சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், துணை நடிகையான சபர்ணாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சபர்னா. பின்னர் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்க விஷால், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான பூஜை படத்திலும், காளை படித்திலும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

சபர்ணாவின் குடும்பத்தினர், சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். சபர்ணா, மதுரவாயலை அடுத்த சீமாத்தம்மன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சபர்ணா வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். போலீசார் சபர்ணாவின் வீட்டை வந்து பார்த்த போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சபர்ணாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. சபர்ணா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகி அக்கம்பக்கம் வரை துர்நாற்றம் வீசியுள்ளதால் சபர்ணா இறந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கும் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.