உடலளவிலும், மனதளவிலும் முதல்வர் ஜெயலலிதா திடமாக உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார். சென்னையில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோய்த்தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது அவருக்கு இயன்முறை மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மருத்துவ நிபுணர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது உடலளவிலும், மனதளவிலும் அவர் திடமாக உள்ளார். சாதாரண உணவுகளை உட்கொள்கிறார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவரை சாதாரண வார்டுக்கு மாற்றுவது என்பது நோய்க்குத் தீர்வு அல்ல. எனினும் அவரின் சவுகரியத்தைப் பொருத்து சாதாரண வார்டுக்கு மாறுவது குறித்து முதல்வரே தீர்மானிப்பார். எந்த நாளில் முதல்வர் வீடு திரும்புவது என்பது குறித்தும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றார் அவர்.
52-ஆவது நாளாக சிகிச்சை: உடல் நலன் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை நிபுணர் குழுவினர் முதல்வருக்கு தொடர்ந்து 52-ஆவது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.