உழவுக் கருவி வாங்குவதில் நடந்த ரூ.38 கோடி ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆக்டபசின் கரங்களைப் போன்று நீளும் தமிழக ஆட்சியாளர்களின் ஊழல் உழவுக் கருவிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் எனப்படும் உழவுக் கருவிகளை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன.

வேளாண் தொழிலை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக உழவர்களுக்கு மானிய விலையில் உழவு எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏர் உழுவதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பவர் டில்லர் எனப்படும் உழவுக் கருவிக்கு அதிக தேவை இருப்பதால், அக்கருவிகள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியுடன் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.இந்த கருவியின் மொத்தவிலையில் 40% மானியமாக வழங்கப்படுகிறது. பவர் டில்லர் விற்பனையாளர்களிடம் அக்கருவிக்கான விலைப்புள்ளியை வாங்கி வேளாண் அதிகாரிகளிடம் விவசாயிகள் விண்ணப்பித்தால் தகுதியுடையவர்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த மானியம் அரசிடமிருந்து விற்பனையாளருக்கு நேரடியாக வழங்கப்பட்டு விடும் என்பதால், மீதமுள்ள தொகையை மட்டும் விவசாயிகள் ரொக்கமாகவோ, வங்கிக் கடன் பெற்றோ செலுத்தி பவர் டில்லர்களை எடுத்துச் செல்லலாம் என்பது தான் நடைமுறை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் காம்கோ, வி.எஸ்.டி. சக்தி ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பவர் டில்லர்கள் தரமானவை என்பதால் அவற்றை வாங்குவதற்கே விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள். கடந்த காலங்களில் இந்நிறுவனங்களின் பவர் டில்லர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உழவர்களால் வாங்கப்பட்டன. ஆனால், நடப்பாண்டில் இந்திய தயாரிப்பு பவர் டில்லர்களை வாங்குவதற்கு பதிலாக, சீனத் தயாரிப்பு பவர் டில்லர்களை வாங்கும்படி உழவர்களை வேளாண்துறை அதிகாரிகள் கட்டாயப் படுத்தி வருகின்றனர். சீன தயாரிப்பு பவர் டில்லர்களை வாங்குபவர்களுக்கு மட்டும் தான் மானியம் வழங்க வேண்டும் என்றும், இந்தியத் தயாரிப்பு டில்லர்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்றும் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு ஆணையிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய தயாரிப்பு டில்லர்களின் சந்தை விலை ரூ.1.65 லட்சம் ஆகும். மானிய விலைத்திட்டத்திலும் இதே விலைக்கே அவை விற்கப்படுகின்றன. இவற்றுக்கு ரூ.66 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்பதால், அதுபோக ரூ.99,000 செலுத்தி இந்த பவர் டில்லர்களை விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், சீனத் தயாரிப்பு பவர் டில்லர்கள் ரூ.1.56 லட்சம், ரூ.1.61 லட்சம் என இரு வகைகளில் மானிய விலையில் விற்கப்படுகின்றன. இவற்றுக்கு அரசின் மானியமாக ரூ.65,000 வழங்கப்படுகிறது. மானியம் போக இவற்றை முறையே ரூ. 91,000, ரூ.96,000 செலுத்தி உழவர்கள் வாங்கிக் கொள்ளலாம். திருச்சியைச் சேர்ந்த கவி அக்ரோ என்ற நிறுவனமும், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்த கிராந்தி என்ற நிறுவனமும் சீனாவிலிருந்து இவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றன. இவற்றுக்குத் தரப்பெயர் கிடையாது என்பதால் நிறுவனத்தின் பெயரிலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன.

சீனத் தயாரிப்பு பவர்டில்லர்களின் அதிகபட்ச விலை முறையே ரூ.1.56 லட்சம், ரூ.1.61 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் சந்தை விலை ரூ.46,000 மட்டுமே. அவை தரம் குறைந்தவை என்பதால் மிகக்குறைந்த விலைக்கு சந்தையில் கிடைத்தாலும் இதை யாரும் வாங்குவதில்லை என்று உழவர்கள் கூறுகின்றனர். ஆனால், மானியவிலைத் திட்டத்தின் கீழ் இந்த டில்லர்கள் ரூ.1.61 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் உண்மையான மதிப்பை விட ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம் வரை கூடுதல் விலைக்கு தங்கள் தலையில் கட்டப்படுவதாக உழவர்கள் கூறியுள்ளனர். இதில் ஒவ்வொரு பவர் டில்லருக்கும் ரூ.95,000 வீதம் அமைச்சர் மூலம் மேலிடத்திற்கு தரப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்திற்கு சராசரியாக 100 டில்லர்கள் வீதம் 3000 முதல் 4000 பவர் டில்லர்கள் வழங்கப்படவுள்ளன. அந்தவகையில் சராசரியாக ஒரு பவர் டில்லருக்கு ரூ.1.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 44 கோடி உழவர்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதில் ரூ.38 கோடி அமைச்சருக்கும், அவருக்கு மேல் இருப்பவர்களுக்கும் கையூட்டாக கிடைக்கிறது.

சீன பவர் டில்லர்கள் தமிழகத்திற்கு ஏற்றதல்ல. அவை அடிக்கடி பழுதடைவதுடன், கடினமான நிலங்களை உழும்போது சேதமடைந்து விடும் ஆபத்தும் உள்ளதாக உழவர்கள் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக தரமான இந்தியத் தயாரிப்பு பவர் டில்லர்கள் கிடைக்கும் போது சீனத் தயாரிப்பை வாங்கும்படி அமைச்சர் கட்டாயப்படுத்துவது ஏன்? எனத் தெரியவில்லை. இதனால் உழவர்களுக்கு பண இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன. இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுனரும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை ஏற்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆணையிட வேண்டும். உழவர்களுக்கு இந்திய தயாரிப்பு டில்லர்களையே வழங்க வகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.