர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பதையும் கடந்த வலது அடிப்படைவாதியாக,இன வெறியராக,பெண்களை இழிவாக பேசுகிற,இஸ்லாம் மத விரோதியாக இருந்தவர் ஜனநாயகமுறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆகிறார்.இது அமெரிக்காவின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த கொடிய பூதம் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றது?

2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆட்டிப் படைத்த பொருளாதார நெருக்கடி,அதன் விளைவான வேலை இழப்புகள்,பொருளியல் இழப்புகள்,சமூகப் பாதுகாப்பின்மையை அமெரிக்க மக்களிடத்தில் உணரச் செய்தது.சுதந்திர சந்தையின் தாக்கத்தால்,தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஒபாமாவின் 8 ஆண்டுகால தாராள பொருளாதார அனுசரணைப் போக்குகளின் எதிர்விளைவை டிரம்ப் அறுவடை செய்கிறார். அது எவ்வாறு தெரியுமா?நிலவுகிற மோசமான பொருளாதார கொள்கைகள்தான் பிரச்சனைக்கு காரணம் என்றா சொல்வார்?

அமெரிக்க மக்களின் கழுத்தை இறுக்கியுள்ள பிரச்சனைக்கு என்ன காரணம் தெரியுமா?புலம் பெயர்ந்துள்ள அகதிகள்தான். இஸ்லாமியர்கள்தான் என ஒரு எதிரியை கட்டமைத்தார். அதோடு அமெரிக்க ராணுவப் பெரிமித பேச்சு,தேசிய வாதத்தோடு இணைத்தவிதம் பெரும்பான்மை அமெரிக்க மக்களின் பொதுபுத்தியை ஊடுருவியது. நிக்சனுக்கு பின்பாக ஒரு கவர்ச்சிமிக்க அதிபராக டிரம்ப் அடையாளப் படுகிறார். இந்த கவர்ச்சிவாதம்,அமைப்பின் சிக்கலுக்கு தன்னிடத்தில் தீர்வுள்ளது என பெரும்பான்மை மக்களை நம்பச் சொல்கிறது. ஏகபோகமாக்கப்பட்ட கார்பரேட் மீடியா இதை உசுப்பிவிடுகிற பெரும் சக்தியாக உள்ளது.

டொனால்ட் டிரம்ப்பும் மோடியும்

டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் வெற்றியும் மோடியின் அரசியல் வெற்றியும் ஒரு புள்ளியில் ஒருமித்தவகையில் இணைகிறது. மக்கள் ஏமாற்றுவதற்கும் முட்டாளாக்குவதற்கும் ஒரே மாதிரியாக ஒன்றாக சிந்திக்கிறார்கள்.

எட்டு ஆண்டு கால மன்மோகன் சிங்கின் ஆட்சியின்போது இந்திய மக்களிடத்தில் உருவாகிய அதிருப்திக்கும், எட்டு ஆண்டு கால ஒபமாவின் ஆட்சியின்போது அமெரிக்க மக்களிடத்தில் உருவாகிய அதிருப்திக்கும் அடிப்படை காரணம் நவதாரளமய பொருளாதாரப் பாணி,சந்தைப் பொருளாதார முறை. இந்த உண்மையை மக்களிடத்தில் அம்பலப்படுத்த தவறிய இடத்தில வலது பாசிசம் அந்த இடத்தை கைப்பற்றுகிறது. இந்தியாவில் மோடியும் அமெரிக்காவில் டிரம்ப்பும் அதற்கான நேரடி சாட்சிகள். அவர்கள் செய்தது இதுதான்…

• சமூகத்தின் அனைத்தும் தழுவியுள்ள சிக்கலுக்கு பொது எதிரியை உருவாக்குவது
• தேசிய வெறியூட்டுவது
• சிக்கலுக்கு தீர்வாக தனது கவர்ச்சிவாத தனிநபர் ஆளுமையை நிறுவுவது
• ஏகபோக ஊடக ஆதரவோடு,பொய் பித்தலாட்ட வலது அடிப்படைவாத கருத்தியலை,சமூகத்தின் பொது புத்தியில் ஏற்கச் செய்வது.

சோவியத் தகர்வும், நடைமுறையில் ஒரு சோசலிச நாடு இல்லாத இன்றைய சூழலில் மனித சமூகம் இன்று காட்டுமிராண்டிகளின் கையில் சேர்ந்துள்ளது. இதுகாறும் மனித குல வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் அடைந்த நாகரிகம், மனித மாண்புகள் சிதையத்தொடங்கியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை மத, தேசிய வெறியூட்டலால் பிளக்கப்படுகிறது.

வரலாற்றில் சோசலிசத்தின் தேவை முன்னெப்போதையும் விட தற்போது அவசியமாக உள்ளது.நம்மிடம் இன்று இரண்டே வாய்ப்பு மட்டுமே உள்ளது. காட்டுமிராண்டித்தனமா? அல்லது சோசலிசமா?

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.