மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 3 நாள் சிறப்பு மாநாடு நெல்லையில் நவம்பர் 12 முதல் நடந்துவருகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச்செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இரண்டாம் நாளான 13 நவ. அன்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சாதாரண மக்கள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ள எவ்விதத் தயாரிப்பையும் செய்யாமல் மத்திய அரசு மக்களைத் திண்டாடவிட்டிருக்கிறது. அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன; அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை; சம்பளம் வழங்குவதில் சிரமம் நிலவுகிறது. சகஜ நிலை திரும்ப இன்னும் 3 – 4 வாரங்கள் ஆகும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நடவடிக்கை உண்மையிலேயே கருப்புப் பணத்தை மீட்டெடுக்க உதவாது என்பதுடன், சாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்குவதாகவும் அமைந்திருக்கிறது. இச்சூழலில், மாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும்வரை, பழைய ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் ஏற்று 16.11.2016 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் வாய்ப்புள்ள பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.