“ரூ. 500, 1000 நோட்டுகள் தடை பிரச்னையால் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது; ஆனால், நிதியமைச்சர் ஒரு அறிவிப்புகூட வெளிவிடவில்லை” என தெரிவித்துள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“ஒரே இரவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு, நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி மற்றும் கருப்பு பண ஒழிப்புக் கண்ணோட்டதிலானது என்று சொல்லப்பட்டதால் ஓரளவுக்கு வரவேற்கப்பட்ட நிலையில், இந்த திடீர் நடவடிக்கையால் உடனடியாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தான். தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சம்பாதித்தபணத்தைத் தவிர வேறெந்த வருமானமும் இல்லாத இந்த அப்பாவி மக்கள் கடந்த 4 நாட்களாக, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இதனை சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் நேரடியாகக் காண முடிகிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் குறிப்பிட்ட அளவே கிடைக்கின்றன. புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்றளவிலும் கிடைக்கவில்லை. எனவே ஏழை-நடுத்தர மக்கள் சில்லறை தட்டுப்பாட்டால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வங்கிகளிலும் ஏ.டி.எம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. அப்படி காத்திருந்தும் அவர்களுக்குத் தேவையான அவர்களுடைய பணத்தைப் பெற முடியாத நிலை இருக்கிறது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தின் லாரிகள், புதிய ரூபாய் நோட்டுகள் இல்லாமையால், சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.பெரும்பலான ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆயிரக்கணக்கான பெட்டிக் கடைகளிலும், சிறுவணிக நிறுவனங்களிலும் எவ்விதப் பரிவர்த்தனையும் இல்லை. எங்கு பார்த்தாலும் முடிவில்லாத நீண்ட நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் ஏக்கத்தோடும் கோபத்தோடும் ஏமாற்றத்தோடும் நெடுநேரம் காத்துக் கிடக்கும் அவதி. பிரதமர் மோடி ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, இங்கே இந்தியாவே கியூ வரிசையில் வியர்க்க விறுவிறுக்க மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழகமும் இப்படித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு சார்பில் மக்களின் வசதிக்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. முதலமைச்சரின் இலாகாக்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிதியமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து, மக்களுக்கு மாநில அரசு எந்தெந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்த அறிக்கை எதுவும் வரவில்லை. அரசு நிர்வாகத்தில் இனம்புரியாத வெகுநீண்ட அமைதியே நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் பேருந்து பயணம் தொடங்கி, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஏழை-நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்டுள்ள இந்த மோசமான பாதிப்பு குறித்து மாநில அரசு அக்கறை செலுத்தவே இல்லை என்பதற்கு உதாரணமாக, ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 3000 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது வழக்கம். கடலுக்கு செல்லும் போது டீசல், ஐஸ்கட்டி போன்றவற்றை வாங்கிச் செல்வதற்காக 30ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும், அவற்றை வாங்குவதற்கு ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீன்பிடி தொழிலில் தரம் பிரிப்பது, பதப்படுத்துதல், சுமை தூக்குதல் உள்ளிட்ட வேலைகளை செய்வதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 10ஆயிரம் ஆகும். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் இவர்கள் அனைவருக்குமே கடந்த 4 நாட்களாக கூலி கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சிரமங்களுக்கு நடுவே அவர்கள் பிடித்து வரும் மீன்களைக் கொள்முதல் செய்வதற்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் அண்மை நாட்களாக மிகவும் குறைந்து போயுள்ளது. காரணம், வியாபாரிகளிடமும் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தான். இதனால் மிகக் குறைந்த விலைக்கே மீன்களை விற்க வேண்டிய அவல நிலைக்கு மீனவர்கள் ஆளாகியுள்ளனர்.

உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தாலும் அதற்குரிய விலை கிடைக்காமலும், பணத் தட்டுப்பாட்டினால் கூலி கொடுக்க முடியாமலும் தவிக்கும் மீனவர்கள், இந்தப் பிரச்சினை தீரும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று (நவ.12) முதல் ஈடுபடுவதாக மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களுக்கு தற்போது இந்திய அரசின் பொருளாதார தாக்குதலும் அதைக் கண்டுகொள்ளாத தமிழக அரசின் அலட்சியப் போக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழக மீனவர்களின் இந்த அவல நிலையைப் போக்கும் வகையில், மாநில அரசும் அதன் மீன்வளத்துறையும் தூக்கத்திலிருந்து விழித்து, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மீன்களை கொள்முதல் செய்து, மீனவர்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அதன் காரணமாக, மீனவத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்கவும் உடனடியாக வழிவகை காண வேண்டும். ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் முடங்கிக் கிடக்கும் மீனவர்கள் போலவே விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்களின் என அனைத்து தரப்பினரின் நலன் காக்க தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு, பேரிடர் கால செயல்பாடுகளுக்கு இணையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். ”