கருத்து

சாதாரண மக்களுக்கு பொருளாதார அவசர நிலை; கருப்புப் பணக் குற்றவாளிகளுக்கு புதிய வாய்ப்புகள்: திபங்கர் பட்டாச்சார்யா

திபங்கர் பட்டாச்சார்யா

“தேசியப் பாதுகாப்பு“ குறித்தும் “பொறுப்பான ஊடகச் செயல்பாடு“ குறித்தும் NDTVக்கு பாடம் கற்பிப்பதற்காக, அந்தத் தொலைக்காட்சி ஒலிபரப்பை நிறுத்த வேண்டும் என்பதற்காகக் குறிக்கப்பட்ட நாள் நவம்பர் 9. நாடு முழுவதும் இந்த அறிவிக்கப்படாத அரசியல் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அரசு பின்வாங்கி தடையை நிறுத்திவைக்கும்படி ஆனது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது நரேந்திர மோடி, ‘பொருளாதார அவசர நிலைக்கு‘ சற்றும் குறையாத ஒன்றுபற்றி அறிவிப்பு விடுத்திருக்கிறார். நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை ஆகிப் போகின. ஒரே மரண அடியில், ரூபாய் 14 லட்சம் கோடி ரூபாய், அதாவது பணச் சுழற்சியின் பண மதிப்பில் 86 சதம், பயனற்றது ஆகிப் போனது. மோடியும் அவரின் மந்திரிகளும், கருத்து நிர்வாகம் செய்யும் மேலாளர்களும் இந்த நடவடிக்கை தீர்மானகரமானது என்றும் முன்னெப்போதும் கண்டிராத கருப்புப் பணத்தின் மீதான தாக்குதல் என்றும் வர்ணித்தார்கள். பணம் குறித்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தாக்குதல் (‘surgical strike’) என்று குறிப்பிட்டார்கள்.

பணம் செல்லாதது என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டது இது முதன்முறையல்ல. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ரூபாய் 1000, மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று 1946ல் அறிவிக்கப்பட்டு பின்னர் 1954ல் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் என்ற ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

1978ல் மொராஜி தேசாய் அரசு, ‘பணம் செல்லாது’ என்ற அறிவிப்பை மீண்டும் வெளியிட்டது. மிகச் சமீபத்தில், 2014ன்போது பகுதி அளவிலான பணம் செல்லாமை நடப்புக்கு வந்தது. அப்போது, 2005ல் அச்சிடப்பட்ட ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. பணம் செல்லாது என்ற அறிவிப்பை கருப்புப் பணம் எப்போதும் வென்று வந்திருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், பிரதம மந்திரியின் நாடகப் பாணி முறையில் அறிவிக்கப்பட்டதும், எந்தவித முன்னறிவுப்பும் இன்றி 1975 அவசரநிலை நள்ளிரவில் கதவைத் தட்டியது போல, உடனடியாக நடைமுறைக்கு வந்ததும்தான் சமீபத்திய பணம் செல்லாது அறிவிப்பின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்.

நாடகத்தன்மை மிக்க பணம் செல்லாது அறிவிப்பை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று சொல்வது முற்றிலும் தவறானதாகும், ஏமாற்றும் நோக்கம் கொண்டதாகும். 2014 நடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டெடுப்பது குறித்து மோடி கடுமையாகப் பேசினார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். “தேசத்திற்குத் திரும்ப வரும் அந்த பொக்கிஷத்தைப் பிரித்து ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூபாய் 15 லட்சம் அளிக்கப் போவதாக“ அவர் உறுதியளித்தார். ஆனால், அதெல்லாம் அரசியல் பிரச்சார வார்த்தைகள் என்று பின்னர் பிஜேபியின் தலைவர் ஒதுக்கித் தள்ளினார். இப்போது, இரண்டு ஆண்டுகளை மோடி ஆட்சி கடந்துவிட்ட நிலையில் வெளிநாட்டு வங்கிகளில் இருந்த சொத்துக்களில் இருந்து உள்நாட்டுப் பதுக்கலின் மீது கவனம் திரும்பியிருக்கிறது. ஏதோ கருப்புப் பண முதலைகள் தங்களின் மெத்தையில் கருப்புப் பணத்தை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போலவும், ஒரு அடி கொடுத்தால் கருப்புப் பணம் வெளியே வந்துவிடும் என்பதுபோலவும் மோடி அரசு நடந்துகொள்கிறது. அதுபோன்ற ஒன்றை ஒருவர் பகல் கனவில் மட்டுமே நம்ப முடியும்.

money

யதார்த்த வாழ்க்கையில் கருப்புப் பணத்தின் சிறு பகுதி மட்டுமே தற்காலிகமாக பணமாக வைக்கப்பட்டிருக்கும். மீதமுள்ள பெரும்பகுதி தொடர்ச்சியாக சட்ட விரோத சொத்துக்களாக மாற்றப்பட்டுவிடும். (நிலமாக, நகைகளாக, பங்குச் சந்தை மூலதனமாக, மற்ற பிற லாபம் தரும் சொத்துக்களாக மாற்றப்பட்டுவிடும்.) அல்லது, அரசியல்- பொருளாதார கையூட்டுகளாக மாறிவிடும். (அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை, லஞ்சமாக, அரசியல் தரகர்கள் மற்றும் இதர ஒட்டுண்ணிகளின் ஆடம்பரச் செலவுகளாக மாறிவிடும்.) பணம் செல்லாது என்ற அறிவிப்பு ஏதேனும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர முடியும் என்றால், தற்சமயம் கையில் இருக்கும் சிறிய அளவிலான கருப்புப் பணமாக மட்டுமே அது இருக்கும். அறுவை சிகிச்சை செய்வது போன்ற துல்லியத்துடன் செயல்படுவதிலிருந்து மிகவும் விலகிச் சென்று, தடாலடியாக செயல்பட்ட அறிவிப்பின் காரணமாக, அன்றாட கூலிகள், தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வங்கி கணக்கு இல்லாத- வங்கி கடன் அட்டைகள் இல்லாத சாதாரண மக்கள்தான் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கின் கொடுமையை அனுபவிப்பார்கள்.

புதிய 500- 1000- 2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வரவிருக்கின்றன. அண்டிப் பிழைக்கும் அடிமைகள் வதந்திகளைப் பரப்புகிறார்கள். புதிய நோட்டுகள் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றனவாம். கள்ள நோட்டு தயாரிக்க முடியாதாம். செயற்கைக் கோள்கள் மூலம் பணம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட முடியுமாம். ஆனால், இந்த வதந்திகள் தவறானவை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கள்ள நோட்டு தயாரிக்க முடியாத அளவுக்கு புதிய நோட்டுகள் முன்னேறியவையா என்பதைக் காலம் காட்டிவிடும்.

ஆனால், டிசம்பர் 30 வரை 2.5 லட்சம் வரையிலான பணத்தை வங்கியில் செலுத்த முடியும், கண்காணிப்பு மேற்கொள்ளப்படாமல், வரி கட்ட வேண்டிய அவசியம் வராது என்பதால் பெருமளவு பணம்வைத்திருப்பவர்கள் தங்களின் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்பது மட்டும் நிச்சயம்.

பணம் செல்லாது என்ற முயற்சிக்கு சிறிது காலமாகவே அரசு பின்னணித் தயாரிப்புகளைச் செய்து வந்திருக்கிறது என்ற நிலையில், நெருங்கியவர்களுக்கு சகாயம் செய்யும் இன்றைய ஒட்டுண்ணி முதலாளித்துவ காலத்தில் மிகப் பெரும் கருப்புப் பண முதலைகள் தேவையான தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள் என்பதை நாம் மிக எளிதாக ஊகித்துவிட முடியும். விவரம் தெரியாது மாட்டிக்கொண்டது ஏழைகளும், கீழ் நடுத்தர வர்க்கமும், சிறிய அளவு பணம் சேர்த்து வைப்பவர்களும் சிறு வியாபாரிகளும்தான். பலர், கையில் பணமில்லாத நிலையில் மாட்டிக்கொண்டனர். தங்களின் அன்றாட – அடிப்படை – அவசரத் தேவைகளுக்காக கருப்புச் சந்தையில் 100 ரூபாய் நோட்டுகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மருத்துவச் செலவு, திருமணம், பயணம் என்று பெரிய பணம் தேவைப்படும் நிலையில் இருந்தவர்கள் சொல்ல முடியாத சிரமங்களை எதிர்கொண்டது கண்ணுக்கு முன்பு விரிந்த காட்சிகளாக இருந்தது.

modi-safr

மக்களுக்கு ஏற்பட்ட ‘இரு தரப்பு சேதாரம்‘ பற்றியும் ‘தற்காலிக சிரமங்கள்‘ குறித்தும் மோடி அரசாங்கமும் பிஜேபியின் பிரச்சாரகர்களும் அற்பக் கவலை கூட படவில்லை.மாறாக, முன்பு பசு பாதுகாப்பு பெயரில் வன்முறை செய்தவர்களை, ஆட்சியைக் காவி மயப்படுத்துவதை எதிர்த்தவர்கள் மீது தேச விரோத குற்றம் செயதவர்கள் என்றாக்கியது போல, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கையும் போலி எண்கவுண்டர்களையும் கேள்வி கேட்டவர்களை தேச விரோதிகள்- பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தியது போல, எதிர்ப்புக் கருத்து சொல்லும் எந்த ஒருவரும் ‘ஊழலை- கருப்புப் பணத்தைப் பாதுகாப்பவர்‘ என்று முத்திரை குத்தப்பட்டனர்.

மோடி அரசாங்கத்தின் மிகப் பலவீனமான புள்ளியாக பொருளாதாரம் இருக்கிறது. பிஜேபியின் கடும் ஆதரவாளர்கள் கூட விவசாய நெருக்கடி, விடாமல் அதிகரிக்கும் விலைவாசி, வீழ்ந்துவரும் வேலை வாய்ப்பின் விளைவுகளை உணர்கிறார்கள். மோடியின் செல்லாத நோட்டு நாடகத்தின் மூலம் மக்களின் கோபத்தைத் தணிக்கும் வகையில் பேசுதற்கான அம்சம் எதையாவது உருவாக்கி விட முடியுமா? கட்சியின் பிருமாண்டமான பொருளாதார வாக்குறுதிகளின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்.

இந்த அரசியல் கணக்குகளுக்கு அப்பால், கருப்பு பணத்தின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நாடகத்தின் பின்னால், மிக ஆழமான ஒரு பொருளாதாரத் திட்டமும் இருக்கவே செய்கிறது. வங்கிகள் மிகப் பெரும் அளவிலான பணப் புழக்க (liquidity ) நெருக்கடியை எதிர்கொள்கின்றன. பெருமளவிலான தொழில் நிறுவனக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதன் காணரமாக, மிகப் பெரும் அளவிலான வாராக் கடன் சுமையில் சிக்கிக்கொண்டுள்ளன. இந்த நிலையில், சாதாரண மக்களின் கையில் புழங்கும் பெருமளவிலான தொகையையும், அத்துடன், வெள்ளையாக்கப்பட்ட கருப்புப் பணத்தை கணிசமாகவும் உறிஞ்சியெடுப்பதுதான் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழி என்ற அவர்கள் கருதுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நெருக்கடியிலிருந்து ஒரு மாறுபட்ட ‘தப்பிச் செல்லும் வழியை‘ (bailout ) பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

arun jatley

நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் கூற்றுப்படி, இது பணமில்லாத பொருளாதாரம் நோக்கிய உறுதியான நடவடிக்கை! மேல் நோக்கி முன்னேறும் “இந்தியா“, இன்டர் நெட் வங்கிச் செயல்பாடு, வங்கிக் கார்டுகள் வழியிலான பணப்பட்டுவாடாவிற்குள் நுழைந்துவிட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள். தெருவில் கிடக்கும் பொருளாதாரம்தான்- காய்கறி வியாபாரிகள், பாரம்பரிய சந்தைகளில் காய்கறி வாங்குபவர்கள், பக்கத்திலிருக்கும் மளிகைக் கடையில் அல்லது சின்ன கடையில் பொருள் வாங்குபவர்கள் மட்டும்தான் ‘பிளாஸ்டிக் பணத்தின்“ (வங்கி அட்டையின்) பணமில்லாத உலகத்திற்கு வெளியே கிடக்கிறார்கள்.

எனவே, பணம் செல்லாது என்ற அறிவிப்பு அவர்கள் அனைவரையும் தொழிலில் இருந்து விரட்டுவதை இலக்காகக் கொண்டதாகும். அவர்களை மறுபொருளாதாரக் கட்டமைப்பிற்குள் இழுத்து வருவதை நோக்கமாகக் கொண்டதாகும். அந்தப் பொருளாதார மறுகட்டமைப்பில் எப்போதும் சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கிவிடும்!வங்கி முறைக்கு வெளியே உள்ள பலப் பத்து லட்சங்கள் எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இது வெறும் தற்காலிக துன்புறுத்தல் மட்டுமல்ல. அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பு அற்றதாக ஓரம் கட்டப்படுவதாக மாற்றப்பட்டுள்ளது.

பிஜேபியின் ஏமாற்று முழக்கங்களை நாம் அம்பலப்படுத்துவது மட்டும் போதாது. கருப்புப் பணத்தின் மீதும், கார்ப்பரேட் கொள்ளை மீதும், உண்மையான பலன் தரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நாம் கோர வேண்டும். தேவையில்லாத பொருளாதார அராஜகத்திற்கும் கஷ்டங்களுக்கும் சாதாரண மக்களை ஆளாக்கிய இரக்கமேயில்லாத அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டும்.

vijay mallaya

நமது வங்கிகளைக் கொள்ளையடித்த லலித் மோடிக்கள், விஜய் மல்லையாக்கள் போன்றவர்களை நாட்டை விட்டுத் தப்பித்துப்போக அனுமதித்தது இந்த அரசாங்கம். நமது வங்கிக் கட்டமைப்பை மிகப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளிய- திட்டமிட்டே வங்கிக் கடனைத் திருப்பித் தராத பெரு முதலாளிகளைத் தண்டிப்பதைக் கூட வேண்டாம், அவர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களை அவமானத்துக்கு உள்ளாக்க கூட விரும்பாத அரசாங்கத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும். கருப்புப் பண விவகாரத்தில் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல், கருப்புப் பணத்தில் கையாளக இருத்தல், ஊழல், அரசால் ஆதரிக்கப்படுகின்ற கார்ப்பரேட் கொள்ளையை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

முன்பு எல்லையில் தாக்குதல் நடத்தி பீற்றிக்கொள்ளப்பட்டு தற்போது நமது பாக்கெட்டை நோக்கித் திரும்பியுள்ள சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குகளாக மாற்றிக்கொள்வது பற்றி பிஜேபி பேசிக்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை நாம் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் ஆயுதம் கொண்டே அவர்களைத் தாக்க வேண்டும். அறிவிக்கப்படாத அரசியல்- பொருளாதார அவசரநிலையைத் திணித்து அக்கிரமம் செய்தவர்களைத் தண்டிக்க வரும் தேர்தல்களைப் பயன்படுத்த நாம் மக்களை அணி திரட்ட வேண்டும்.

திபங்கர் பட்டாச்சார்யா, CPI ML (Liberation) பொதுச் செயலாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.