மாநிலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதித் துறைக்கு தேவையான தொகுப்பு நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி, உயர் நீதிமன்றத்தின் தன்னாட்சி அந்தஸ்தை பேணவும், தேவையான அனைத்து நிவாரணங்களை வழங்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாகவும், வழக்குரைஞர்கள் யானை ராஜேந்திரன், வசந்தகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதேபோன்று, 2011 -இல், சார்பு நீதிமன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளதால், அத்தொகையுடன் சேர்த்து, ரு.9.41 கோடி நிதி ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

பல ஆண்டுகளாக இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

ஜனநாயக தூண்களில் ஒன்றான நீதித் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், நீதி துறையை நடத்துவதற்கும் நிதி ஒதுக்காதது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு மாநில நீதித் துறை பயிலகம் செயல்படுவதற்கு நிதி ஒதுக்காததால், இரு பயிற்சி திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது.

மேலும், ரூ.35 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கான திட்டங்களை அரசு பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. ரூ.150 கோடி மதிப்பிலான 100 திட்டங்கள் குறித்த கருத்துருக்கள் நிலுவையில் உள்ளன. இதில், 50 திட்டங்களை முதல்கட்டமாகவும், மீதமுள்ள 50 திட்டங்களை இரண்டாம் கட்டமாகவும் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எந்தத் திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க இருக்கிறது என்பது தெரிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு திட்டங்களைப் பொருத்தவரை, அதற்குரிய நிதியைப் பெறுவதில் மாநில அரசு திறமையுடன் செயல்படாததால், ரூ.150 கோடி மத்திய அரசு நிதி காலாவதியாகி விட்டது. அதனால், மத்திய அரசிடம் இருந்து, நடப்பு நிதியாண்டுக்கு வெறும் ரூ.50 கோடி மட்டுமே பெற முடிந்துள்ளது. நீதித் துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்கு மத்திய அரசு உதவி மட்டுமே செய்ய முடியும்.

மாநில அரசு பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளதா அல்லது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம். அப்படியானால், மாநில அரசின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வகை செய்யும் அரசியல் சாசனம் 360 -ஆவது பிரிவை அமல்படுத்தச் செய்யலாம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், மாநிலம் பொருளாதார நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்கப் போகிறதா என்பது குறித்து தமிழக நிதித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கின் விசாரணையை வரும் 30 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.