அருண் நெடுஞ்செழியன்

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன், முதன் முறையாக தனது அணு உலைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஜப்பான். (இவை போக ஜப்பானிடம் இருந்து அதிவேக ரயில், போர் விமானங்கள் வாங்குகிற ஒப்பந்த்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது)

சிவில் பயன்பாடு ராணுவப் பயன்பாடு என்ற வகைமையில் தனது அணுசக்தி திட்டங்களை பிரித்த வைக்காத, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாத காரணத்தால் இந்தியாவுடனான ஜப்பானின் அணு உலை ஏற்றுமதித் திட்டம் தாமதமாகி வந்தது.

இது தொடர்பாக, அபாண்டாட் கிளாஸ், அதாவது ராணுவப் பயன்பாட்டிற்கு, அணு ஆற்றலைப் பயன்படுத்தினால் ஒப்பந்ததில் இருந்து உடனடியாக ஜப்பான் முறித்துக் கொள்ளும் என்ற சரத்து சேர்க்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த சரத்தில் சில மாற்றங்கள் செய்து, அதாவது ஜப்பானிடம் பெற்ற யுரேனியத்தை ராணுவத்திற்கு பயன்படுத்துகிற வகையில்ம று சுழற்சி செய்வதாக இருந்தால், ஜப்பானிடம் அனுமதி பெற்ற பின்னரே, செய்ய வேண்டும் என்ற மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக, புகிசிமா அணு உலை விபத்திற்கு பின்பாக, உள்நாட்டில் தேக்கம் பெற்றிருந்த அணு உலை சந்தையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஜப்பான் தீவிரம் காட்டியது. அதன் விளைவாக வியட்நாம், துருக்கியைத் தொடந்து இந்தியாவிற்கு தனது அணு உலைகளை ஏற்றுமதி செய்வதில் ஜப்பான் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் ஆறு அணு உலைகளை ஆந்திர மாநிலம் கொவ்வாடாவில் நிறுவவும்,பிரான்சு நாட்டின் அரிவா அணு உலையை மகாராஷ்டிரத்தில் நிறுவவும், ரஷ்யாவின் ரோசடம்அணு உலையை கூடங்குளத்தில் நிறுவவும் ஒப்பந்த போட்ட நிலையில் தற்போது ஜப்பானிடம் அணு உலை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் கச்சா பொருட்களை சுரண்டுவதோடு தனது சந்தைக்காவும்,மூலதன விரிவாக்கத்திற்காகவும் பயன்படுத்திவருவதை அதன் வரலாற்றில் பார்த்துவருகிறோம்.

தற்போதைய அணு சக்தி தொழில்நுட்பம் வளர்ச்சிப் பெற்ற யுகத்தில், அது தனது அணு தொழில்நுட்பத்தை மூன்றாம் உலக நாடுகளில், குறிப்பாக அரை- தொழில்மய (semi-industrialized) நாடுகளின் தலையில் கட்டுகிறது.

அணு உலைகளை பெறுகிற இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள், தொழில்மய வளர்ச்சிக்கு,புவி வெப்பமயமாக்கல் சிக்கலுக்கு இதைத் தீர்வாக முன்மொழிந்து, தனது ஏகபோக ஊடக அடிவருடுகளின் ஊடாக கருத்தியல் மேலாண்மையை மேற்கொள்கிறது. சமூகத்தின் பொது புத்தியில் ஊடுருவுகிறது.

மொத்தத்தில், டோஷிபா, வெஸ்டிங்ஹவுஸ், அரிவா, ரோசடாம் போன்ற நிறுவனங்களின் மூலதன விரிவாக்கத்திற்கும், ஊடுருவலுக்கும், சுரண்டலுக்கும் ஏற்ப ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டுள்ளது மோடி அரசு.

ஆற்றல்துறையில் தற்சார்பை அழித்தொழிக்கிற அணுக்காலனிய யுகத்தில் இது நாட்டை தள்ளியுள்ளது.

மோடியின் இந்து தேச பக்த கும்பல்கள் இந்த அயோக்கியத் தனத்தை வளர்ச்சியென்று பிதற்றுகிற நகைச்சுவையை வேறு பார்த்து துலைக்கவேண்டும்!!!

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.