சி.  மதிவாணன்

சி. மதிவாணன்
சி. மதிவாணன்

நியூஸ் 18 தமிழ் சானலில் ‘செல்லாத நோட்டு … நெருக்கடி சாமாணியர்களுக்கா? பண முதலைகளுக்கா?“ என்றொரு விவாதம் நிகழ்ந்ததை ‘நேரலையாக‘ வலைமனை மூலம் பார்க்க நேர்ந்தது.  அதில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் தற்போது பேசுவோம்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்கள் என்று காந்தி என்று ஒருவர் சொன்னதாக சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியொரு ஆன்மா இருப்பதையே இந்திய ஆளுகையும் ஊடகங்களில் பேசும் அறிவாளிகளும், ஊடகங்களும் அறியாதிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டியது.

நிகழ்ச்சியில் பேசிய தேவசகாயம் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ்) தவிர மற்றவர்கள் அதனைப் பற்றி பேச முயற்சியெடுக்கவில்லை. எத்தனைதான் நேர்மையாக தேவசகாயம் முயன்றபோதும் இன்றைய கிராமப்புரங்களுடன் அவருக்குப் பரிட்சயம் இல்லை என்பதால் முழு படத்தை அவரால் அளிக்க முடியவில்லை. (பேசியவர்களில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனும், பத்திரிகையாளர் ஞானியும் மக்களின் பக்கம் நின்றார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.)

அந்த விவாதத்தின் இடையில், கேஷ்லெஸ் எகனாமியைக் கொண்டுவருவது பற்றிவந்தது. அனைத்தையும் பணமின்றி வாங்குவது விற்பது பற்றிய கருத்தாக்கம் அது. அதாவது, கணினிகள் வலைப்பின்னல் மூலம் செயல்படும் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதில் இந்திய அரசு ஆர்வமாக இருக்கிறது என்பதை பாரதீய ஜனதா கட்சியின் கேடி ராகவனும், மாலனும் சொன்னார்கள். அது முன்னேற்றம், அது வேண்டும் என்றனர்.

இப்போது சில கதைகளை சொல்ல வேண்டும். எந்த அளவுக்கு புரியும் படி சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ஏனென்றால், இந்தியாவின் ஆன்மாவிலிருந்து நாம் வெகுதூரம் விலகியிருக்கிறோம்.

வேலையுறுத்திச் சட்டம் என்று இந்திய திருநாடு ஒரு சட்டம் இயற்றியிருக்கிறது. குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிப்பதும், குறைந்தபட்ச கூலியை வாரந்தோறும் அளிப்பதும் அந்தச் சட்டத்தின் நோக்கத்தில் அடக்கம். ஆனால், கடந்த 3 மாதங்களாக உழைத்தவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அதுபற்றி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை. ஊடகங்கள் விவாதிக்கவில்லை. சட்டத்தை மீறிய மோடியை/ ஜெயலலிதாக்களைக் கைது செய்ய சட்டத்தில் எந்த இடமும் இல்லை.

மக்கள் விரும்பும் இடத்தில் சம்பளம் என்று மேற்படி சட்டம் சொல்கிறது. ஆனால், வங்கிக் கணக்கில்தான் அளிப்போம் என்று அரசு அடம்பிடித்து அதனைச் சாதித்தது.

அந்த மக்களுக்கு, சம்பளம் எவ்வளவு என்று அட்டையில் பதிவதில்லை. வங்கிகள் கணக்குப் புத்தகம் கொடுப்பதில்லை. தகராறு செய்தால் கொடுப்பார்கள். அல்லது வாய்பிருக்கும்போது கொடுப்பார்கள். வங்கியில் பணம் எடுக்கும்போது அதற்கான எழுத்துவூர்வ தகவல் கொடுப்பதில்லை.  எத்தனை நாள் வேலை செய்ததிற்கு எத்தனை ரூபாய் சம்பளம் என்று தெரிந்துகொள்ள வழியேதும் இல்லை. கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளும் உரிமையில்லை. உழைத்த கைகளின் கட்டைவிரல் ரேகை தேய்ந்துபோனால் பணம் எடுக்க வழியில்லை.

இதுபோல இன்னும் சில பக்கங்கள் எழுதலாம். உங்களுக்குப் படிக்க பொறுமை இருக்காது.

வேலையுறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்கள் முழுமையாக/ பகுதியாக கல்வி அறிவு பெறாதவர்கள். அவர்களுக்கு இந்த கணினி முறை என்ன கழுதை என்பது கூட தெரியாது. ஆனால், அவர்கள் தலையில் உங்கள் வங்கிகளைத் திணித்து, அதனை கணினி மயமாக்கி இந்தியா மிளிர்கிறது என்று கும்மாளமிடும் உங்களுக்கு ஜனநாயகம் என்பதன் பொருள் தெரியுமா?

நியூஸ் 18 நிகழ்ச்சியில் அனைத்தையும் வங்கிகள் மூலம், எலெக்ட்ரானிக் ட்ரேக்கிங்கின் மூலம் நேர்மையை, ஊழலின்மையை நிலைநாட்டிவிடுவோம், மக்களின் கௌரவத்தை, தேசத்தின் சுய கௌரவத்தை நட்டமாக நிலைநாட்டி விடுவோம் என்று பார‘தீய‘ ஜனதாவின் கேடி ராகவன் கதைத்தார். அதற்கு பார‘தீய‘ தினமணியின் மாலன் ஒத்தூதினார்.

மக்களை மையம் கொள்ளாத, வங்கிகளின் லாபத்தை, அரசின் செலவு சிக்கனத்தை, முதலாளிகளின் லாப வேட்டையை மையம்கொண்ட இந்தியாவின் ஊடக/ ஆளுகை வெளியில், கிராமப்புர மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளத்தையே எங்கும் காண முடியவில்லை.

சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, அத்தனை வசதியுள்ள நடுத்தர/ மேல் நடுத்தர மக்கள் அலையும் துன்பம் பற்றி பேசத் தெரிந்த அறிவாளிகளுக்கும் கூட கிராமப்புர இந்தியாவின் ‘கணினி மய வங்கித்’ துன்பம் தெரியவில்லை.

விவசாயப் பின்னடைவு, கிராமப்புற பணக்காரர்களின் சுரண்டல், அரசின் பாராமுகம், அரசியல் கட்சித் தலைவர்கள் கிராமத்தில் அடிக்கும் கொள்ளை, மக்களிடம் நீடிக்கும் எழுத்தறிவின்மை (அல்லது கையெழுத்திட மட்டும் தெரிந்த அறிவு) என்ற பின் தங்கிய நிலையில், அரசும் அறிவாளிகளும் மின்னணு மய இந்தியாவைக் காண்கிறீர்கள் என்றால்…

உங்களுக்கு இறந்துகொண்டிருக்கும் இந்திய ஆன்மாவைப் பற்றி தெரியவில்லை என்று பொருள். உங்களின் சுயத் திமிறுக்கும் அறிவின்மைக்கும் பெயர் இந்திய சுயகௌரவம், தேச அபிமானம் என்றால்…

கிராமப்புற மக்களை நீங்கள் மனிதர்களாகக் கூட கருதவில்லை என்று பொருள்.

உங்களின் இந்தியா கௌரவம், தேசபக்தி இன்ன பிற கற்பிதங்களை…. கிராமப்புர மக்கள் அடித்து நொறுக்கும் வரை கேடி ராகவன் முதல்… அறிவாளிகள்.. ஊடகங்கள்.. மோடி வரை திருந்த வாய்ப்பில்லை என்பது பொருள்.

சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.