தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்ததாகக் கூறி சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விஷாலைத் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:

தயாரிப்பாளர் திரு.விஷால் அவர்கள் கடந்த 17/08/2016 அன்று ஆனந்த விகடன் வார இதழில் அளித்த பேட்டி சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது. மேலும், இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்து கொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 02.09.2016 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில், திருப்தியாக அமையாத பட்சத்தில், செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, சங்கவிதி எண் 14-D-யில் உள்ளபடி M/S Vishal Film Factory நிறுவனத்தின் உரிமையாளர் திரு.விஷால் அவர்கள் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் (14.11.2016) தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள விஷால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதம் தனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் யாருக்கும் எதிராக தான் செயல்படவில்லை என்று கூறிய விஷால், வார இதழுக்கு தான் அளித்த பேட்டியில் தவறாகவோ, யாரையும் புண்படுத்தும் நோக்கிலும் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தங்களது அணி போட்டியிடும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.