கிரேஸ் பானு

சென்னை எர்னாவூர் அரசு குடியிருப்பை சேர்ந்த திருநங்கை தாரா 09-11-2016 அன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை பாண்டிபஜார் காவல்நிலையம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார் அப்பொழுது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் தாராவிடமிருந்து வாகனத்தையும், உடமைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். காவல் நிலையம் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

தாரா: சார் என் மொபைலையும் வண்டியையும் கொடுத்துவிடுங்கள்.

காவலர்:அ தெல்லாம் முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ

தாரா: நான் இங்கிருந்து போக மாட்டேன்

காவலர்: ஏண்டா ஒன்பதுங்களா ஒரு எஸ்.ஐ யவே நீங்கள் கல்லால அடிப்பீங்களாட?

தாரா: சார்… எனக்கு அதப் பத்தி எதுவும் தெரியாது சார். என் வண்டிய குடுங்க நான் போறேன்.

காவலர்: முடியாதுடா என்ன பண்ணுவ?

வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து தாரா காவல் நிலைய வாசலில் அமர்ந்து அருகில் இருந்த கல்லை எடுத்து கழுத்தை அறுத்திருக்கிறார். “இரத்தம்… வலிகிறது தயவுசெய்து வண்டிய குடுங்கள்”என கேட்டிருக்கிறார். அதற்கு காவலாளி “ஏய், சீ எழுந்து வெளியே போய் சாவு” என கூறியிருக்கிறார். (இந்த நிகழ்வுகள் அனைத்தும் காவல்துறை என்னிடம் காட்டிய மொபைல் வீடியோவில் பதிவாகியுள்ளது.)

கேள்வி:

  1. தாரா தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள்… அதற்கு காரணம் என்ன?

  2. அவ்வாறு தற்கொலை செய்துகொண்டால் காவல் நிலையத்தில் வைத்து ஏன் செய்ய வேண்டும்? அவர் எரியும் வரை வேடிக்கை பார்த்தார்களா?

  3. இந்தியாவே 500, 1000 ரூபாய்க்கும் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த அதிகாலையிலே பெட்ரோல் எங்கேயிருந்து வந்தது?

  4. தாரா கழுத்தை அறுத்துகொண்ட பொழுது ஏன் அவருக்கு முதலுதவியோ அல்லது தற்கொலை முயற்சி என்றோ வழக்கு பதிவோ ஏன் செய்யவில்லை?

  5. எந்த ஒரு நபர் பொது இடத்தில் இறந்தாலும் அவர் உடலை எடுக்கும்பொழுது மார்க் செய்துதான் எடுப்பார்கள். தாரா உடல் எடுத்ததற்கான எந்த சாட்சியமும் இல்லை.

  6. ஒரு காவலாளி எஸ்.ஐ. வா கல்லால் அடிச்சீங்க’ என்று கேட்கிறார் யார் அந்த எஸ்.ஐ. அவருக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்?

  7. இவ்வளவு விடயங்களை வீடியோ ஆதாரமாக வெளிட்டவர்கள் ஏன் அவள் தீப்பற்றிக்கொண்டதை பதிவு செய்யவில்லை?

  8. சிசிடிவி பதிவை கேட்டதற்கு சிசிடிவி 27-10-2016 லிருந்து பழுதாகிவிட்டதாக கூறுகிறார்கள். அப்படியானால் 29-10-2016 அன்று தீபாவளி பண்டிகைக்கு அவ்வளவு பொதுமக்கள் கூடும் இந்த ஏரியாவில் எப்படி கண்காணிப்பு கேமரா இல்லாமல் போனது?

  9. அதிகாலையில் ஒருநபர் வாகனத்தில் செல்வது தவறா?

இவை அனைத்திலிருந்தும் திருநங்கை தாரா காவல்துறையால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

கிரேஸ் பானு, மாநில திருநர்-திருநங்கை சமிதி செயலாளர்.