அருண் நெடுஞ்செழியன்

நிலவுகிற தாராளமய பொருளாதார கட்டத்தில் (அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன்) ஏகாதிபத்தியத்தின் மூலதன விரிவாக்கத்திற்கான சுரண்டல் உச்சத்தை அடைந்துள்ளது. உலகம் தழுவிய அளவில் குறிப்பாக ஆசியா, இலத்தீன் அமெரிக்கா போன்ற அரை தொழில்மய மூன்றாம் உலக நாட்டு மக்களும், ஆப்பிரிக்கா போன்ற மிகவும் வறிய நிலையிலான விளிம்பு நிலை நாட்டு மக்களும் இந்த சக்திகளால் சுரண்டப்படுகிறார்கள். பஞ்சம், வேலைவாய்ப்பு இழப்பு,இயற்கை வள இழப்புகள் என முரண்பாடுகள் தீவிரமாகின்றன.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக நிறுவனங்கள் உலகளாவிய அளவில் ஒட்டுமொத்தமாக இந்த உலகின் உற்பத்தியை கட்டுப்படுத்துகின்றன. ஏகாதிபத்திய மூலதனம் உலகளாவிய தன்மை பெறும்போது, அதனால் பாதிக்கப்படுகிற,சுரண்டப்படுகிற உழைக்கும் மக்கள் ஏன் உலகளாவியத் தன்மை பெறக்கூடாது?

இதை செய்யத் தவறுவதால் தானே இன வெறியும், மத வெறியும்தான் சிக்கலுக்கு காரணம் என மடை மாற்றப் படுகிறார்கள்?இஸ்லாம் விரோத, மெக்சிகோ நாட்டு அகதிகளை வெறுக்கிற இனவெறி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் வெற்றி பெற முடிகிறது, பிரான்சில் லீ பென் செல்வாக்கு பெற முடிகிறது?

தமிழகத்தின் முரண்பாடுகள் உலகளாவிய ஏகாதிபத்திய மூலதன விரிவாக்கத்தின் பகுதியாகவே நடக்கிறது.பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாகவும் உள்நாட்டு முகவன் நிறுவனங்கள் ஊடாகவும் ஜார்கண்டிலும் வளத்தை சுரண்டுகிறது,தமிழகத்திலும் சுரண்டுகிறது. கூடங்குளத்திலும் அணு உலை கட்டுகிறது, ஜைதாபூரிலும் கட்டுகிறது. மறைமலை நகரிலும் பன்னாட்டு தானுந்து நிறுவனங்கள் உழைப்பை சுரண்டுகிறது, கொர்கானிலும் சுரண்டுகிறது. தமிழனத்தை மட்டும் ஏகாதிபத்திய சக்திகள் அழிக்கவில்லை, ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனங்களையும் ஒடுக்குகிறது. அழிக்கிறது. இயற்கை வளத்தை சூறையாடுகிறது.

முரண்பாடுகளுக்கு காரணம் ஏகாதிபத்திய சக்திகள், அவர்களின் ஆலோசனைகளில் செயல்படுகிற பன்னாட்டு நிதியகம், உலக வங்கிகளில் கொள்கைகள், இதை ஏற்று நடைமுறைப் படுத்துகிற மோடியின் அரசு இயந்திரம்.

பிரச்சனை: ஏகாதிபத்திய சுரண்டல்-அதை நடை முறைப் படுத்துகிற மோடியின் அரசு-மக்களைதிசை திருப்ப மேலாண்மை செய்யப் பயன்படுகிற பாகிஸ்தான் விரோத இந்து தேசியம் பாசிசம், அதற்கு வால் பிடிக்கிற சீர்திருதல்வாத பிராந்தியக் கட்சிகள்.

ஏகாதிபத்திய சக்திகளின் அடிபொடியாக இருக்கிற மோடியின் அரசை தூக்கி எறிய இந்திய தேசிய இனங்கள், உழைக்கும் மக்கள் ஒன்று பட வேண்டுமே ஒழிய, அண்டை இனங்கள் நமது சிக்கலுக்கு காரணம் என மடை மாற்றுகிற இனவாத சக்திகளிடம் சிக்கிவிடக் கூடாது.

ஏனெனில் சிக்கலுக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக, உண்மையாக புரிந்துகொள்ள எடுத்துகொள்கிற நேரத்தில், இனவெறி சக்திகள் வெகு சீக்கிரத்தில் உணர்வு மட்ட அளவில் புரிந்துகொள்ளக்கூடிய எதிரியை கட்டமைக்கின்றனர்.

நமது அனைத்தும் தழுவிய பிரச்சனைக்கு சௌராஷ்ற்றக்காரன், மலையாளி, வடுகன், கன்னடன்தான் காரணம் இத்தியாதி இத்தியாதி. அனைத்து இனங்களிலும் குட்டி முதலாளிகள், மக்களை சுரண்டுவது என்ற முரண்பாடு இந்த இனவாதிகள் பூதாகரமாக்கப்பட்டு பின்னாலுள்ள ஏகாதிபத்திய, இந்திய எடுபிடி, பிராந்திய எடுபிடிபூதத்தை மறைக்கிறார்கள்.

அரசை எதிர்ப்பதாக மாய்மாலம் காட்டிக்கொண்டே இனவாத வெறுப்பரசியலை பற்ற வைத்து குளிர்காய்கின்றனர். சொல்லிவைத்தாற் போல அரசை எதிர்ப்பதை விட, இந்த கும்பல்கள் கம்யூனிஸ்டுகளையே எதிர்க்கின்றனர்.
அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்கு பாடுபட்டு பொலிவிய விடுதலைக்கு உயிரை தியாகம் செய்த சே குவாரவின் மானுட விடுதலை தாக மரபில் வந்த கம்யூனிஸ்டுகள் நமது இனவாத கும்பல்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள்.

அவர்களின் இனவாத அடையாள அரசியலில், மக்கள் செல்லாமல் காத்திடுகிற பொறுப்பும் கடமையும் இன்று கம்யூனிஸ்டுகளிடமே உள்ளது.

தமிழகத்தில் எழுச்சி பெறுகிற கம்யூனிச பூதத்தை எதிர்கொள்ள, இந்த இனவாத கும்பல்கள், சீரழிந்து போன திராவிடக் கட்சி குழுக்கள், மார்க்சியத்தை கைவிட்டோடிய உதிரி பின் நவீனத்துவ வாதிகள், NGO சூழலியல், தலித் அடையாள அரசியல் சக்திகள் ஓர் புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.